என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், அக்டோபர் 08, 2013

8 ஒரு வித்தியாசமான எம்.ஜி.ஆர்.,சிலையும், அதன் பின்னணியில் இருக்கும் அரசியலும்....



வழக்கமாக, இரட்டை விரலை காட்டும் எம்.ஜி.ஆர்.,சிலையைத்தான் நீங்கள் பார்த்திருப்பீர்கள்....மேலே   இருக்கும் சிலையிலோ எம்.ஜி.ஆர்.,இரட்டை விரலை காட்டாமல்  டாட்டா காட்டுவது போல் கையை தூக்கி காட்டுகிறார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தான் இப்படி ஒரு சிலை இருக்கிறது. சரி.....ஏன் இந்த சிலையில் மட்டும் எம்ஜிஆர் இப்படி காட்டுகிறார்? அதற்கு பின் ஒரு பரபரப்பு அரசியல் பின்னணியே இருக்கிறது. வாருங்கள் சொல்கிறேன்.



ஒருகாலத்தில்,ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டவர் திருநாவுக்கரசு.எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் மரணத்திற்கு பின் ஜெயலலிதாவை அண்ணா.தி.மு.க.,வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்ததில் திருநாவுக்கரசு பங்கு மிகப்பெரியது. அவரோடு பண்ரூட்டி ராமச்சந்திரன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்( சாத்தூரார்), அரங்கநாயகம் போன்ற ஜெயலலிதாவின் ஆதரவாளர்களும் பொதுச்செயலாளராக ஜெயாவையே முன்மொழிந்தனர். இதை ஜானகி, ஆர்.எம்.வீ., போன்றோர் கடுமையாக எதிர்த்தனர். அந்த நேரத்தில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களில் 98 பேர்கள் ஜானகிக்கு ஆதரவாகவும், 29 பேர்கள் ஜெயாவிற்க்கு ஆதரவாகவும் இருந்தனர்.

ஜானகி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறிவிடக்கூடாதென்று ஒரு ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். ஜெ ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 29 பேரும் வட மாநிலத்திற்கு அழைத்துசெல்லப்பட்டு ஆம்னிவேனில் ஊர் சுற்றிக்காட்டப்பட்ட  கூத்தும் நடந்தது. ஜெ ஆதரவாளர்கள் திருநாவுக்கரசுவும், சாத்தூர் ராமச்சந்திரனும் அந்த வேலையை பார்த்துக்கொண்டனர். ஆனாலும், ஜானகி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு மெஜாரிட்டியை நிருபிக்க முடியாமல் வெறும் 24 நாட்களில் ஆட்சி கலைக்கப்பட்டது.

அண்ணா.தி.மு.க.,வும் இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது. ஜானகி அணி - ஜெயலலிதா அணி என்று இரண்டாக பிரிந்து செயல்பட்டது.

இதற்கிடையில் ஜெயலலிதா அணியில் குழப்பம் ஏற்பட்டது. ஜெயா அணியில் செயல்பட்ட நாவலர் நெடுஞ்செழியனும்(தனக்கு முதல்வர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருந்த நாவலர்  இவர்களோடு இணைந்திருந்தார்) திருநாவுக்கரசு, பண்ரூட்டி, அரங்கநாயகம் போன்ற தலைவர்கள்(?) ஜெ.,க்கு எதிராக திரும்பினர். கட்சிக்கு வசூல் செய்யப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஜெயாவிடம் கணக்கு கேட்ட இவர்கள் கட்சியிலிருந்து இல்லை...இல்லை...ஜெ அணியிலிருந்து நீக்கப்பட்டனர். தங்களை நீக்க ஜெ.,க்கு அதிகாரமில்லை என்று கூறிய இவர்கள், நால்வர் அணி என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்தனர்.ஆனாலும், தாக்குப்பிடிக்க முடியாத நால்வர் அணி சிறிது காலத்துக்குள்ளாகவே மீண்டும் ஜெயாவுடன் இணைந்தது.

1989 ஜனவரியில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., இரண்டு பிரிவுகளானதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு... ஜானகி அணிக்கு இரட்டைப்புறா சின்னமும், ஜெயலலிதாவிற்க்கு சேவல் சின்னமும் ஒதுக்கப்பட்டது. இதில் ஜெ., அணிக்கு 27 இடங்கள் கிடைத்தது. ஜானகி அணிக்கு 1 இடம் மட்டுமே கிடைத்தது. 13 வருட வனவாசத்திற்கு பின் தி.மு.க.,ஆட்சியமைத்தது. மீண்டும் ஜானகி அணி-ஜெயலலிதா அணி இணைந்து கட்சியும் சின்னமும் ஜெயலலிதாவிடம் வந்தது. அப்போதுதான் அந்த சிலையை அறந்தாங்கியில் அமைத்தார் திருநாவுக்கரசு. ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர்.,இரட்டை இலை சின்னத்தை காட்டுவதுபோல்தான் அந்த சிலையை அமைத்திருந்தார்.ஜெயலலிதா திறப்பதாக ஏற்பாடு.

இதற்கிடையில் என்ன நடந்ததோ மீண்டும் அண்ணா.தி.மு.க.,விலிருந்து திருநாவுக்கரசு நீக்கப்பட்டார்.அவரோடு சாத்தூர் ராமச்சந்திரனும், கருப்பசாமி பாண்டியனும் சேர்த்தே நீக்கப்பட்டனர். கடுப்பான திருநாவுக்கரசு தன் ஆதரவாளர்களுடன் இணைந்து அண்ணா புரட்சித்தலைவர் தமிழக முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர். சிலை காட்டிக்கொண்டிருந்த இரட்டை இலை சின்னத்தையும் மாற்றியமைத்தார். எம்ஜிஆர். கை காட்டுவது போல் சிலையின் அமைப்பு மாற்றப்பட்டது.  இதற்கிடையில், தி.மு.க.,ஆட்சியும் கலைக்கப்பட்டது.



தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்த திருநாவுக்கரசு கலைஞர் பிரச்சாரத்திற்கு அறந்தாங்கி வரும்போது அவர் கையாலே அந்த எம்.ஜி.ஆர்.,சிலையை திறக்க வைத்தார். இன்றும் கை காட்டுவது போல்தான் அறந்தாங்கியில் அந்த சிலை உள்ளது. திறப்பாளர் என்று கலைஞரின் பெயரை தாங்கியபடி........


குறிப்பு: எம்.ஜி.ஆர்.,சிலையையும், கல்வெட்டையும் போட்டோ எடுத்து அனுப்பிய என் நண்பர் அறந்தாங்கி கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி 




Post Comment

இதையும் படிக்கலாமே:


8 கருத்துகள்:

  1. அடி ஆத்தீ..இம்புட்டு நடந்திருக்கா?

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பதிவுகளில் நீங்கள் ஞாபகப்படுத்தும் பழைய அரசியல் கதைகள் என் போன்றவர்களுக்கு நினைவலைகள். நன்றி!

    பதிலளிநீக்கு
  3. இவ்வளவும் நடந்தது உண்மை!///சிலை விவகாரம் இன்று தான் அறியவும்,பார்க்கவும் வாய்ப்புக் கிடைத்தது!நன்றி கஸாலி & அறந்தாங்கி கிருஷ்ணா அவர்களுக்கு!!!

    பதிலளிநீக்கு
  4. மற்ற எல்லா விபரங்களும் அறிந்ததுதான். சிலை விவகாரம் அறியாத செய்தி! பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அறியாத அரசியல் கதை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. படம் போட்டு கதையை விளக்கினீர்கள் சார். நன்றி!

    பதிலளிநீக்கு
  7. //நாங்களும் ஹிட்ஸ் கொடுத்திருக்கோம்ல... 1335555...//
    நான்தான் அந்த 1335555-ஆவது நபர்!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.