என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், செப்டம்பர் 07, 2010

3 ராகுல்- விஜய் சந்திப்பு. பேச்சின் முழு விபரம்- வெளிவராத தகவல்கள்.


ராகுல்- விஜய் சந்திப்பில் அவர்கள் என்ன பேசினார்கள் என்று இவ்வளவு நாளுக்கு பிறகு தகவல்கள் கசிந்துள்ளது(கற்பனையாகத்தான்). அதன் முழு விபரம்.
புதுடெல்லியில் தங்கபாலு, இளங்கோவன் போன்ற தமிழக தலைவர்களுடன் அகில இந்திய இளைஞர் காங்கிரசின் தலைவர் ராகுல் காந்தி அமர்ந்திருக்கிறார். அப்போது அங்கு நடிகர் விஜய் வருகிறார்.

ராகுல்; வாங்க விஜயகாந்த் , எப்படி இருக்கீங்க?

(அப்போது பக்கத்திலிருக்கும் தங்கபாலு, ராகுலின் காதில் மெதுவாக...)
"தலைவரே இவரு விஜய்காந்த் இல்லை.விஜய் "என்கிறார்.உடனே ராகுல் சுதாரித்துக்கொண்டு...

ராகுல்: இப்ப எல்லோரும் விஜயகாந்தை பத்தியே பேசுறாங்களா அதான் டங்க் சிலிப்பாயிடுச்சு. வாங்க விஜய்

விஜய்: நீங்க வரச்சொன்னதா இளங்கோவன் சொன்னாருங்கண்ணா அதான்...

ராகுல்: ஆமாம், உங்களைப்பத்தி தங்கபாலு, இளங்கோவன் எல்லாம் நிறைய சொல்லிருக்காங்க. தமிழ்நாட்டுல இருக்கிற தாதா, ரவுடியை எல்லாம் ஓட ஓட விரட்டறீங்கலாமே சினிமாவுல

விஜய்: ஆமாங்கண்ணா, தமிழ்நாடு அமைதிப்பூங்காவ இருக்கறதுக்கு ஏதோ நம்மால ஆனா சிறிய உதவி.
எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ணமாட்டோமா?

(அப்போது இளங்கோவன் மனதுக்குள்" இவரு தொடர்ந்து நடிச்சாருன்னா தமிழ்நாட்ட விட்டு தாதா மட்டுமில்லை மக்களும் ஓட வேண்டியதுதான்").

ராகுல்; இந்த சமூக அக்கறைதான் என்னை உங்க பக்கம் திரும்ப வச்சுச்சு. உங்க மாதிரி துடிப்பான இளைஞர் தான் எங்க கட்சிக்கு தேவை. நீங்க பேசாம எங்க கட்சிக்கு தமிழ்நாடு கிளைக்கு தலைவராகிடுங்களேன்.

விஜய்: எந்த கோஷ்டி தலைவராகண்ணா...

ராகுல்: அட, இப்ப இருக்கற ஐம்பது கோஷ்டியில நீங்க அம்பத்தி ஒண்ணாவது கோஷ்டி தலைவரா இருங்களேன். யாரு வேணாங்கறது. அப்படி நீங்க எங்க கட்சியில சேர்ந்தா... மேற்கு வங்காளம், குஜராத், கேரளா, கர்நாடகான்னு எதிர்கட்சி ஆள்கிற மாநிலத்துல உங்க படத்தை வெளியிடற பொறுப்பை நாங்க ஏத்துக்கறோம்.

விஜய்: அதென்ன எதிர்கட்சி ஆளுற மாநிலத்துல மட்டும்...

ராகுல்; அவங்கதானே எங்க கட்சிக்கு ஓட்டு போடல. அதுக்கு தண்டனையா உங்க படத்தை பார்த்துட்டு நரக வேதனை அனுபவிக்கட்டும். அடுத்த தேர்தல்ல எங்களுக்கு ஓட்டு போடலைன்னா உங்க படத்த வெளியாக்குவோம்ன்னு சொல்லி மிரட்டியே வோட்டு வாங்கிருவோம்ல...

விஜய்: அவ்வளவு மோசமாவா நான் நடிக்கறேன். என் படத்தை நீங்க பார்த்திருக்கீங்களா?

ராகுல்: என்ன இப்படி கேட்டுட்டீங்க...நீங்க வழுக்கைத்தலை கெட்டப்புல ஆட்டோ டிரைவரா நடிச்சுருப்பீங்களே காதல் கோட்டை படம் அது சூப்பருங்க. அதுல பார்த்ததுக்கும் நேர்ல பார்க்கறதுக்கும் எவ்வளவு வித்தியாசம் உங்கட்ட...

விஜய்: அய்யய்யோ அது நான் இல்லைங்கண்ணா...அவரு தலைவாசல் விஜயிங்கன்னா...நான் எப்போதும் ஒரே கெட்டப்புலதான்னா நடிப்பேன். பாட்டுக்கு மட்டும் முடிய கலரிங் பண்ணிட்டு வருவேன். இல்லாட்டி விக் வச்சுக்கு வருவேன். நான் அதிக பட்ச்சமா போட்டிருக்கற கெட்டப் அதுதானுங்கன்னா...

(அப்போது இளங்கோவன் மனதுக்குள்..'கெட்டப் மட்டுதான் ஒரே கெட்டப்பா. கதையும் கூட ஒரே கதைதான்)

ராகுல்: அப்படியா இப்ப கமல், அஜீத், சூர்யா, விக்ரம் எல்லாம் கெட்டப்ப மாத்தி நடிக்கறாங்களா அதான் நீங்களும் அப்படி நடிச்சு இருப்பீங்களோன்னு குழம்பி போயிட்டேன். என் சகோதரி பிரியங்கா கூட உங்களை பத்தி சொல்லீருக்காங்க

விஜய்: அப்படியா என்ன சொன்னாங்க?

ராகுல்: அவங்க குழந்தைகளுக்கு டி.வி-இல உங்க பாட்டை போட்டுத்தான் சோறு ஊட்டுவாங்கலாம்

விஜய்: குட், அவங்களும் என்னோட ரசிகர்கள்தானா?

ராகுல்: அதான் இல்லை. நீங்க இப்ப சாப்பிடாட்டி இந்த அங்கிளோட முழுப்படத்தையும் பார்க்க வச்சுடுவேன்னு சொல்லி மிரட்டியே சோறு ஊட்டுவாங்கலாம்.

விஜய் மனதுக்குள்'ஆஹா.. நம்மள வச்சு காமெடி கீமெடி பண்ணுறாங்களோ... தேவையில்லாம இங்கே வந்து மாட்டிக்கிட்டோமோ?'
அப்போது விஜயின் செல்போன் அடிக்கிறது.

விஜய்: ஹலோ...ஆமாம். விஜய்தான். சொல்லுங்க...என்னது கன்னியாகுமரியில இருக்கற ரவுடிகளை கடல்வழியா அந்தமானுக்கு அனுப்பற மாதிரி கதை இருக்கா. இது நல்ல இருக்கே. வெயிட் பண்ணுங்க நாளைக்கு வந்து முழுக்கதையும் கேக்கறேன்.

(ராகுல் பக்கம் திரும்பி ...)"அண்ணா...எனக்காக ஒரு டைரக்டரு கதையோட வெயிட் பண்னறாரு. நான் இப்பவே பிளைட் பிடிச்சு கிளம்பனும். இன்னொரு நாளைக்கு நாம சந்திக்கலாம். என்றபடி எஸ்கேப் ஆகிறார்.

Post Comment

இதையும் படிக்கலாமே:


3 கருத்துகள்:

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.