என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், அக்டோபர் 19, 2010

12 ஆட்டோ சங்கர்- ஒரு ப்ளாஷ் பேக்


ஆட்டோ சங்கர் தனது தொழிலுக்கு போட்டியாக இருந்தவர்களையும், தனக்கு வேண்டாதவர்களையும் கொலை செய்தது எப்படி என்பது பற்றி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தான். சங்கரின் வாக்குமூலம் வருமாறு:-

"எனது பெயர் கவுரிசங்கர் என்ற சங்கர். நான் இளமையில் பெற்றோர்களுடன் கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்தேன். என் தந்தை சென்னையில் டீக்கடை நடத்தினார். என்னை கல்லூரியில் பி.யு.சி. வரை படிக்க வைத்தனர். அதன் பிறகு எனக்கு படிப்பு வரவில்லை. இதனால் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

படித்துக்கொண்டிருந்தபோது ஆட்டோ டிரைவர்கள் பலர் எனக்கு நண்பர்கள். அவர்கள்தான் எனக்கு ஆட்டோ ஓட்டுவதற்கு கற்றுத்தந்தனர். அதன் பிறகு நான் தனியாக ஒரு வருடம் ஆட்டோ வாடகைக்கு வாங்கி ஓட்டி வந்தேன். ஒரு நாளைக்கு சாப்பாடு போக எனக்கு 15 ரூபாய் கிடைக்கும்.

திருவான்மியூரில் இருந்து கோவளத்துக்கு வாடிக்கையாக கள்ளச்சாராயம் ஏற்றிக்கொண்டு போவதற்கு ஒரு சாராய வியாபாரி என்னை அழைத்தார். அதிக பணம் தருவதாகச் சொன்னார். இதனால் நான் ஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்தினேன். எனக்கு அதிகப்பணம் கிடைத்தது.

இதனால் நான் தினமும் சாராயம் குடித்துவிட்டு விபசார விடுதிக்குச் செல்லும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு நானே சொந்தமாக கள்ளச்சாராய வியாபாரம் செய்தேன். அதில் எனக்கு பணம் அதிகம் கிடைத்தது. இதனால் நான் ஆட்டோ ஓட்டும் வேலையை விட்டுவிட்டு சாராய வியாபாரி ஆனேன்.

ஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்திக்கொண்டு வருவதற்கு சுடலை என்ற ஆட்டோ டிரைவரை ரவி அறிமுகப்படுத்தினான். சுடலை மிகவும் தைரியமானவன். "நான் மதுரைக்காரன். எதையும் துணிந்து தைரியமாக செய்வேன். வேலைக்கு தகுந்தாற்போல் சம்பளம் கொடுத்துவிடு" என்று என்னிடம் அடிக்கடி சுடலை சொல்வான்.

சுடலையின் தைரியத்தில் நான் திருவான்மியூரில் குடிசை வீட்டில் அழகிகளை அழைத்து கொண்டுவந்து விபசார தொழில் நடத்தினேன். கோடம்பாக்கம் மற்றும் திருவான்மியூர் ஆகிய இடங்களில் இருந்து அழகிகளை விபசார விடுதிக்கு அழைத்து வருவதில் சுடலை கில்லாடி. அவனை வைத்துத்தான் எனது விபசார விடுதி ஓகோ என்று ஓடியது. இதனால் நான் சுடலையை நம்பினேன். எனது தொழில் ரகசியங்கள் அத்தனையும் அவனுக்கு தெரியும்.

நான் தாலி கட்டிய மனைவியின் பெயர் ஜெகதீசுவரி. அதன் பிறகு விபசார விடுதிக்கு வந்த அழகி சுந்தரி மீது எனக்கு ஆசை ஏற்பட்டது. இதனால் அவளை விபசார விடுதிக்கு அனுப்பாமல் தனியாக வீடு எடுத்து அவளை தங்கச் செய்தேன். அவளை தாலி கட்டி மனைவியாக்கினேன். அதன் பிறகு சுமதி என்ற அழகியையும் நான் மனைவியாக சேர்த்துக் கொண்டேன்.

என் காதலி என்னைத்தவிர வேறு யாருடனும் பேசக் கூடாது என்ற கொள்கையுடையவன் நான். யாராவது காதலியுடன் பேசினால் எனக்கு பொல்லாத கோபம் வரும். சுடலைதான் சுந்தரி, சுமதி ஆகியோரை விபசார விடுதிக்கு அழைத்து வந்து எனக்கு அறிமுகப்படுத்தியவன். இதனால் அவன் அவர்களிடம் கள்ளத்தனமாக பேசிக்கொண்டு வந்தான். இதை நான் பலமுறை கண்டித்து இருக்கிறேன். ஒருநாள் நான் வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்தபோது சுந்தரியை சுடலை கட்டாயப்படுத்தி கற்பழித்ததை பார்த்துவிட்டேன். அன்று அமாவாசை தினம். நான் பார்த்தது அவனுக்குத் தெரியாது.

ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் எனக்கு அந்த சம்பவம் நினைவுக்கு வரும். அப்போது நான் அதிகமாக குடிப்பேன். ஒருநாள் அமாவாசை தினத்தில் சுடலை என்னை வந்து சந்தித்து, அழகிகளுக்கு சம்பளம் கொடுக்க பணம் கேட்டான். அவனுக்கு நான் பிராந்தி கொடுத்தேன். இஷ்டம் போல குடித்தான்.

போதையில் அவன் தரையில் சாய்ந்தபோது அவனை கழுத்தை நெரித்து கொன்றேன். அவன் மூச்சு நின்றது. நான் நினைத்தபடி அவனை வஞ்சம் தீர்த்தேன். எனக்கு எதிராக விபசார விடுதி நடத்தியவனும், எனது காதலியை கற்பழித்தவனும் தொலைந்தான் என்று பெருமூச்சு விட்டேன். பிணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன்.

அப்போது என்னுடன் இருந்த எனது தம்பி மோகன், மச்சான் எல்டின் ஆகியோர் சரியான `ஐடியா' கொடுத்தனர். "ஏன் தயக்கம்? காருக்கு வாங்கி வைத்துள்ள பெட்ரோல் கைவசம் இருக்கிறது. ஊற்றி எரித்து கணக்கை தீர்த்துவிடலாம்" என்று கூறினார்கள்.

அவர்கள் 2 பேரும் சுடலையின் உடலில் பெட்ரோலை ஊற்றினார்கள். நான் பாண்ட் பாக்கெட்டுக்குள் வைத்து இருந்த தீப்பெட்டியை எடுத்து `குச்சி'யை பொருத்திப்போட்டேன். சுடலையின் சடலத்தை எரித்து தீர்த்தோம். அதன் பிறகு சாம்பலை முட்டுக்காடு கோவளம் கடற்கரையில் கரைத்தேன். நிம்மதியோடு வீடு வந்து சேர்ந்தேன்.

ஒரு வாரம் கழித்து சுடலையை தேடி அவனது நண்பன் ஆட்டோ டிரைவர் ரவி வந்தான். அவனையும் கொலை செய்துவிட முடிவு செய்தோம். ரவியை மோகனும், எல்டினும் நைசாக குடிசை வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். வழக்கம்போல ரவிக்கு சாராயம் ஊற்றிக்கொடுத்து அவனை மயங்க வைத்தனர். அப்போது நான் வீட்டில் இருந்தேன். மோகனும், எல்டினும் என்னிடம் வந்து, "ரவி தம்பி பயணத்துக்கு ரெடியாக இருக்கிறான். காரியத்தை முடிச்சுட வேண்டியதுதான்" என்று சொன்னார்கள்.

உடனே நான், மோகன், எல்டின் ஆகியோருடன் சென்றேன். அப்போது இரவு 11 மணி இருக்கும். ரவி காக்கிப் பேண்ட், முழுக்கை சட்டை, சிகப்பு தொப்பியுடன் தரையில் குடிபோதையில் மயங்கிக் கிடந்தான். நாங்கள் 3 பேர்களும் சேர்ந்து ரவியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தோம். உடலை வீட்டிற்குள் புதைத்து விட்டோம்.

இதேபோல்தான் மைலாப்பூர் சம்பத், மோகன், கோவிந்தராஜா ஆகிய 3 பேர்களும் என்னிடம் வந்து "ஓசி"யில் அழகிகளை அனுபவித்துவிட்டு பணமும் தராமல் தொடர்ந்து தகராறு செய்து கொண்டிருந்தனர்.

அவர்கள் 3 பேர்களை "சிவப்பு ரோஜா" சினிமா பாணியில் கதையை முடித்தோம். ஒரே வீட்டில் 3 பேர்களையும் குழி தோண்டி புதைத்தோம். இதற்கு பாபு மிகவும் உதவியாக இருந்தான்."

இவ்வாறு சங்கர் போலீசாரிடம் கூறியிருந்தான்.

சங்கரின் முரட்டுத்தனம் தாங்காமல் லலிதா அவனை விட்டு ஓடுவதற்கு திட்டம் போட்டாள். இதற்கு அவள் சுடலையின் உதவியை நாடினாள். சுடலை லலிதாவை கடத்திக்கொண்டு பல்லாவரத்தில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாக வைத்து இருந்தான்.

இதை சங்கர் தெரிந்து கொண்டு சுடலையிடம் சமாதானமாகப் பேசி, லலிதாவை மீண்டும் பெரியார் நகருக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தினான். சுடலையோடு ஓடியதற்காக லலிதாவையும் சங்கர் கொன்று தீர்த்தான். ஆட்டோ சங்கரின் அடாவடிதனத்துக்கு அவனுடைய தம்பி மோகனும், மைத்துனர் எல்டினும்தான் தளபதிகளாக இருந்து செயல்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணையின்போது மோகன் கூறியதாவது:-

சுடலையின் ஆலோசனையின் பேரில்தான் சங்கர் திருவான்மியூரில் விபசார விடுதி தொடங்கினான். சுடலை ஏராளமான அழகிகளை விபசார விடுதிக்கு அழைத்துக்கொண்டு வருவான். சில அழகிகளை பணத்துக்கு சங்கரிடம் விற்று விடுவான். சுடலை ஒரு பெண் ராசிக்காரன். அவனிடம் சிக்காத விபசார அழகிகளே கிடையாது என்று சங்கர் அடிக்கடி சொல்வான். எப்படியாவது ஒரு நாளைக்கு ஒரு அழகியை சங்கரிடம் சுடலை அறிமுகப்படுத்துவான்.

விபசார விடுதிக்கு வரும் நல்ல அழகிகளை சங்கர் அவன் கைவசப்படுத்திவிடுவான். அழகிகளிடம் சங்கரைத் தவிர வேறு யாரும் பேசக்கூடாது. அழகிகள் அவனுக்கு மட்டும்தான். அதன் பிறகு அவளுக்கு தனி வீடு. சில நாட்கள் கழித்து அவள் கழுத்தில் சங்கர் தாலி கட்டி மனைவியாக்கி விடுவான்.

ஜெகதீசுவரியை சங்கர் காதலித்தான். பெற்றோருக்கு தெரியாமல் அவளை வேலூரில் இருந்து சென்னைக்கு காரில் தூக்கிக்கொண்டு வந்து கல்யாணம் செய்து கொண்டான். வேறு வழி இல்லாமல் சங்கரிடம் ஜெகதீசுவரி மனைவியாக வாழ்க்கையை தொடங்கினாள். ஜெகதீசுவரியை சங்கர் குடும்பப் பெண் போல நடத்தினான்.

அதன்பிறகுதான் சங்கரின் விபசார விடுதிக்கு 1981_ம் வருடம் அக்டோபர் மாதம் கீதசுந்தரி வந்தாள். அவளை சுடலை அறிமுகம் செய்து வைத்தான். அவள் மிகவும் அழகாக இருந்தாள். கீதசுந்தரியை பார்த்தவுடன் அவளிடம் மனதை பறி கொடுத்து விட்டதாக எங்களிடம் சங்கர் கூறினான்.

கீதசுந்தரியுடன் சங்கர் குடிபோதையில் தாறுமாறாக நடந்து கொண்டான். இதனால் சங்கர் மீது கீதசுந்தரிக்கு வெறுப்பு ஏற்பட்டது. திருமணம் ஆன ஒரு வருடத்தில் சங்கருக்கும், கீதசுந்தரிக்கும் தகராறு முற்றியது. 1982_ம் வருடம் அக்டோபர் மாதம் 31_ந்தேதி ஞாயிற்றுக்கிழமை கீதசுந்தரி தீக்குளித்தாள். மாலை 4 மணி அளவில் அவள் பிணமானாள்.

கீதசுந்தரியின் மரணம் சங்கருக்கு பெரிய இழப்பாக இருந்தது. அவள் மீது சங்கர் வைத்திருந்த அன்பின் காரணமாக சங்கர், பெரியார் நகரில் கட்டிய பங்களாவுக்கு "கீதசுந்தரி" என்று பெயர் சூட்டினான். அதை கீதசுந்தரியின் நினைவு இல்லம் போல் வைத்து இருந்தான். அடுத்து சுமதி 3_வது மனைவியும், பெங்களூர் லலிதா 4_வது மனைவியும் ஆனார்கள். இவர்களையும் சுடலைதான் கடத்தி வந்தான்.

சங்கர் சாராயம் குடித்து வந்து கும்மாளம் போடுவது லலிதாவுக்கு பிடிக்கவில்லை. சங்கரின் முரட்டுத்தனத்துக்கு லலிதாவினால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் அவள் சங்கரிடம் இருந்து தப்பித்துச் செல்ல திட்டம் தீட்டினாள். இதே நேரத்தில் லலிதா மீது சுடலைக்கு மோகம் ஏற்பட்டது. சங்கர் வெளியே போன நேரம் பார்த்து லலிதா சுடலையுடன் ஓடிவிட்டாள்.

இருவரும் பல்லாவரத்தில் தங்கி இருந்தார்கள். பிறகு நாங்கள் பல்லாவரம் சென்று சமாதானம் பேசி அவளை அழைத்து வந்தோம். 1987_ம் வருடம் அக்டோபர் மாதம் சுடலை சங்கர் வீட்டுக்கு வந்தான். அன்று அமாவாசை தினம். சுடலையை பார்த்ததும் சங்கருக்கு சரியான ஆத்திரம். அவனை தீர்த்துக்கட்டும்படி என்னிடமும், எல்டினிடமும் கூறினான். அவனுக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுத்து போதை ஏற்றி கழுத்தை நெரித்து கொலை செய்தோம். அவன் பிணத்தை சங்கர் வீட்டிலேயே எரித்தோம்.

இதைத்தொடர்ந்து ஜனவரி (1988_ம் வருடம்) மாதம் லலிதாவை பெரிய வீட்டுக்கு அழைத்து வந்தான். அன்று 11 மணிக்கு இரவு அவளை கழுத்தை நெரித்து சங்கர் கொலை செய்தான். இதை அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் செத்து சுருண்டு விழுந்தாள். "நான் தொட்டவளை இனிமேல் எவனும் தொடக்கூடாது" என்று சங்கர் வெறியுடன் பேசினான்.

சங்கர், பெரியார் நகரில் அம்மன் கோவில் கட்டினான். இலவசமாக சிறுவர்களுக்கு இரவு பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்தான். இலவசமாக எல்லோருக்கும் சாராயம் குடிக்கக் கொடுப்பான். செலவுக்கு பணம் கொடுப்பான். சிறுவர்_சிறுமியர்களுக்கு பிஸ்கட், சாக்லெட்களை அள்ளி அள்ளி வீசுவான். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் கூட்டம் நடத்த நன்கொடை கொடுப்பான்.

திருவான்மியூரில் உள்ள பெரியார் நகர் மக்கள் மத்தியில் சங்கர் ஒரு பெரிய மனிதனாக நடமாடினான். அவனுடைய கொலை ரகசியங்கள் எல்லோருக்கும் தெரியாது. எங்களைச் சேர்ந்த ஒரு சிலருக்குத்தான் தெரியும்."

இவ்வாறு மோகன் கூறினான்.

ஆட்டோ சங்கரின் தந்தை பெயர் தங்கராஜ். தாய் ஜெயலட்சுமி. வேலூரைச் சேர்ந்தவர். இருவரும் கலப்பு திருமணம் செய்தார்கள். ஜெயலட்சுமி கணவரை விட்டு பிரிந்து சென்று வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார்.

ஆட்டோ சங்கருக்கு சீதாலட்சுமி என்கிற கவிதா, ஹேமசுந்தரி என்ற 2 மகள்களும், சீனிவாசன், டெல்லி சுந்தர் என்ற 2 மகன்களும் இருந்தனர்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


12 கருத்துகள்:

  1. பெயரில்லா19 அக்., 2010, 2:06:00 PM

    miga nalla padhivu

    பதிலளிநீக்கு
  2. nalla eluththu nadai...nenga sekkiran pirapala pathivar aga valththukkal

    பதிலளிநீக்கு
  3. hi friend interesting narration. I am eager to know about the present situation of Sankaar family members?

    பதிலளிநீக்கு
  4. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது ஆட்டோ சங்கர் கொலை வழக்கு மிகவும் பிரபலம். இத்தனை வருடம் கழித்து படிக்க நேரும் போது பழைய நினைவுகளில் மூழ்க வேண்டியதாகி விட்டது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா19 அக்., 2010, 8:55:00 PM

    NANDRU THODARNTHU ELUTHAVUM

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா19 அக்., 2010, 10:45:00 PM

    yes i ve voted. nalla irukku.
    i was in 9th std .at that time we were not alloewd to read these articles in the paper those days .thanks 4 da details

    பதிலளிநீக்கு
  7. நக்கீரனின் புத்தகம் படித்த விளைவோ...

    பதிலளிநீக்கு
  8. செல்வா அவர்கள் சொன்னது nalla eluththu nadai...nenga sekkiran pirapala pathivar aga valththukkal///
    ரொம்ப நன்றிங்க....ஆனால் இது என்னோட எழுத்து இல்லைங்க...இந்த தலைமுறையினர் படிக்கட்டும் என்பதற்காக வேறொரு பத்திரிகையிலிருந்து சுட்டு போட்டது.ஆனால் இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்பதை நான் எதிர்பார்கவில்லை.

    பதிலளிநீக்கு
  9. தலைவரே... உண்மையிலேயே புதுப்பேட்டை போன்ற கிரிமினல் படங்களை மிஞ்சி விட்டது ஆட்டோ சங்கரின் வாழ்க்கை. சில ஆண்டுகள் ஆட்டோ சங்கர் இருந்த திருவான்மியூர் பகுதியில் வாழ்ந்திருக்கிறேன் என நினைக்கும்போது மனம் லேசாக சங்கடப்படுகிறது.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.