என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், ஏப்ரல் 29, 2013

5 ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானது ஏன்? எப்படி?





அண்ணா.தி.மு.க.,வில் சாதாரண ஆளான ஓ.பன்னீர் செல்வம் கூட முதல்வராக முடியும். ஒரு கடைநிலை தொண்டன் கூட பதவி வகிக்க முடியும் என்று சொல்கிறார்கள். இது உண்மையா? ஓ.பன்னீர் செல்வம் எத்தகைய சூழ்நிலையில் முதல்வராக்கப்பட்டார் தெரியுமா?

1991-1996-ஆம் அண்டு தன் ஆட்சிக்காலத்தில் தனது ஜெயா பப்ளிகேஷனுக்காக டான்சி நிலத்தை கையகப்படுத்திய வழக்கில் ஜெயலலிதாவுக்கு இரண்டு வருடம் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இரண்டு வருடங்கள் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் நடத்தை விதிமுறை. இந்த விஷயம் ஜெயலலிதாவுக்கு நன்றாக தெரியும். இருந்தும் ஒரு தந்திரம் செய்தார். அதுவும் தேர்தல் நடத்தை விதிமுறை சம்பந்தப்பட்டதுதான்.

அதாவது, ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிக்கு மேல் போட்டியிடக்கூடாது. அப்படி போட்டியிட்டால், அவர் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு தேர்தலில் போட்டியிட முடியாமல் போகும். இந்த நடைமுறையும் ஜெயலலிதாவுக்கு நன்றாக தெரியும். ஆனாலும் புதுக்கோட்டை, ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி என்று நான்கு தொகுதிகளிலும் போட்டியிட வேட்புமனு செய்தார். ஏன் அப்படி செய்தார்?

இரண்டு ஆண்டு தண்டனை பெற்றவர் போட்டியிட முடியாது என்பதை மறைத்து இப்படி நான்கு தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்தால், எப்படியும் மனுவை தள்ளுபடி செய்துவிடுவார்கள். தான் போட்டியிட முடியாது. அப்படி நடக்கும் பட்சத்தில் தன்னை தேர்தலில் போட்டியிட விடாமல் எதிர்கட்சிகள் சதி செய்து விட்டன என்று மக்களிடம் முறையிடலாம் அல்லவா அதற்காகத்தான். மக்களுக்குத்தான் தேர்தல் நடத்தை விதிமுறைகள் எல்லாம் தெரியாதே? ஒருவேளை வேட்புமனு தாக்கல் செய்யாமல் விட்டிருந்தால் ஊழலுக்காக ஜெயில் தண்டனை பெற்றதால் ஜெயலலிதா போட்டியிட முடியவில்லை என்று சொல்லிவிடுவார்கள். இப்படி செய்தால் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை சொல்லி மக்களிடம் அனுதாபம் தேடிவிடலாம் அல்லவா?

தான் நினைத்தது போலவே வேட்புமனுவை தள்ளுபடி செய்தது தேர்தல் ஆணையம். இதை எதிர்பார்த்திருந்த ஜெ, உடனே பிரச்சாரத்திற்கு கிளம்பி தான் போட்டியிட முடியாமல் போனது எதிர்கட்சிகளின் சதி என்றும், பெண் என்றும் பாராமல் இப்படி செய்கிறார்கள் என்றும் மக்கள் மத்தியில் பேசினார். மக்களும் மனம்மாறி அண்ணா.தி.மு.க.,விற்கு வாக்களித்தனர். அபார வெற்றி. ஏறக்குறைய 130 தொகுதிகளுக்கும் மேல் அண்ணா.தி.மு.க.வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர். முடிவு வந்த அடுத்தநாளே ஜெ அவசரம் அவசரமாக முதல்வராக பொறுப்பேற்றார். 



சிறைத்தண்டனை பெற்ற ஒருவர் முதல்வராக பொறுப்பேற்றது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை நீதிபதி பரூச்சா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு விசாரித்து ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றது செல்லாது என்று தீர்ப்பு கூறினர். இதனால் பதவி விலகிய ஜெ தனக்கு நம்பிக்கைக்குரிய அடிமை ஒருவரை முதல்வராக்க முடிவுசெய்தார். அதன்படி முதல்வரானவர்தான் இந்த (டீ)கடைநிலை தொண்டர் ஓ.பன்னீர் செல்வம். ஏறக்குறைய ஆறுமாத காலம் பொம்மை முதல்வராக இருந்தார் ஓபிஎஸ். அவரின் ரிமோட் ஜெ கையில் இருந்தது.

அடுத்ததாக டான்சி வழக்கில் ஜெ.க்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. பின்னர் அந்த வலக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஜெ. அடுத்ததாக ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.,வாக இருந்த தங்க.தமிழ்செல்வனை ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு, அங்கு நடந்த இடைத்தேர்தலில் ஜெ போட்டியிட்டு வெற்றிபெற்று முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றார்.

இதுதான் ஓ.பன்னீர் செல்வம் என்ற கடைநிலை தொண்டர் முதல்வரான வரலாறு. ஒருவேளை ஜெ முதல்வராக பதவியேற்றதை எதிர்த்து பொதுநல வழக்கு தொடரப்படாமல் இருந்தால் எந்த கடைநிலை ஊழியரும் முதல்வராகியிருக்க முடியாது. சரி, ஒரு கடைநிலை ஊழியரை ஏன் தொடர்ந்து முதல்வ்சராக நீடிக்க விடவில்லை? அதையாவது சொல்லுங்கப்பா....மீண்டும் ஒரு கடைநிலை ஊழியரை எப்ப ஜெ முதல்வராக்குவார் என்றாவது சொல்லுங்கப்பா....

====================

கடந்த சனிக்கிழமை முகப்புத்தகத்தில் போட்டிருந்த இந்தப்பதிவுக்கு அண்ணா.தி.மு.க.,வை சேர்ந்த நண்பர் ஒருவர் போட்ட கமெண்ட்.....

//// Dhanapal Arumugam: இந்த பதிவையே நான் எதிர்க்கிறேன். கடை நிலைத் தொண்டன் முதல்வர் பதவியில் இருந்தாரா இல்லையா என்ற வாதத்திற்கு பதில் அளிக்க முடியாமல் ஏன் பதவியில் இருந்தார் என்று நீங்களாக சொல்கிறீர்கள். இதுவே அப்படி ஒரு நிலை கருணாநிதிக்கு வந்து இருந்தால் அடிமட்டத் தொண்டரை முதல்வர் பதவியில் அமர்த்தி இருப்பாரா என்பது தான் பிரதான விவாதம்..?? தனபால் அவர்களை சபாநாயகர் ஆகியதற்கு என்ன புது விளக்கம் சொல்லப் போகிறீர்.



அதிமுகவை பொருத்தவரை நீங்கள் அடிமை என்ற பதத்தை அடிக்கடி அனைவருமே விளிக்கிறீர்கள். ஜெயலலிதா அவர்கள் மீதான நிர்வாக திறமைகளை குறைகூற முடியாத புல்லுருவிகள் நீங்கள் என்பதை நான் நன்கு அறிவேன். அடிமை, காலில் விழுகிறார்கள் என்றெல்லாம் சொல்வது அவர் மீது அரசியல் ரீதியாக குறை வைக்கத் திராணியற்ற நண்பர்கள் எதையாவுது சொல்ல வேண்டுமே என்று தான் சொல்கிறார்கள்.



அதிமுக என்பது புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி மீது கொண்ட அளப்பரிய பாசத்தினால் உருவான அமைப்பு. தொண்டர்கள் தலைவியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதை குறை சொல்ல எந்த மனிதருக்கு உரிமை இல்லாது ஓன்று. இதை ஏன் இன்னும் புரிந்த கொள்ள முடியாமல் தங்களைப் போன்றவர்கள் கூக்குரலிடுகிறார்கள் என்று தான் விளங்கவில்லை.



ஜெயலலிதா அவர்கள் முதல்வர். முதல்வராக எந்தப் பணிகளை செய்யாமல் இருக்கிறார் என்று சொல்லுங்கள். அதில் கவனம் செலுத்த தயாராக இருக்கிறோம். அதை விடுத்து அற்ப வாதத்தில் தான் ஈடுபடுவேன் என்றால் நீங்களே உங்களை உங்களை அறிவாளி பட்டம் சூடிக் கொண்டு பவனி வாருங்கள். மிக்க நன்றி../////

அதற்கான என் பதில்...........

//// ரஹீம் கஸாலி: கடைநிலை தொண்டன் முதல்வர் பதவியில் இருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. ஏன் அந்த பதவிக்கு வந்தார், எப்படி வந்தார் என்று ஏன் சொல்ல கூடாது. ஜெயலலிதா தனக்கு வந்த முதல்வர் பதவியை பதவி ஆசை இல்லாமல் (டீ)கடைநிலை தொண்டரான ஓபிஎஸ் அவர்களுக்கு விட்டுக்கொடுத்தாரா? இல்லையே. எத்தகைய சூழ்நிலையில் அவர் பதவிக்கு வந்தார் என்பதையும் சொல்லத்தான் வேண்டும். சும்மா கடைநிலை தொண்டர் வந்தார் வந்தார் என்று கூப்பாடு போடுவதில் அர்த்தமில்லை. ஏன் சார் அதன்பிறகு எந்த ஒரு கடைநிலை தொண்டரும் முதல்வர் பதவிக்கு வரமுடியவில்லை. கலைஞர் விட்டுக்கொடுப்பாரா என்றால் அவர் ஊழல் செய்திருக்கிறார். அதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஊழலுக்காக சிறைத்தண்டனை பெற்று அதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை வரவேயில்லையே. அடுத்ததாக சபாநாயகர் பற்றியெல்லாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. அதிமுக.என்பது எம்ஜிஆர்.மீதும் ஜெயலலிதா மீதும் அளப்பரிய பாசத்தால் உருவான அமைப்பு என்ற உங்கள் கூற்றிலிருந்து நான் மாறுபடுகிறேன். ஏனென்றால், அதிமுக என்பது எம்ஜிஆரின் மீது கொண்ட அளப்பரிய பாசத்தால் உருவான அமைப்பே தவிர ஜெயலலிதா மீது கொண்ட பாசத்தால் உருவான அமைப்பு அல்ல. ஏறக்குறைய அதிமுக.ஆரம்பித்து பத்து வருடங்களுக்கு பிறகுதான் ஜெ அந்த அமைப்பிற்கே வந்தார்.////



Post Comment

இதையும் படிக்கலாமே:


5 கருத்துகள்:

  1. avanga katchikaaranga enna vena senjittu pottam, nammayyum athe madhiri seyya sonna??????????

    (Kaalil vizhuvathu)

    பதிலளிநீக்கு
  2. என்னே அளப்பரிய பாசம்...!

    நல்ல பதில்...

    பதிலளிநீக்கு
  3. கேள்வியும் பதிலும் அருமை! அவர்களின் துதிபாடிகளிடம் பேசி பயனில்லை! அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  4. இந்திய அரசியல் கட்சிகளும், இசுலாமிய மதமும் அடிமைகளால் மட்டுமே இருக்கின்றன.
    ஏனென்று கேள்வி கேட்க உரிமை இல்லாத ஜந்துக்கள் மட்டுமே அந்த அமைப்புகளில் இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  5. கேள்வியும் அதற்கான உங்கள் விளக்கமும் அருமை.பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.