என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், பிப்ரவரி 27, 2014

2 பா.ம.க.,வும், தேமுதிகவும்...





அரசியலில் இப்போது விஜயகாந்த் செய்யும் ரோலை கடந்த தேர்தல் வரை பா.ம.க., ராமதாஸ் செய்து வந்தார். தேர்தல் என்று வந்துவிட்டாலே எல்லோர் பார்வையும் அப்போது பா.ம.க.வை நோக்கியே இருக்கும். ராமதாஸ் தி.மு.க.கூட்டணிக்கு போவார். இல்லையில்லை அண்ணா.தி.மு.க.கூட்டணிக்குத்தான் போவார் என்று பத்திரிகைகள் காரண, காரியங்களோடு தன் யூகங்களை கட்டவிழ்த்து விடும். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அன்பு சகோதரியையோ அன்பு அண்ணனையோ பார்த்து பூச்செண்டு கொடுத்து கூட்டணியை உறுதி செய்வார் ராமதாஸ். இதெல்லாம் விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும் வரைதான். தி.மு.க., அண்ணா.தி.மு.க.,விலிருந்து கொஞ்சம் கொஞ்சம் தொண்டர்களை தன் கட்சிக்கு விஜயகாந்த் இழுத்திருந்தாலும் பா.ம.க.விஷயத்தில் மட்டும் தே.மு.தி.க., என்பது மாம்பழத்தை துளைத்த வண்டாய் போனது. 

பா.ம.க., வன்னியர் சங்கமாக இருந்தபோது அவருடன் இருந்த ராமமூர்த்தி, தீரன் போன்றவர்கள் கட்சியிலிருந்து போன போது கூட பா.ம.க.,இவ்வளவு பலவீனம் அடைந்ததில்லை. இப்போதும் தேமுதிக.வின் பலமே பா.ம.க. பெல்ட் எனப்படும் வட மாவட்டங்களில்தான். பா.ம.க.விற்கு மட்டுமே வாக்களித்து வந்த வன்னியர் ஓட்டு வங்கி விஜயகாந்த் கணக்கில் வரவானது. (ஒருவேளை தேமுதிக.,வில் அவைத்தலைவராக பண்ரூட்டியார் இருந்ததால் கூட வன்னிய மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கலாம்) அத்துடன் பா.ம.க., ஓட்டு வங்கியும் சுருங்கியது. விளைவு, பா.ம.க.,வால் முன்பைப்போல சீட்பேரம் நடத்த முடியவில்லை. 



விஜயகாந்த் கடந்த நா.ம.,தேர்தலில் தனித்து நின்று வாங்கிய மொத்த ஓட்டுக்களான 30 லட்சத்தில் 12 லட்ச ஓட்டுக்கள் பா.ம.க., செல்வாக்கான வட மாவட்ட்த்தில் இருந்து தான் கிடைத்தது. அதிலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்ப ஏழு தொகுதிகளில் மட்டும் தலா ஒரு லட்ச வாக்குகளுக்கும் அதிகம் பெற்றது

இந்த தேர்தலும் கூட வாழ்வா சாவா தேர்தலைப்போல்தான் பா.ம.க.,விற்கு. முதன் முதலாக பா.ம.க.,சந்தித்த தேர்தலில் தனியாக ஏறக்குறைய 200 தொகுதிகளில் நின்று ஆறு சதவீத வாக்குகளை பெற்றது. அதன் பின் கூட்டணி பேர அரசியலில் நுழைந்து தன் வாக்கு வங்கியை உயர்த்திக்கொண்டே வந்த பா.ம.க.,விற்கு இறங்கு முகம் என்பது கடந்த நா.ம.,தேர்தலிலும், ச.ம.,தேர்தலிலும் தான். அதேநேரம், கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பா.ம.க.,வின் ஓட்டுக்கள் 20 லட்சத்தை தாண்டி இருந்ததில்லை.

.அதேப்போல விஜயகாந்தும் தனியாக நின்று ச.ம.தேர்தலில் 8 சதவீதமும், அடுத்த நா.ம.தேர்தலில் 10 சதவீதமும் பெற்று பலத்தை நிரூபித்து அடுத்த தேர்தலில் அண்ணா.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து 41 இடங்களை பெற்று அதில் 29 இடங்களில் ஜெயித்து எதிர்கட்சி ஆனார். அவரின் ஓட்டு வங்கி கொடுத்த தைரியத்தில்தான் இப்போது ராமதாஸ் வழியை விஜயகாந்த் பின்பற்றி சீட் பேர அரசியலை கையில் எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.  பாவம் அவரிடம் யாராவது சொன்னால் தேவலை, இந்த சீட் பேர அரசியல் எல்லாம் நீண்ட காலத்துக்கு கை கொடுக்காது என்று.....


Post Comment

இதையும் படிக்கலாமே:


2 கருத்துகள்:

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.