என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், ஜனவரி 29, 2014

18 கலைஞர் ஒரு கட்சித்தலைவரா? அல்லது குடும்பத்தலைவரா- ஒரு அலசல்......



மகனா கட்சியான்னு வரும்போது கலைஞர் தன் மகனென்றும் பாராமல் அழகிரியை தூக்கி வீசிவிட்டு கட்சிதான் முக்கியம் என்று உணர்த்திவிட்டாராம். உடன்பிறப்புக்கள் புளகாங்கிதம் அடைகிறார்கள். மகன் முக்கியமில்லை கட்சிதான் முக்கியமென கலைஞர் நினைத்திருந்தால் தா.கி. கொலை வழக்கில் அழகிரி சிக்கியபோதே அவரை தூக்கி வீசியிருக்கனும். அல்லது தினகரன் சர்வே பிரச்சினையின் போதாவது தூக்கி எறிந்திருக்க வேண்டும். அட்லீஸ்ட் செயல்படாத மத்திய அமைச்சராக இருந்த போதாவது தூக்கி வீசியிருக்க வேண்டும். மாறாக, அப்போதெல்லாம் கழக தலைவர் என்பதை கலைஞர் மறந்து அழகிரியின் அப்பாவாகத்தான் நடந்து கொண்டார் என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.




ஒரு மகனுக்கு பொருளாளர் பதவி என்றால் இன்னொரு மகனை சமாதான படுத்த தென் மண்டல செயலாளர், ஒரு மகனுக்கு துணை முதல்வருன்னா அனுபவமே இல்லாத இன்னொரு மகனுக்கு மத்திய அமைச்சர் பதவின்னு தந்தையாகத்தான் நடந்துகொண்டார் கலைஞர் கட்சித்தலைவர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி, தென்மண்டல அமைப்பு செயலாளர் என்ற பதவியை அழகிரிக்காவே உருவாக்கியதாக சமீபத்தில் வாய் திறந்தார். வட மண்டல செயலாளர் என்றோ, கிழக்கு மண்டல செயலாளர் என்றோ, மேற்கு மண்டல செயலாலர் என்றோ மத்திய மண்டல செயலாளர் என்றோ வேறு எந்த மண்டலத்திற்கும் செயலாளர் பதவி இல்லாத போது தென் மண்டலத்திற்கு மட்டும் செயலாளர் பதவி என்பதே அழகிரி தன் மகன் என்பதற்காகத்தானே? சரி......தென் மண்டலத்தில் இதற்கு முன் இப்படிப்பட்ட பதவி இருந்து அதில் காவேரி மணியனோ, பொன் முத்தோ, பழனிவேல்ராஜனோ இருந்திருந்தால் கூட இப்போது அழகிரி அந்த பதவியை தொடர்ந்தார் எனலாம். அதற்கும் வழியில்லை.

தினகரன் சர்வே பிரச்சினையில் மாறன் குடும்பத்திற்கும், கலைஞர் குடும்பத்தினருக்கும் பிரச்சினை வந்து தயாநிதி மாறன் பதவி விலகிய போது டெல்லியில் லாபி செய்ய அப்போது தேவைப்பட்டது கனிமொழிதானே தவிர, கட்சியை வளர்க்க பாடுபட்ட கடைசி தொண்டர் அல்ல.....கனிமொழி கழகத்தலைவர் மகள் என்பதற்காக பதவி பெற்றாரா? அல்லது களப்போராளி என்பதற்காக பதவி பெற்றாரா என்று உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.




இப்போது கூட அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் வாரிசுப்போர் என்றதும் ஒரு கட்சியின் தலைவராக இரண்டு பேரையும் சமாதானப்படுத்தியிருக்கணும். அல்லது உங்கள் இரண்டு பேரால்தான் அண்ணா ஆரம்பித்த இயக்கத்திற்கு கெட்ட பெயர் என்று அவர்களை கட்சியிலிருந்து இடைக்கால நீக்கம் செய்திருக்க வேண்டும். இப்படி செய்திருந்தால் அவர் கட்சித்தலைவராக செயல்பட்டார் என்று சொல்லலாம். மாறாக, அழகிரியை மட்டும் தூக்கி வீசிவிட்டு ஸ்டாலினை தன் பக்கத்தில் வைத்திருக்கும்போதே தெரியவில்லை கலைஞர் ஸ்டாலினுக்கு அப்பாவாகவும், அழகிரிக்கு கட்சித்தலைவராகவும் இரட்டை குதிரையில் சவாரி செய்து இப்பவும்ஒரு மகனை காப்பாற்றிதான் இருக்கிறாரென்று.....ஆனாலும், இன்று ஸ்டாலினை கலைஞர் அரவணைக்க காரணம் இல்லாமலில்லை. ஸ்டாலின் திணிக்கப்பட்ட தலைவராக இருந்தாலும், பின்னர் தகுதியை வளர்த்துக்கொண்ட தலைவரும் கூட. கலைஞருக்கு இணையாக தமிழகம் முழுவதும் சுற்றி தொண்டர்களின் ஓட்டை கவரும் முகம். அழகிரி கலைஞரின் மகனாக தொண்டர்களால் அறியப்பட்டாலும் அவரின் செல்வாக்கு என்பது மதுரையை சுற்றித்தான். ஆனால், தமிழகம் என்பது மதுரை மட்டுமல்ல......

முரசொலி மாறன் தவிர்த்து அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன் என்று கலைஞரின் இத்தனை குடும்ப அரசியலையும், குடும்ப திணிப்பையும் தொண்டர்கள் சகித்துக்கொண்டதற்கு காரணம், எம்.ஜி.ஆர்.,வைகோ போன்றவர்களால் தி.மு.கழகம் எத்தனையோ பிரிவுகளையும், பிளவுகளையும் சந்தித்தாலும் கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்தியதற்கு நன்றிகடனாகத்தான். இதுவே வேற ஆள் தலைமையில் இந்தக்கட்சி இருந்திருந்தாலும் இந்நேரம் காணாமல் போயிருக்கும். அடுத்ததாக, ஸ்டாலினை தொண்டர்கள் ஏற்றுக்கொண்டதற்கு காரணம், இந்திய அரசியலிலேயே எமெர்ஜென்சியின் போது ஒரு முதலமைச்சரின் மகன் உதை பட்டார் என்றால் அது ஸ்டாலினாகத்தான் இருக்கும். இத்தனைக்கும் அவர் புது மாப்பிள்ளை. அன்று அவர் மேல் விழுந்த அடிகளை மட்டும் அப்போதைய சென்னை மேயர் சிட்டிபாபு குறுக்கே விழுந்து தடுக்கவில்லை என்றால், இப்போது ஸ்டாலின் என்ற ஒருவர் இல்லாமலேயே போயிருக்கலாம்....அத்தனை அடி உதைகளை தாங்கித்தான் இன்று உயர்ந்திருக்கிறார். அந்த தியாகத்திற்காகத்தான் அவரை தொண்டர்கள் குடும்ப அரசியலை மீறி ஏற்றுக்கொண்டார்கள். அதற்காக அழகிரியையும், கனிமொழியையும், மாறனையும் தொண்டர்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ன?





இறுதியாக கலைஞருக்கு ஒரு வேண்டுகோள்.....தெரிந்தோ தெரியாமலோ கட்சிக்குள்ளும் குடும்பத்துக்குள்ளும் ஒரு கலகத்தை ஆரம்பித்து வைத்துவிட்டீர்கள். இதே குழப்பத்தோடு குழப்பமாக தலைவராக ஸ்டாலினை உடனே நியமித்தால் தான் திமுக தமிழகத்தில் அதிமுகவுக்கும் வளர்ந்து வரும் புதிய கட்சிகளுக்கும் பலமான போட்டியைக் கொடுத்து இளைஞர்களின் வாக்குகளைக் கவர முடியும். ஏனெனில் தி.மு.க.,வை பொருத்தவரை உங்களுக்கு அப்புறம் வாக்குகளை கவரும் சக்தி ஸ்டாலினுக்குத்தான் இருக்கிறது. இனி உங்களால் பழையபடி பிரச்சாரத்திற்கு அலைய முடியாது. உங்கள் உடல்நிலையும் அதற்கு ஒத்துழைக்காது. ஆகவே நீங்க இருக்கும்போதே அவரை தலைவராக அறிவிப்பதுதான் இப்போது கட்சிக்கு நல்லது. அவசியமும் கூட...........



Post Comment

இதையும் படிக்கலாமே:


18 கருத்துகள்:

  1. ஸ்டாலின் குடும்ப வாரிசு அல்ல..ஆனால் மற்றவர்கள் குடும்ப வாரிசுகள் தான் என்பதை நச்சுன்னு சொல்லிட்டீங்க.

    பதிலளிநீக்கு
  2. கலைஞர் அதிகாரத்தை இப்போதே ஸ்டாலினிடம் கொடுக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர் இருக்கும்வரை, அவரே தலைவராக நீடிப்பது தான் நியாயம் + பாதுகாப்பு(!). தெளிவாக ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்று காட்டிவிட்டார். இதற்கு மேல் என்ன வேண்டும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் இருக்கும் போதே இத்தனை குழப்பம் என்றால், அவருக்கு பிறகு சொத்துப்பிரிவினை போல கட்சிப்பிரிவினையும் நடத்தி விடுவார்கள் சிலர். அதனால்தான் அப்படி சொன்னேன்.

      நீக்கு
  3. 2006 வரை அரசியல் தலைவராக இருந்தவர், அதன்பின் குடும்பத்தலைவராகவும் ஆகி விட்டார்.

    பதிலளிநீக்கு
  4. "அவர் உடல்நலம் தேறி வந்தால், முதல்வர் பதவியை அவரிடமே தந்துவிடுகிறேன்" என்று உணர்ச்சி வசனம் பேசி நடித்தவர், "ஐயோ கொல்றாங்களே" என்று ஆக்ஷன் டப்பிங்க் பேசி நடித்தவர், இப்போது கண்ணீர் காட்சியில் தோன்றியுள்ளார்! இதுவும் மாறும். ஆல் பார்ட் ஆஃப் த கேம்.
    எல்லாம் மாறும்!
    வெகுவிரைவில் "பனிக்கும் ... இனிக்கும்..."

    பதிலளிநீக்கு
  5. ஸ்டாலின் பதவிக்காக செதுக்கப்பட்டவர். ஆனா மற்றவர்கள் திணிக்கப்பட்டவர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செதுக்கப்பட்டவர்தான் ஆனால், கலைஞரால் அல்ல. காலத்தால்.

      நீக்கு
  6. Congress & DMK has to be abolished from TN since they betrayed tamil people at Srilanka

    பதிலளிநீக்கு
  7. நல்லதொரு ஆய்வு மற்றும் நடுநிலை விமர்சனம்.... நன்றி நண்பரே.....

    பதிலளிநீக்கு
  8. தெளிவான பார்வையில் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. தலைமையை இப்பொதே மாற்றுவது என்பதும் சரிதான். ஆனால்...நடக்குமா?.

    பதிலளிநீக்கு
  9. மன்னர் காலத்து பதவிச் சண்டையை
    ஜனநாயகக் காலத்திலும் தொடர்வதும்
    அதில் சூத்தக் கத்தரிக்காயில் எது சுமார் சூத்தை
    என ஆராய்ச்சி செய்யும் நிலைமையில்
    நாம் இருப்பதுவும் ,,,,,

    மகன் மூன்று மாதத்தில் இறந்துவிடுவான்
    என மகனாக வீட்டில் நுழைந்து சொன்னதை
    தலைவராகி அடுத்த மகனுக்கு இஜட்
    பாதுகாப்புக் கோருவதும்.....

    அண்ணா பெரியாரின் தியாகங்களை
    தன் குடும்பத்திற்குள் பங்கு போட்டுக் கொள்வதுவும்

    தமிழகம் எந்த யுகத்தில் இருக்கிறது ?

    பதிலளிநீக்கு
  10. பொறுமையாக அழகிரியின் ஆதரவாளர்களை களை புடுங்கிவிட்டுதான் அழகிரியின் பல்லை புடுங்கி இருக்கார் தாத்தா...!

    பதிலளிநீக்கு
  11. அருமையான ஒரு ஆய்வு, அலசல் மட்டுமல்ல மிகவும் நடுனிலையுடன் நேர்த்தியான ஒரு பதிவு!!

    வாழ்த்துக்கள்!! தொடர்கின்றோம்!!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.