என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், ஏப்ரல் 16, 2014

7 வேட்பாளர்களை மறிக்கலாமா?......கஸாலி கஃபே -(16-04-2014)

ஒரு அறிவுரை.....




இப்போதெல்லாம் அந்த அமைச்சர் தாக்கப்பட்டார், இந்த எம்.எல்.ஏ.வை கிராமத்துக்குள் வர விடாமல் மக்கள் தடுத்தனர், அந்த கட்சி தலைவரின் கார் முற்றுகையிடப்பட்டது என்ற செய்திகளை தினந்தோறும் படிக்க நேர்கிறது.
ஒரு அரசியல்வாதி மீது, ஆட்சியாளர் மீது மக்களுக்கு இருக்கும் தார்மீக கோபத்தை காட்ட இது நேரமல்ல. யார் வாக்குக்கேட்டு வந்தாலும் மறுக்காமல் கிராமத்திற்குள் அனுமதியுங்கள். எல்லோர் சொல்வதையும் கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் கோபத்தை வாக்குப்பதிவு அன்று காட்டுங்கள்.


இப்படி வெளிப்படையாக எதிர்ப்பை காட்டி பின்னர் மாட்டிக்கொள்ளாதீர்கள். இப்போது நீங்கள் வெளிப்படையாக காட்டும் எதிர்ப்பு தேர்தலுக்கு பின் உங்களுக்கு ஆப்பாக முடியலாம்.அதிகாரத்தை கையில் வைத்திருப்பதால் அதை பயன்படுத்தி உங்கள் உரிமைகளை பறிக்கலாம், சலுகைகளை பறிக்கலாம், உங்களை அடையாளம் கண்டு பழி வாங்கலாம். இந்த மூன்றில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அல்லது இம்மூன்றுமே நடக்கலாம்.
இப்போது ஆட்சியாளர்கள் புறமுதுகிட்டு ஓடுவது போல் தெரிந்தாலும், பின்னாளில் எதிர்த்தவர்களை அடையாளம் கண்டு முதுகில் குத்த அவர்களுக்கு வாய்ப்பை உருவாக்கி கொடுக்காதீர். உங்கள் எதிர்ப்பை நீங்கள் காட்ட வேண்டியது தேர்தலின் போதுதானே தவிர, பிரச்சாரத்தின் போது அல்ல...

---------------


ஒரு கடுப்பு.....

ஆழ் துளைக் கிணற்றில் இன்றும் ஒரு குழந்தை விழுந்துள்ளது. இந்த பத்து நாட்களில் இது மூன்றாவது சம்பவம். இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. பெற்றோர்களின் அலட்சியமா அல்லது ஆள்துளை கிணற்றை தோண்டிவிட்டு அப்படியே மூடாமல் போட்டுவிட்டு போகும் பணியாளர்களின் அலட்சியமா அல்லது நில உரிமையாளர்களின் அலட்சியமா என்று பார்த்தால், இதில் மேற்சொன்ன மூன்று தரப்பினருக்கும் பங்கிருப்பதாக நினைக்கிறேன். எப்படியோ நேற்று உயிருடன் மீட்கப்பட்ட குழந்தையை போல் இன்றும் இந்தக்குழந்தையும் உயிருடன் மீட்கப்பட என் பிரார்த்தனைகள்.

ஆழ்துளை கிணறுகளை தோண்டிய பின் இப்படி அலட்சியமாக திறந்து போடுபவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்து மிக கடுமையாக தண்டிக்க வேண்டும். ஏனென்றால் ஆழ்துளை கிணறுகள் ஆள் தொலை(யும்) கிணறாக மாறியது இவர்களின் அலட்சியத்தால் தான்.இவர்கள் மீது நடவடிக்கை இல்லாவிட்டால் இம்மாதிரியான நிகழ்வுகள் வாடிக்கையாகிவிடும். ஆட்சியாளர்களே நீங்கள் செய்வீர்களா?, நீங்கள் செய்வீர்களா?, நீங்கள் செய்வீர்களா?

------------

ஒரு வேதனை....


தண்ணீருக்காக தோண்டப்படும் ஆழ் துளை கிணறுகளுக்கும் தாகம் எடுக்கும் போல, அதான் குழந்தைகளின் உயிரை அவ்வப்போது குடித்து தாகத்தை தணித்து 'கொல்'கிறது.

------------------

 ஒரு பதில் 


சே மனுஷ்யபுத்ரனெல்லாம் பிரச்சாரம் செஞ்சு உதவும் அளவுக்கு தி.மு.க.வின் நிலமை கேவலமா போய்விட்டது பாருங்கன்னு சொன்னாரு நமக்கு தெரிஞ்ச நண்பர்.

ஆமாங்க. ஆனால் செந்தில், சிங்கமுத்துவை விட மனுஷ்யபுத்ரனுக்கு விபரம் ஜாஸ்திங்க என்று நான் சொன்னேன். பதில் சொல்லாமல் போயிட்டாரு.
----------------

ஒரு நிஜம்

அரசியலில் சினிமா நுழைவதால்தான்,
சினிமாவில் அரசியல் நுழைகிறது போல...
----------------

ஒரு ஃப்ளாஷ்பேக்....


அப்போதெல்லாம், தேர்தல் நேரத்தில், தி.மு.க., அண்ணா.தி.மு.க., காங்கிரஸ் தலைவர்களின் படமும் சின்னமும் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்களை விற்பார்கள். அந்த ஸ்டிக்கர்களை தண்ணீரில் நனைத்து வெள்ளைச்சட்டையின் மேல் வைத்து அயர்ன் பாக்சை சூடாக்கி ஒரு இழு இழுத்தால் அந்த ஸ்டிக்கரில் இருக்கும் படம் அப்படியே சட்டையில் ஒட்டிக்கொள்ளும். அப்புறம் எப்படி துவைத்தாலும் அது போகாது.

ஒருமுறை நான் ஸ்கூல் யூனிபார்ம் போட்டிருந்தேன். எங்கள் ஊரைச்சேர்ந்த ஒருவர் என்னை அழைத்து இந்த ஸ்டிக்கரை உன் சட்டையில் ஒட்டிக்கிறியா என்று கலைஞர் படம் போட்ட ஸ்டிக்கரை காட்டினார். பார்க்க கலர் புல்லாக இருந்ததால் நானும் சரி என்றேன். இருந்தாலும் ஒரு தயக்கம், காசு கேட்பாரோ என்று. அதை அவரிமும் சொல்லிவிட்டேன். நீ காசு தரவேணாம். சும்மா ஒட்டிக்க என்றார். நானும் ஆர்வத்தில் சட்டையை கழட்டி அவரிடம் கொடுக்க அவர் சட்டை பாக்கெட்டுக்கு நேராக வைத்து ஒட்டித்தந்தார். அப்படியே சட்டையை மாட்டிக்கு வீட்டுக்கு போனால் அங்கேதான் இருந்தது க்ளைமேக்ஸ்.

ஏன்டா இப்படி வெள்ளை சட்டையை கறை செஞ்சுக்கு வந்துருக்கே. இனி துவைச்சாலும் இது போகாதேன்னு திட்டிய என் அம்மா துவைச்சு பிழிஞ்சிடுச்சு, சட்டையை இல்லை என்னை. நல்லவேளையா சட்டை பாக்கெட்டில் ஒட்டியிருந்ததால் பாக்கெட்டை பிச்சிட்டு வேறு ஒரு புது பாக்கெட் தைத்தேன். இந்த அனுபவங்கள் உங்களுக்கு இருக்கா பாஸ்?

-------------

ஒரு ஐடியா...

பொதுக்கூட்டத்துக்கு பந்தல் போட்டு, மைக் செட் கட்டும் காண்ட்ரக்டோடு கூட்டத்துக்கு ஆள் ஏற்பாடு செய்து தரும் காண்ட்ரக்ட்டும் எடுத்து செய்தால் நல்ல காசு பார்க்கலாம். நீங்கள் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

-------------
ஒரு ஜோக்...

சீசன் பிசினஸ் செய்வதில் அந்தாளை அடிச்ச முடியாதுன்னு எப்படி சொல்றே?

தலைவர்கள் பேசும் கூட்டத்துக்கு ஆள் ஏற்பாடு செய்து தருவதற்குன்னு ஒரு கம்பெனி திறந்திருக்காரே

-----------

ஒரு கலாய்ப்பு....

கடந்த வாரம் சட்டமன்றத்தில் அதிக கேள்வி கேட்டவன் நான் தான் - சரத்குமார்#
ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியதெல்லாம் கேள்வியில் சேராது தல

-------------



ஒரு கடுப்பு..

கடந்த வாரம், ராமநாதபுரம் எம்.பி., நடிகர் ரித்தீஷ் தன்னை அண்ணா.தி.மு.க.,வில் இணைத்துக்கொண்டுள்ளார்.
காலம் காலமாக கட்சிக்கு விசுவாசமாக உழைத்தவர்களை ஓரங்கட்டிவிட்டு ரித்தீஷின் பணத்தை பார்த்து சீட் கொடுத்தது தி.மு.க.,. கட்சியில் எத்தனையோ சீனியர்கள் இருந்தும், கட்சிக்கு ஒரு துரும்பும் கிள்ளிப்போடாத பணபலம் படைத்த ஜே.கே.ரித்தீஷ்க்கு பதவி கொடுத்ததன் விளைவை தி.மு.க., அனுபவித்துதான் ஆகனும்

கட்சியில் உழைப்பவர்கள் இன்னும் அந்தக்கட்சியில்தான் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். பணத்தை காட்டி சீட் பெற்ற ரித்தீஷ் போன்ற திடீர் உடன்பிறப்புகள்தான் பதவியை அனுபவித்து விட்டு பறந்து போய்விடுகிறார்கள். அடுத்து நெப்போலியனாக இருக்கக்கூடும்.

இனிமேலாவது கட்சிக்கு உழைத்தவர்களுக்கும், உண்மையான தொண்டர்களுக்கும் சீட் கொடுக்க வேண்டும் என்பதை தி.மு.க.,தலைமை உணர வேண்டிய தருணம் இது.

-----------

சொன்னாலும் சொல்வார்கள்..........


மின் பற்றாக்குறைக்கு மக்களே காரணம், இந்த கோடையை சமாளிக்க ஒவ்வொரு வீட்டிலும் ஏசி ஓடுகிறது. அதிகமதிகம் ஃப்ரிட்ஜ் ஓடுகிறது. கருணாநிதியால் கொடுக்கப்பட்ட டி.வி.யில் கரண்டு இருக்கும் நேரமெல்லாம் நாடகம் பார்க்கிறார்கள். வெயிலின் தாக்கத்தை குறைக்க ஒரு நாளைக்கு இரு முறை குளிக்கிறார்கள். அதற்காக தண்ணீர் மோட்டார் பயன் படுத்தப்படுகிறது. இப்படி கிடைக்கும் சில ஆயிரம் மெகா வாட்டையும் மக்கள் பொருப்பில்லாமல் பயன் படுத்துவதால் மின்பற்றாக்குறை ஏற்பட்டு மின் வெட்டு அதிகரித்துள்ளது.

------------

நான் ஊருக்கு ஊர் ஒரே மாதிரிதான் பேசுகிறேன். இதுக்கு பதில், நான் ஒரு ஊரில் பேசுவதையே வீடியோ எடுத்து எல்லா ஊரிலும் பெரிய ஸ்க்ரீன் கட்டி அதை ஒளிபரப்பினால் போதுமே. மக்களுக்கு அலைச்சல் இல்லை என்று எதிர்கட்சியினர் கிண்டல் செய்கிறார்கள்.

எதிர்கட்சியினர் சொல்வது போல் நான் பேசி அதை உங்கள் ஊரிலேயே ஸ்க்ரீன் கட்டி ஒளிபரப்பினால், உங்களை பார்ப்பதற்கு நான் வரமாட்டேன். நான் வராவிட்டால், உங்களுக்கு வழங்கப்படும் நூறு, இருநூறு ரூபாய், சாப்பாடு பொட்டலம், குவார்ட்டர்னு யார் கொடுப்பார்கள்?, நீங்கள் உங்கள் ஊரிலேயே இருந்தால் உங்களுக்கு இது கிடைக்குமா?, அதனால்தான் ஒரே மாதிரி பேசினாலும் ஊர் ஊரா வருகிறேன். உங்களுக்கு கிடைக்கும் பணம், குவார்ட்டர், பிரியாணி பொட்டலங்களை தடுக்கவே எதிர்கட்சியினர் இப்படி கிண்டலடிக்கிறார்கள்.




Post Comment

இதையும் படிக்கலாமே:


7 கருத்துகள்:

  1. ஆழ்துளை கிணறுகள் எமன்களாகி வருகின்றன! கண்டிப்பான நடவடிக்கை வேண்டும் தான்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. திருத்திட்டேன்.

    பதிலளிநீக்கு
  3. எல்லாம் அரசியல் நெடி!
    காரம் அதிகம்!!

    பதிலளிநீக்கு
  4. அரசியல்... அரசியல்... நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  5. தங்கள் பதிவு வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது! //http://blogintamil.blogspot.in/2014/07/cocktail-fizzy-crissppy.html// நன்றி !

    பதிலளிநீக்கு
  6. மைதிலி கஸ்தூரி ரெங்கன் வலைச்சரத்தில் இன்று தங்களைப் பற்றி விவாதிக்கிறார். தங்களின் பதிவைக் கண்டேன். பல செய்திகளைப் பற்றி விவாதிக்கும் முறை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.