என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், மே 29, 2013

5 தே.மு.தி.க விஷயத்தில் ஜெயலலிதா செய்வது சரியா?





ஒரு மாநிலத்தின் முதல்வரை எதிர்கட்சியினர் தன் தொகுதி நலனுக்காகவும், தனக்கு வாக்களித்த மக்களின் மேம்பாட்டிற்காகவும் சந்திப்பது சகஜம்தான். ஆனால், அது இப்போதல்ல..... முன்பு, அதாவது அரசியல் ஓரளவு நாகரீகமாக நடந்துகொண்டிருந்த கால கட்டத்தில். ஆனால் இப்போது அப்படி சந்திப்பது என்பது தீண்டத்தகாத காரியம் போல் ஆகிவிட்டது தமிழகத்தில். ஆளுங்கட்சியினரை இப்போது ஒரு எதிர்கட்சி எம்.எல்.ஏ.,சந்தித்தாலே ஆச்சர்யமாக பார்க்கப்படும் கால கட்டத்தில், இதுவரை எதிர்கட்சியான தே.மு.தி.க.,வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேர் ஜெயலலிதாவை சந்தித்து தொகுதி வளர்ச்சி(?) பற்றி பேசியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் ஆளுங்கட்சிக்கு விலை போவதும், ஊதுகுழழாக செயல்படுவதும் வழக்கமான ஒன்றுதான். கடந்த ஆட்சியில் மதுரை அண்ணா.தி.மு.க., எம்.எல்.ஏ.,சண்முகம் அப்போதைய அமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியதன் மூலம் ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளாகி கட்சியை விட்டு கட்டம் கட்டப்பட்டு பின்னர் இறந்துபோனார். அதன் பின் அவரின் அடிச்சுவட்டை பின்பற்ற துவங்கினர் சிலர். கோவில்பட்டி அண்ணா.தி.மு.க.,எம்.எல்.ஏ.,ராஜேந்திரனும், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணனும் தி.மு.க.,பொதுக்குழுவிலேயே அண்ணா.தி.மு.க.,கரை வேட்டியுடன் கலந்துகொண்டு பரபரப்பை உண்டாக்கினர்.

கட்சியிலிருந்து சசிகலாவால் ஓரங்கட்டப்பட்ட மயிலாப்பூர் எம்.எல்.ஏ.,எஸ்.வி.சேகர் சட்டசபையில் ஆளும் தி.மு.க.,ஆதரவு நிலையை எடுத்தார். இவர்களையெல்லாம் மிஞ்சும் விதமாக  திருச்செந்தூர் எம்.எல்.ஏ.,அனிதா ராதாகிருஷ்ணன்  அறிவாலயத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். 
அதேபோல் ம.தி.மு.க.,விலிருந்து தொண்டமுத்தூர் எம்.எல்.ஏ.,கண்ணப்பன், கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், திருப்பூர் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,கோவிந்தசாமி போன்றோர்களும் தி.மு.க.,வில் தன்னை இணைத்துக்கொண்டனர்.சரி இதையெல்லாம் விடுங்க....

1991-ஆம் ஆண்டு. காங்கிரசுடன் கூட்டணி போட்டிருந்தார் ஜெயலலிதா. ராஜீவ் காந்தி படுகொலையால் சற்றேறக்குறைய தமிழகத்தின் அனைத்து தொகுதிகளையும் இந்தக்கூட்டணி கைப்பற்றியது. அசுர பலத்துடன் தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார் ஜெயா. எதிர்கட்சியாக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ். நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது கூட்டணி வண்டி. திடீரென என்ன நினைத்தாரோ ஜெயலலிதா.ஒருவேளை ராஜீவ்காந்தி படுகொலையால்தான் இவ்வளவு இடங்களையும் அண்ணா.தி.மு.க.,பிடிக்க முடிந்தது என்ற பேச்சு ஜெயலலிதாவிற்கு எரிச்சலை தந்திருக்க வேண்டும்.

சிலமாதங்களில் மதுரையில் நடந்த அண்ணா.தி.மு.க.,மாநாட்டில் ராஜீவ் ரத்தத்தால் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்று பகிரங்கமாக ஒரு குண்டை தூக்கிப்போட்டு அத்துடன் காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்தார். நேற்றுவரை சட்டசபையில் எதிர்கட்சியாக இருந்த காங்கிரஸ் அதன் பின் எதிரிக்கட்சியாக மாறியது. ஆனாலும் அப்போதும் காங்கிரஸை சேர்ந்த சில எம்.எல்.,ஏ.,க்கள் ஜெயலலிதாவுடன் இணக்கமாகவே இருந்தனர். அவ்ர்களில் முக்கியமானவர்கள் சேப்பாக்கம் எம்.எல்.ஏ.,ஜீனத் சர்புதீன், பேராவூரணி எம்.எல்.ஏ.,சிங்காரம் (இன்னும் இருவரின் பெயர் நினைவில் இல்லை). சட்டசபையில் இவர்கள் அடிக்கும் ஜால்ராவால் இவர்கள் ஜெயா காங்கிரஸ் என்றே அழைக்கப்பட்டனர்.


இப்போதும் அப்படி ஒரு காலம் திரும்புகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. மதுரை மத்திய தொகுதி சுந்தர்ராஜன், திட்டக்குடி தமிழழகன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன், பேராவூரணி நடிகர் அருண்பாண்டியன், செங்கம் சுரேஷ்குமார் அந்த வரிசையில் இன்று சேந்தமங்கலம் சுபா  




இனி இவர்கள் தே.மு.தி.க.,வுடன் இணக்கமாக செயல்பட முடியாது. அதற்கு விஜயகாந்தும் ஒத்துழைக்க மாட்டார். வேண்டுமானால், தனி அணியாக செயல்படலாம். அண்ணா.தி.மு.க.,விலும் இணைய முடியாது. அப்படி இணைந்தால் எம்.எல்.ஏ.,பதவி பறிபோய்விடும். அப்படி பறிபோகாமல் இருக்க வேண்டுமென்றால் இவர்களுடன் இன்னும் சில எம்.எல்.ஏ.க்கள் கை கோர்க்க வேண்டும்.அதாவது ஒரு கட்சியின் ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.க்களில் மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏ.,க்கள் அந்தக்கட்சியிலிருந்து வெளியேறினால் அவர்களின் எம்.எல்.ஏ.,பதவி ஆபத்தில்லாமல் தப்பித்துவிடும்.அதற்கான வாய்ப்பும்  இருப்பதாகவே தோன்றுகிறது. இல்லாத பட்சத்தில் இந்த  எம்.எல்.ஏ.க்கள் அப்படியே பதவியை ராஜினாமா செய்தால் அதன்பின் ஜெயலலிதா இவர்களை கறிவேப்பிலை ஆக்கிவிடுவார். பார்க்கலாம் இனி என்ன செய்யப்போகிறார்கள் என்று?....

அதேநேரம்........மக்களுக்கு இந்த இரண்டு வருஷத்தில எதுவுமே நல்லது நடக்கலேன்னு சொல்லிட்டுத்தானே அங்கே தாவுறாங்க....அப்படின்னா எதிர்கட்சி தொகுதிகளை ஆளுங்கட்சி புறக்கணிக்குதுன்னு இவர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாத்தானே அர்த்தம்?

ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துட்டா அவங்களுக்கு ஓட்டுப்போட்டவுங்க, அவங்களுக்கு ஓட்டு போடாதவுங்க, 49 ஓ போட்டவுங்க, இவ்வளவு ஏன் ஓட்டே போடாதவுங்க எல்லோருக்கும்தானே அவங்க முதலமைச்சரு...அவங்க கட்சி ஆளுங்களும் அந்த தொகுதியில இருப்பாங்கதானே?அப்படி இருக்கும் போது எதிர்கட்சி தொகுதிகளை புறக்கணிக்கறது மாற்றாந்தாய் மனப்பான்மை ஆச்சே? ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கலாமா?


Post Comment

இதையும் படிக்கலாமே:


5 கருத்துகள்:

  1. வணக்கம் கசாலி சார்!நலமா?///இப்போது எங்கே நேர்மையான அரசியல் இருக்கிறது?பிழைப்புக்கான சுலப வழி 'அரசியல்' என்று அரிச்சுவடி ஆகி விட்டதே?

    பதிலளிநீக்கு
  2. அரசாங்கம் என்பது அனைவருக்கு பொது.அனைவரும்தான் வரி செலுத்துகிறோம்

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.