என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், செப்டம்பர் 10, 2013

6 அரசியலில் விஜயகாந்த் கடந்து வந்த பாதை




பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணியின் புண்ணியத்தில் ஒரு சுபயோக சுப தினத்தில் அரசியலுக்கு காலடி எடுத்து வைத்தவர் விஜயகாந்த்.
விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கும், அன்புமணிக்கும் என்ன சம்பந்தம் என்றால்?.....
சம்பந்தம் இருக்கிறது....


ஒரு எம்.பி.-யாக கூட இல்லாத நிலையில் 2004-ஆம் ஆண்டு ,மத்தியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அமையப்பெற்ற அமைச்சரவையில் சுகாதாரத்துறை கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றார் அன்புமணி.
அதன் பிறகே அவசரம் அவசரமாக தி.மு.க. உதவியுடன் ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கப்பட்டார்.


அப்படிப்பட்ட அன்புமணியை எதிர்த்து கொல்லைப்புறம் வழியாக அமைச்சரவையில்  நுழைந்தவர் என்று
விஜயகாந்த் கமண்ட் அடித்தார்.

இது போதாதா பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு?
சும்மாவே சினிமாக்காரர்களுக்கு எதிராக போராடும் பா.ம.க-வினர்களை அந்த பேச்சு உசுப்பேற்றியது. விஜயகாந்தை பழிவாங்க வசதியாக கொஞ்ச நாளில் விஜயகாந்த் நடித்த கஜேந்த்ரா படம் வெளியானது.

இழவு காத்த கிளியாக இருந்த பா.ம.க.வினர்களுக்கு அடித்தது யோகம். ஏற்கனவே ரஜினி நடித்த பாபா திரைப்பட பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடி அனுபவம் பெற்றவர்களுக்கு கஜேந்த்ரா படப்பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடுவது சிரமமாக இருக்கவில்லை.

அப்போது தி.மு.க கூட்டணியில் பா.ம.க -இருந்ததால், தி.மு.க-வும் இந்த விஷயத்தில் அலட்டிக்கொள்ளவில்லை.


இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த விஜயகாந்த்....இனிமேல் நம் படப்பெட்டி ஓடாமல் நம் படம் ஓடவேண்டுமானால் அரசியல் ரீதியாக
நமக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற உத்வேகத்தில் 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள், தான் பிறந்த மண்ணான மதுரையில்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை துவங்கினார். இதுதான் விஜயகாந்தின்  அரசியல் பிரவேசத்திற்கான முன்கதை சுருக்கம்.


அதுவரை தி.மு.க-வின் அனுதாபியாக பார்க்கப்பட்ட விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தது தி.மு.க-தலைமையையும் அதிர வைத்தது.
எம்.ஜி.ஆர் பாதையை தனக்கான பாதையாக வகுத்துக்கொண்ட விஜயகாந்த், கருப்பு எம்.ஜி.ஆர் என்ற பெயரோடு எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் இரத்தங்களையும் கவர ஆரம்பித்தார்.
அது  அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த  ஜெயலலிதாவையும் கடுப்பேற்றியது.


விஜயகாந்தின் கட்சியை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி, பாக்யராஜின் எம்.ஜி.ஆர்.மக்கள் முன்னேற்ற கழகம், விஜய டி.ராஜேந்தரின் தாயக மறுமலர்ச்சி கழகம் போன்றவற்றோடு ஒப்பிட்டு நகைத்தனர் அரசியல் பார்வையாளர்களும், மற்ற கட்சியினரும். ஆனால், நடந்ததோ வேறு....


கட்சி ஆரம்பித்த ஐந்தே மாதங்களில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வந்தது.

அந்த தேர்தலில் 234- தொகுதிகளிலும் யாருடனும் கூட்டணியில்லாமல் சுயேட்சையாகவே   அதிரடியாக வேட்பாளர்களை நிறுத்தினார். அதில் இரண்டு தொகுதியில் வேட்பாளர்கள் விலை போய் விட்டதால் மீதமுள்ள 232- தொகுதிகளில் கேப்டனின் படை வீரர்கள் களம் கண்டனர்.

ஆஹா....இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக ஒருவர் வந்துவிட்டார் என்று தமிழகமே நினைத்தது.  இப்போது பேசுவது போல் அதிரடியாகவெல்லாம் அந்த தேர்தலில் தி.மு.க-வை தாக்கவில்லை. இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றுதான் பிரச்சாரம் செய்தார்.

தி.மு.க.,அண்ணா.தி.மு.க என்று மாறிமாறி ஆட்சியிலமர்த்தி வஞ்சிக்கப்பட்டிருந்த மக்களுக்கும், நடுநிலையாளர்களுக்கும்
அப்போது ஆளுங்கட்சியாக இருந்த ஜெயலலிதா மீது வெறுப்பு கொண்டிருந்த மக்களுக்கும் விஜயகாந்தின் வருகை மிகுந்த சந்தோசத்தை கொடுத்தது.

 இரு கழகங்களுக்கும்   மாற்று சக்தியாக விஜயகாந்தை நினைத்து அவரின் பின்னால் அணி திரண்டனர்...

அவர் காட்டிய வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர்.தேர்தல் முடிவு வந்தது போட்டியிட்ட 232 தொகுதிகளில் விஜயகாந்த் தவிர மீதமுள்ள 231 தொகுதிகளிலும்   தோல்வியை தழுவினார்கள்.

அதேநேரம் 27,64,223 வாக்குகளுடன்   8.32%  சதவிகிதம் பெற்று தனிப்பெரும் சக்தியாக விளங்கி கிண்டலடித்த அரசியல் நோக்கர்களையும்,மற்ற  கட்சிகளையும் வாயடைக்க வைத்தது.


அதன்பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலிலும்   கணிசமான வாக்குகள் வாங்கினார் விஜயகாந்த்.

அதன் பிறகு 2009-ஆம் ஆண்டு நடந்த நாடாளு மன்றதேர்தலில் 30,73,479  வாக்குகள் வாங்கி காட்டி தமிழக அரசியலில் தனக்கான இடத்தை தக்கவைத்தார்.

ஆனால், தொடர் தோல்விகளாலும், பண விரயத்தினாலும்  சோர்ந்து போயிருந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும், கட்சி தொண்டர்களும் கூட்டணி முடிவை நோக்கி நகர்ந்தார்கள். விஜயகாந்த் மனதையும் கரைத்தார்கள்.

2011-நம் லட்சியம், அதை வெல்வது நிச்சயம் என்ற ஸ்லோகத்துடன்  வலம்  வந்த ஒரு முதலமைச்சர் வேட்பாளர்,  அ.தி.மு.க-வுடன் கூட்டணி கூட்டணி வைத்து 41 சீட்களை பெற்றவர், பாரம்பரிய கட்சியான தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி 29 லட்சம் வாக்குகளையும் 29 எம்.எல்.ஏ.,க்களையும் பெற்று யாரும் எதிர்பாராத வகையில் எதிர்கட்சி தலைவரானார்.

2011-சட்டசபை தேர்தலின் போது எழுதிய பதிவு இது...... சிலரின் வேண்டுகோளுக்கிணங்க மீள் பதிவாக........



Post Comment

இதையும் படிக்கலாமே:


6 கருத்துகள்:

  1. இப்போது நிலைமை சற்று தர்மசங்கடம் தான்!

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான்! அரசியல் மாற்றாக கருதப்பட்டவரின் இன்றைய நிலை வருந்த வைக்கிறது!

    பதிலளிநீக்கு
  3. கொஞ்சம் சறுக்கி விட்டார்.எல்லோருக்குமே துணைவியர் பிரச்சினை,மைத்துனர் பிரச்சினை தான்!

    பதிலளிநீக்கு
  4. //இழவு காத்த கிளியாக இருந்த பா.ம.க.வினர்களுக்கு அடித்தது யோகம்.//

    மன்னிக்கவும், இழவு அல்ல, இலவு காத்த கிளி என்பது தான் சரியானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "இலவு அல்லது இலவம் பஞ்சு மரம் (Bombax ceiba) என்னும் தாவரவியற் பெயரால் அறியப்படுகின்றது. இது வெப்பவலயத்துக்குரிய ஒரு மரமாகும்.
      இலவமரம் பூக்கும், காய்க்கும், பழுக்காது, காய் நெற்றாகிவிடும்
      பழம் பழுக்கும், உண்ணலாம் எனக் காத்திருந்தால் கிளி ஏமாந்துபோகும்
      இதனால் இலவு காத்த கிளி போல என்னும் மரபுத் தொடர் உருவாயிற்று"

      நீக்கு
  5. நாம் எதிர்பார்த்தபடியே தேமுதிக, இன்னொரு பாமகவாக ஆகிவிட்டிருப்பதையும் பதிவில் அப்டேட் செய்திருக்கலாம்!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.