என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், நவம்பர் 09, 2015

1 மோடியை வீழ்த்திய த்ரீ இடியட்ஸ்..



நடந்தது பாராளுமன்ற தேர்தலும் அல்ல, தேர்ந்தெடுக்கப்பட்டது பிரதமரும் அல்ல.தோற்றால் பிரதமர் பதவியே காலியாகிவிடும் என்ற நிர்பந்தமோ வாழ்வா சாவா பிரச்சினையோ கூட இல்லை.  பீகார் என்ற ஒரு மாநிலத்தில் நடந்த தேர்தல்தான் இது. ஆனாலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இணையான பிரச்சாரம் நடந்தது. ஜாலியாக உலகம் சுற்றிக்கொண்டிருந்த மோடி அப்படி சுற்றுவதை தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு பீகாரை சுற்றினார். ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்கள். லாலு- நிதிஷ்- சோனியா(ராகுல்) ஆகியோரை த்ரீ இடியட்ஸ் என்று பிரச்சாரத்தால் வறுத்தார் மோடி. தேர்தல் முடிவுகளும் கூட பாராளுமன்ற தேர்தலுக்கு இணையாகத்தான் எதிர்பார்க்கப்பட்டது.
அப்படி எதிர்பார்ப்பதற்கும் காரணமில்லாமல் இல்லை. ஏறக்குறைய டெல்லி தேர்தலுக்கு அப்புறம் நடக்கும் சட்டமன்ற தேர்தல் இது. வரிசையாக நிறைய இடங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும், இடைத்தேர்தல்களிலும் பெரும்பாலும் மோடி அலை சுருண்ட பிறகு நடக்கும் ஒரு பெரிய பொதுத்தேர்தல் திருவிழா இது என்பதால்தான் இத்தனை எதிர்பார்ப்பு. ஞாயிறன்று இதன் முடிவு தெரிந்ததும் மாநிலம் கடந்து பெரும்பாலான மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். அதாவது, மோடி என்ற மாய பிம்பத்தின் தோல்வியை எல்லோரும் கொண்டாடி தீர்த்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏன் இந்த எதிர்ப்பு? கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன் இமாலய வெற்றிபெற்ற ஒரு கட்சியின் தற்போதைய தோல்வியை ஏன் கொண்டாடவேண்டும்? இந்த கொண்டாட்ட மனநிலைக்கு மக்களை தள்ளியது எது என்று பார்த்தால் சமீபத்திய மோடி அரசின் மக்கள் விரோத போக்குதான்.


தடி எடுத்தவெல்லாம் தண்டல்காரன் என்பதுபோல் மேடையில் மைக் கிடைத்தவனெல்லாம் பேச்சாளரானார். பேச்சாளர் என்பதைவிட சிறுபான்மை மக்களை திட்டும் ஏச்சாளர்களானார்கள்.
மாட்டுக்கறி சாப்பிடுகிறாயா ஓடு பாகிஸ்தானுக்கு என்று ஒரு பக்கம்  தன் சகாக்களை விட்டு மேடைக்கு மேடை முழங்க வைத்துவிட்டு மற்றொரு பக்கம் தனக்கு வேண்டப்பட்டவர்கள் மூலம் மாட்டுக்கறியை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து முதலிடமும் பிடித்தது.
விருதை திருப்பி கொடுக்கிறாயா ஓடு பாகிஸ்தானுக்கு, சிறுபான்மையினரை ஆதரிக்கிறாயா ஓடு பாகிஸ்தானுக்கு என்று பேச்சு முழுக்க வன்முறையும் வன்மமும் நிரம்பி ஓடியது இவர்களிடத்தில். ஆட்சியை விமர்சித்து எழுதினால் ’அடிடா அவன் முகத்தில் மையை’ என்று ஆளாளுக்கு பேசவும், ஏசவும், வன்முறையை கையிலெடுக்கவும் செய்தார்கள். இதில் எதையுமே கண்டுக்காமல் மோடி தன் வெளிநாடு பயணத்திலேயே குறிக்கோளாக இருந்தார்.
எல்லோருக்குமான பிரதமராக இருக்க வேண்டிய மோடி தாய் கழகமான ஆர்.எஸ்.எஸ்.சின் அடியாளாகவே மாறிப்போனார். அவர்களின் அஜெண்டாக்களை செயல்படுத்தும் கைப்பாவையானார். இந்துக்கள் மீது கை வைத்தால் சும்மா இருக்க மாட்டோம் என்று ஒரு பக்கம் சொல்லிவிட்டு இன்னொரு பக்கம் அதே இந்துக்களின் ஒரு பிரிவான தலித் மீதான தாக்குதல் நடத்திய தன் சகாக்களை கண்டிக்கவில்லை. சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை அடக்கவில்லை. மாறாக நாய் என்றும் பேய் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கே பட்டம் சூட்டி மகிழ்ந்தார்கள்.
நாட்டில் மாடுகளுக்கு கிடைத்த பாதுகாப்பு கூட மனிதனுக்கு இவர்களால் கிடைக்கவில்லை. விண்னை தொடும் விலைவாசி என்று  இந்த ஒன்றரை வருடங்களில் பா.ஜ.க.வை மக்கள் வெறுத்ததற்கான காரனங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட மக்கள் விரோத ஆட்சி நமக்கு தேவையில்லை என்று வாக்காளர்கள் நினைத்ததன் விளைவு இந்த தேர்தல் முடிவு.
மாட்டுக்கறி பற்றி செண்டிமெண்ட் பிட்டையெல்லாம்கூட  போட்டுப்பார்த்தாங்க பீகார்ல. ஏன்னா மாடுகள் வளர்ப்பதை புனிதமாக நினைப்பவர்கள் யாதவர்கள்.அப்படிப்பட்டவர்களிடமே  இவர்கள் பருப்பு வேகலை என்றால் மற்ற மாநிலங்களில் சொல்லவா வேண்டும்?!. 


இப்போது ஒன்றும் காலம் கடந்துவிடவில்லை. இனியாவது இரண்டாம் கட்ட தலைவர்களின் வாயைக்கட்டுப்படுத்துங்கள், மத ரீதியான சென்சிடிவான பிரச்சினைகளை சுமூகமாக கையாளுங்கள். அனைவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளியுங்கள்.அதை விடுத்து, பா.ஜ.க. தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள முன் வரவில்லை என்றாலோ, தன் கொள்கைகளில் திருத்தம் கொண்டுவரவில்லை என்றாலோ  இந்தியாவை பா.ஜ.க. ஆளும் கடைசி வாய்ப்பு இதுவாகத்தான் இருக்கும்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


1 கருத்து:

  1. ஒன்றரை ஆண்டு க்கு முன் கிடைத்தது எதிர்பாரா வெற்றி
    இப்போது கிடைத்ததோ எதிர்பாரா தோல்வி
    அவ்வளவுதான்

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.