அழகிரி மீண்டும் ஒருமுறை தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே 2001 தேர்தலில் அப்போதைய சபாநாயகரும் கட்சியின் அதிகாரப்பூர்வமான வேட்பாளருமான பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனுக்கு எதிராக போட்டி வேட்பாளரை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், பி.டி.ஆரை தோற்கடிப்பேன் என்று பகிரங்கமாக சவால் விட்டு அதன்படி தோற்கடித்ததால் அப்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் அழகிரி...
இப்போது, பல காரணங்களுக்காக கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். கவனிக்க தற்காலிகமாகத்தான். இது சமீபத்தில் அழகிரியால் விமர்சிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொடுக்கப்பட்ட சிக்னலாகவும் இருக்கலாம். பின்னாளில் சத்தம் போடாமல் சேர்த்துக்கொள்ள படலாம்.
தனக்கு ஆபத்து வரும்போது தன்னை தற்காத்துக்கொள்ள பல்லி தன் வாலை தானாகவே துண்டித்துக்கொள்ளும். அப்படி துண்டிக்கப்பட்ட வால் துடிப்பதை எதிரிகள் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த சில வினாடிகளில் பல்லி தப்பித்து போய்விடும். மீண்டும் சில நாட்களில் புதிதாய் வளர்ந்த வாலுடன் அந்தப்பல்லி சுவரில் வலம்வரும்.
அதுபோல்தான் அழகிரி நீக்கமும் என்று நினைக்கிறேன். தேர்தலுக்கு பின் கண்கள் பனித்து இதயம் இனிக்கலாம்.
சசிகலாவைக்கூட இரு முறை இப்படி நீக்கி சேர்த்திருக்கிறார் ஜெயலலிதா. 1996- தேர்தலில் தானும் தன் கட்சியும் படுதோல்வியை சந்தித்த போது இத்தனைக்கும் சசிகலாதான் காரணம் என்று சொல்லி அப்போது ஒருமுறை கட்சியிலிருந்து நீக்கினார். அவரை விட்டு தானும் நீங்கினார். பின்னர் சேர்த்துக்கொண்டார். பின்னர் 2011 ஆம் ஆண்டு கடைசியில் ஒருமுறை சசிகலா குடும்பத்தையே நீக்கி பின்னர் சசிகலாவை மட்டும் சேர்த்துக்கொண்டார்.
இப்படி இரண்டு கட்சிகளுக்குமே நீக்கி நீக்கி சேர்த்து சேர்த்து விளையாடுவதுதான் வேலை. ஏன்னா....அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.......
-------
பிரபல பதிவர் செங்கோவியும் நானும் சம காலத்தில் பதிவுலகில் நுழைந்தவர்கள். பதிவுலகை தாண்டியும் நாங்கள் நல்ல நண்பர்களும் கூட. அவர் சினிமா, அரசியல், இலக்கியம் என்று பன்முகம் கொண்டவர். வலைப்பூவில் அவர் வித்தியாசமான வசீகரமான எழுத்துக்கு சொந்தக்காரர் என்பதை அவரை வாசித்த யாரும் மறுக்க மாட்டார்கள்.
செங்கோவி வலைப்பூவில்(http://sengovi.blogspot.com/) தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த கால கட்டத்தில் அவர் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதிய மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியில் இருந்து) என்ற தொடர் அப்போது வெகு பிரபலம்.....அதை வாசித்துவிட்டு அப்போது அவரை பாராட்டதவர்களே கிடையாது எனலாம். இந்த தொடர்தான் பதிவுலகில் அவரை ஹீரோவாக உயர்த்தியது. அந்த தொடர் இப்போது சில இணைய நண்பர்களின் முயற்சியில் மின்னூலாக வெளிவந்திருக்கிறது. தரவிறக்கி படித்துப்பார்த்துவிட்டு, உங்கள் கருத்தையும் சொல்லுங்க.... வாழ்த்துக்கள் செங்கோவி.....தொடர்ந்து கலக்குய்யா.....
மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியில் இருந்து) தொடரை மின்னூலாக தரவிறக்க கீழே இருக்கும் லிங்கை க்ளிக் செய்யவும்.
---------
காட்டை அழித்து வீட்டைக்கட்டினால் அப்படித்தான் புலி வரும் புடலங்காய் வரும்னு சொல்றாங்க. எல்லாரும் அழகா வீடு கட்டிக்கு அதில் பாதுகாப்பா உட்கார்ந்துக்கு இதை சொல்றாங்க. மலைப்பிரதேசங்கள் மட்டும் காடு இல்லை. நீங்க இருக்கிற நகர்புறங்களும் ஒரு காலத்தில் காடா இருந்ததுதான்.
இந்த உலகம் உருவானபோது கடலும், பாலைவனமும், காடும்தான் இருந்துச்சு. மனிதன் தன் தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொன்றையும் அழிக்க அரம்பித்தான். என்னமோ மலைப்பிரதேசங்கள் மட்டும்தான் காடா இருந்துச்சு. மற்ற பகுதிகள்லாம் கட்டிடமாத்தான் இருந்துச்சுன்னு சொல்லாதீங்க.
எல்லோரும் காட்டை அழிச்சுத்தான் கட்டடமாக்கி இருக்கோம். என்ன நம்ம நேரடியா அதை செய்யாட்டியும் நம் முன்னோர்கள் அதைத்தான் செஞ்சிருக்காங்க.
----------
இப்போது அண்ணா.திமுக.,வினரால் டம்மி பீஸ், செல்வாக்கில்லாதவர் என்று சொல்லப்படும் விஜயகாந்த் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவையே அலற வைத்தவர். செல்வாக்கு இல்லாதவருக்கு ஏன் ஜெயலலிதா 41 தொகுதிகளை ஒதுக்கினார் ஜெ?, சரத்குமாருக்கு போல வெறும் இரண்டு தொகுதிகள் மட்டுமே கொடுத்திருக்கலாமே?, அல்லது வைகோவை போல கழட்டிவிட்டிருக்கலாமே?,
அப்போது விஜயகாந்த் கேட்ட தொகுதிகளுக்கும் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்து விட. உடனே கடுப்பான விஜயகாந்த் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சியினரை தன் அலுவலகத்தில் கூட்டி ஜெயலலிதாவுக்கு கிலியை கூட்டினார். பின்னர் வேறு வழியே இல்லாமல் இறங்கி வந்த ஜெயலலிதா, தான் அறிவித்த வேட்பாளர் பட்டியலை வாபஸ் வாங்கிக்கொண்டு விஜயகாந்த் கேட்ட சில தொகுதிகளை அவருக்கு ஒதுக்கிவிட்டு புதிதாய் வேறு ஒரு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விஜயகாந்தை சாந்தப்படுத்தினார்.
ஜெயலலிதாவின் அரசியல் வரலாற்றிலேயே இப்படி இறங்கி வந்தது அப்போதுதான். அதுதான் விஜயகாந்தின் செல்வாக்கு. இப்போதுகூட அவரிடமிருந்து சில எம்.எல்.ஏ.க்கள் விலகினாலும் திமுக., காங்கிரஸ், பா.ஜ.க., என்று முக்கிய கட்சிகளை தன்னை சுற்றி வரும்படி செய்திருக்கிறார் விஜயகாந்த்
கேப்டன் செல்வாக்கில்லாதவர் என்று அண்ணா.தி.மு.க.,வினர் அலறுவதை பார்த்தால் அதில் எங்கே இவர் தி.மு.க.,வோடு கூட்டணி சேர்ந்திடுவாரோ என்ற பயம்தான் மறைந்துள்ளது.
-----------
இந்த கருத்துக்கணிப்பு கருத்துக்கணிப்புன்னு சொல்றாங்களே. இதையெல்லாம் யார்கிட்டதான் எடுத்து தொலைவாங்க?, நானும் பல வருஷமா இருக்கேன். இதுவரைக்கும் யாரும் எங்கிட்ட வந்ததே இல்லை கருத்துக்கணிப்பு கேட்கறேன்னு. சரி நம்மளத்தான் இவனுக மதிக்கல. நமக்கு வேண்டப்பட்டவங்க யார்கிட்டேயாவது எடுத்திருக்காங்களான்னு நானும் பத்து இருபது பேர்கிட்ட கேட்டேன். அவங்களும் அப்படில்லாம் வந்ததே இல்லேன்னு சொல்றாங்க. அதில ரெண்டு பேருக்கு கருத்துக்கணிப்புன்னாலே என்னன்னு தெரியல. கருத்துக்கணிப்புன்னா கருப்பா இருக்குமான்னு கேட்கறாங்க. அபபுறம் யார்கிட்டதான் எடுத்து வெளியிடுவாங்க இந்த கணிப்பை. ஒருவேளை செவ்வாய் கிரகத்துப்பக்கம் போயி எடுப்பனுகளோ?
-----------
தேர்தல் வந்துவிட்டாலே அரசியல்வாதிகளை விட, பொது மக்களை விட பரபரப்பாக இயங்க ஆரம்பித்துவிடும் இந்த பத்திரிகைகள். இவர் அவரோடு கூட்டு வைப்பார். அவர் இவரோடு பொறியல் வைப்பார் என்று யூக மூட்டைகளை அவிழ்த்து விட்டு தன் கல்லாவை நிரப்ப ஆரம்பித்துவிடுவார்கள்.
இன்னும் ஒரு படி மேலே போய் அவங்களுக்கு இத்தனை இடம் கிடைக்கும். இவங்களுக்கு அத்தனை இடம் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். தன் கட்சிக்கு ஆதரவாக எந்த பத்திரிகையாவது எழுதினால் ஆஹா அவங்களே சொல்லிட்டாங்க. நாங்கதான் ஜெயிப்போம்னு ஒரு கட்சிக்காரர்கள் அந்த பத்திரிகைகளை மேற்கோள் காட்டி புளகாங்கிதம் அடைவார்கள். தன் கட்சிக்கு எதிராக எழுதினால் அய்யய்யோ அந்த பத்திரிகையை நம்பாதீங்க. அது ஒரு மஞ்சள் பத்திரிகை, மாமா பத்திரிகைன்னு புலம்ப ஆரம்பிப்பார்கள்.
அடப்போங்கப்பா. ஜனநாயகத்தின் ஒரு தூணான பத்திரிகைகள் மக்களிடம் நம்பிக்கை இழந்து வருடமாச்சு. எல்லா பத்திரிகைகளும் தனக்கான தர்மத்தை புதைத்துவிட்டு கல்லாவை நிரப்ப ஆரம்பித்து நாளாச்சு. இதில் மாமா பத்திரிகை என்ன, மஞ்சள் பத்திரிகை என்ன?
----------
கடந்த வாரம், நான் பஸ்சில் ஊருக்கு செல்வதற்காக அமர்ந்திருந்தேன். எனக்கு பக்கத்து சீட்டில்(விண்டோ சீட்) ஒருவர் அமர்ந்திருந்தார். பஸ்சில் ஏறி அமர்ந்ததிலிருந்ததிலிருந்து யாரிடமோ போனில் யாரிடமோ பேசிக்கொண்டே வந்தார். நான் என் போனில் ஃபேஸ்புக் பார்த்துக்கொண்டு வந்தேன். திடீரென என் போனை உற்றுப்பார்ர்தவர் என்னைப்பார்த்து, நீங்க ரஹீம் கஸாலியா என்றார். நான் சற்று வியப்புடன், ஆமாம் என்று சொல்லிவிட்டு நீங்க யார் என்றேன்.
என் பெயர் ______, நான் _____பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கேன் என்றார். நான் சற்று அதிர்ச்சியாகி 66A - யை நினைத்துக்கொண்டேன். உங்கள் பதிவுகளை எல்லாம் தொடர்ந்து படிப்பேன். நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள் என்றார். அப்போதுதான் க்ரேட் எஸ்கேப்டா கஸாலி என்று எனக்கு சற்று நிம்மதியாக இருந்தது. நன்றாக பேசினார். 19 வருடமாக போலீஸ் துறையில் இருப்பதாகவும், இன்னும் ஆறு மாதத்தில் டி.எஸ்.பி.,யாகவும் பதவி உயர்வடைய போவதாகவும் சொன்னார். பரஸ்பரம் இருவரும் போன் நம்பர்களை பகிர்ந்துகொண்டோம். சென்னைக்கு வந்ததும் என்னை அழைங்கள் என்றார். சரி என்று சொன்னேன்.இனிமையான சந்திப்பு.
---------
படித்ததில் பிடித்தது.....
அன்று நிலாவில் வடை சுட்ட பாட்டி முதல் இன்று ஸ்கைப்பில் விஷேசங்களில் கலந்து கொள்ளும் நண்பர்கள் வரை இந்த உலகம் எவ்வளவோ நவீனமாக மாறிக் கொண்டே இருந்தாலும் நம்ம தமிழ்நாட்டு பொண்ணுங்க இன்னும் ஒரு விஷயத்துல மட்டும் மாறவேயில்லை அது என்னங்குரியலா அதாங்க
.
.
.
.
.
.
கோபம் வந்தா பூரிக்கட்டை, தோசைக்கரண்டியால தான் அடிக்கனும்னு ஒன்னு இல்ல மொபைலு, லேப்டாப்பு இப்படி எத வச்சு வேணும்னாலும் அடிக்கலாம்..
#எல்லாம் டெக்னாலஜி டெவலப்மென்டு தான்..
சாகுல் அப்சானா என்பவரின் முகநூலிலிருந்து.........
(தம்பி ரொம்ப அடிவாங்கிருப்பார் போல)
-------------------------------
உரிமைகளை கேட்டு தபால் எழுதும், தந்தி அடிக்கும, தேர்தலுக்கு தேர்தல் மக்களை சந்திக்கும், ரோட்டில் இறங்கியே பழக்கமில்லாத முதல்வர்களையே பார்த்து பழகிய நமக்கு கெஜ்ரிவால் காட்டுமிராண்டியாகத்தான் தெரிவார்.////////////
பத்தாயிரம் ரூபாய் நம் கையில் இருந்தாலும் அதிலிருக்கும் ஒரு நூறு ரூபாய் லேசாக கிழிந்திலிருந்தால் அதை சுற்றியே நம் மனசு இருக்கும்.///////
இன்று சிதிலமடைந்து கவனிப்பாரற்று கிடக்கும் ஒவ்வொரு வீடும் ஒரு காலத்தில் யாரோ ஒருவருடைய கனவு மாளிகைதான். ///////
Tweet |
ஆவ்வ்..........! ஒரு முழு விருந்து சாப்பிட்ட திருப்பதி
பதிலளிநீக்குஉங்களை மாதிரி நண்பர்களின் ஆதரவை என்றும் மறக்க முடியாது கசாலி. மூன்றாயிரம் டவுன்லோடை நெருங்கிவிட்டது..நட்புக்கு நன்றி சொல்லலாமா!
பதிலளிநீக்குஇந்த கருத்துக்கணிப்பு கருத்துக்கணிப்புன்னு சொல்றாங்களே. இதையெல்லாம் யார்கிட்டதான் எடுத்து தொலைவாங்க?
பதிலளிநீக்கு>>
என்கிட்டயும் கேக்கலை
செங்கோவி புத்தக டவுன்லோடு லிங்கிற்கு நன்றி! டவுன்லோடு ஆகிட்டே இருக்கு
பதிலளிநீக்குKalakkal. Sathi
பதிலளிநீக்குஅருமையான,அழகான,நேர்த்தியான பதிவு.
பதிலளிநீக்குவழக்கம் போலவே கலக்கல் (கஸாலி) கஃபேதான்!
பதிலளிநீக்கு// 66A - யை நினைத்துக் கொண்டேன்//
பதிலளிநீக்குஹா... ஹா...
உங்களுக்கு பயமா?!?!?! நம்ப முடியவில்லையே!!!