என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, செப்டம்பர் 03, 2010

1 முரண்பாடுகள்

-

(இது கடந்த வருடம் யூத்புல் விகடனில் வெளியான என் சிறுகதைகளில் ஒன்று.)

கோவிலில் கமலாவும் சந்திராவும் சந்தித்துக்கொண்டார்கள்.

"என்ன கமலா ஆளையே பார்க்க முடியல?"

"என்ன ஒரே நேரத்துல ரெண்டு கல்யாணம்ன்னா சும்மாவா? என் மகன் கல்யாணத்த தனியாவும் மக கல்யாணத்த தனியாவும் நடத்தற மாதிரிப்போச்சு. சும்மாவா சொன்னாங்க, அந்த காலத்துல. வீட்டிக்கட்டிபாரு கல்யாணத்த பண்ணிப்பாருன்னு."

"அதான் நல்லவிதமா பண்ணிட்டியே அப்புறம் என்ன கவலை?"

"நீ ரொம்ப சுலபமா சொல்லிட்டே. எனக்குத்தானே தெரியும் அந்த கஷ்டம். நகை நட்டு சீறு செனத்தின்னு ஒன்னொன்னா வாங்குறதுக்குள்ளே போதும்போதும்ன்னு ஆச்சு. அதான் கல்யாணம் முடிஞ்சதும் ரெண்டு மாசம் நிம்மதியா இருப்பமேன்னு என் பெரிய மகன் வீட்டுக்கு திருச்சிக்கு போயி தங்கிட்டு, போன வாரந்தான் வந்தேன்."

"அதானே பார்த்தேன். எப்படியும் வெள்ளிக்கிழமை அன்னிக்கு கோவிலுக்கு வந்துடுவியே. கொஞ்ச நாளா காணாமேன்னு நினச்சேன். சரி புதுசா கல்யாணமான உன் மக எப்படி இருக்கா?"

"நல்லபடியா இருக்கா. மாப்பிள்ளை எந்த நேரமும் அவளயே சுத்தி வர்றாராம். தலைவலின்னாலே துடிச்சு போயிடறாராம். என் மக நாடகமெல்லாம் விரும்பி பார்ப்பங்கறதுக்காக புதுசா இன்னொரு டி.வி. வாங்கிட்டாராம். ஏற்கனவே ஒரு டி.வி. இருக்கு. அதுல அவ மாமியா ஏதாவது படம் பார்த்துட்டே இருப்பாங்களாம். வயசான காலத்துல என்ன படம் வேண்டிகிடக்குன்னு புரியல. சம்பளம் வாங்கற மறு நிமிஷமே மாப்பிள்ளை இவகிட்ட கொடுத்துடுறாராம் அவ மாமியாரே கை சிலவுக்கு இவகிட்டத்தான் கேட்க்குறாங்கன்னா பார்த்துக்கவே?"

"உன் மகள் உண்மையிலேயே கொடுத்துவச்சவதான். இந்த மாதிரி புருஷன் கிடைக்க தவம் செஞ்சுருக்கணும்."

"அவ நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாத்தான் நடக்கும்."

"ஆமா, உன் மகளப்பத்தியே சொல்றியே... உன் புது மருமகளை பத்தி ஒண்ணுமே சொல்லலியே?"

" என்னத்த சொல்ல.... வந்த ரெண்டு மாசத்துல அப்படி என்னதான் சொக்குப்பொடி போட்டாளோ என்ன எழவோ, எந்த நேரமும் என் மகன் அவ முந்தானையே பிடிச்சுக்கு திரியுறான். நேத்து இப்படிதான் லேசா தலைவலின்னா அவள். அதுக்கு இவன் பண்ண ஆர்பாட்டம் இருக்கே தாங்க முடியல சந்திரா. டாக்டருக்கு போன் பண்றான். கசாயம் வச்சு தரட்டுமாங்குறான். தைலம் தேச்சு விடவாங்கறான். ஒரு ரூபா மாத்திரையிலே முடிக்க வேண்டிய விசயத்துக்கு டாக்டர் பீஸ் அம்பது ரூபா தண்டம். இப்பல்லாம் சம்பளம் வாங்குன மறு நிமிசமே அவகிட்ட கொடுத்துட்டுதான் மறுவேலை பார்க்கறான்.

எனக்கு ஏதாவது சிலவுக்கு வேணும்ன்னாலே அவகிட்டதான் வெட்கத்தை விட்டு கேக்கற மாதிரி இருக்கு. பெத்த அம்மாவ இப்படி கையேந்த விடற அளவுக்கு அவனை மாத்திப்புட்டா அந்த சிறுக்கி. அன்னைக்கு பண்ணி கூத்த கேட்டேன்னு வச்சுக்க... அது அத விட கொடுமை. வயசான காலத்துல நமக்கு வேற என்ன பொழுது போக்கு இருக்குன்னு டி.வி.ல ஏதாவது பழைய படம் போட்டா பார்ப்பேன். அவ நாடகம் விரும்பி பார்ப்பாளாம். நான் எந்த நேரமும் படம் பார்த்துக்கு இருக்கேங்கறதுக்காக என்ன சொன்னாளோ... தெரியல. அடுத்த நாள் பார்த்தா புதுசா ஒரு டி.வி. வாங்கிட்டு வந்துட்டான். பெரிய ஜமீன்வீட்டு பொண்ணு. நாடகம் பார்க்காம இருக்கமாட்டா போல. என்னத்த சொல்ல... அவ பேச்சுக்கு இப்படி ஆடறான்" - என்று
சலித்து கொண்டாள் கமலா.


Post Comment

இதையும் படிக்கலாமே:


1 கருத்து:

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.