என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

1 இடைத்தேர்தல்களும் மக்களின் வரிப்பணமும்

(குறிப்பு: கடந்த வருடம் நாடாளு மன்றத்தேர்தல் சமயத்தில் யூத்புல் விகடனில் நான் எழுதி வெளிவந்து பரவலான வரவேற்ப்பை பெற்ற கட்டுரை, மீண்டும் உங்களின் பார்வைக்கு...)
ந்தப் பொதுத்தேர்தல் முடிந்த பிறகு தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் திருவிழா களைகட்டப்போகிறது.
இந்த கட்சியிலிருந்து அந்த கட்சிக்கும், அந்த கட்சியிலிருந்து இந்தக்கட்சிக்கும் முகாம் மாறியதால் தத்தம் சட்ட மன்ற உறுப்பினர் பதவிலிருந்து ராஜினாமா செய்து காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது.

ஒவ்வொரு தொகுதியின் வாக்காளர்களையும் பிச்சைக்காரர்களாக்க... மன்னிக்கவும், வாக்களிப்பதற்காக கொடுக்கப்படும் ஐந்நூறு, ஆயிரங்களுக்குக்காக கையேந்த வைக்க அனேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் அந்தந்த தொகுதிகளில் முதலீடு செய்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கும்.
நான் இங்கு முதலீடு என்று சொல்வதற்கு காரணம் இல்லாமலில்லை!
ஜெயிக்கும் வேட்பாளர்கள்தான் தன் பதவிக் காலத்தில் தேர்தலில் முதலீடு செய்த பல கோடிகளை வட்டியும் முதலுமாக... ஏன் அதைவிட அதிகமாக சம்பாதித்துவிடுகிறார்களே? அதற்கு மட்டுமே தனிக்கட்டுரையே எழுதலாம். நான் அதை விடுத்து விஷயத்துக்கு வருகிறேன்.
இந்த அரசியல்வாதிகள் தன் பதவிக்காலம் முடியும் முன்னரே என்ன காரணத்துக்காக ராஜினாமா செய்கிறார்கள்? தன் தொகுதியில் நலதிட்டப்பணிகள் ஏதும் அரசாங்கம் செய்யவில்லை என்றா? அல்லது தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு தன்னால் எந்த நன்மையும் செய்ய முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சியிலா என்று பார்த்தால் இவை இரண்டுமே இல்லை.
மேற்சொன்ன ஏதேனும் ஒரு காரணத்துக்காக இவர்கள் ராஜினாமா செய்திருந்தால் கூட, மக்கள் மத்தியில் இவர்களின் மதிப்பும் மரியாதையும் கூடி இருக்கும். ஆனால், இவர்களோ அந்தக் கட்சியில் எனக்கு மரியாதை இல்லை என்ற சொத்தை காரணத்தை சொல்கிறார்கள். ஆனால் இவர்களால் சொல்ல முடியாத காரணமும் உண்டு என்று நமக்கு விளங்காதது அல்ல. அதாவது அந்த கட்சியால் எங்களுக்கு வருமானமில்லை என்பதே அந்த சொல்லமுடியாத காரணம்.
நமக்காக நம் தொகுதிக்காக எதாவது இவர் செய்வார் என்று நம்பி வாக்களித்த மக்களின் நம்பிக்கையை பொய்யாக்கிவிட்டு என்ன தைரியத்தில் இவர்கள் ராஜினாமா செய்கிறார்கள் என்று பார்த்தால், அவர்கள் இப்போது சேர்ந்த கட்சி மீண்டும் தமக்கு போட்டியிட வாய்ப்பளிக்கும் என்ற நம்பிக்கையில்தான். சொன்னது போல மீண்டும் அதே தொகுதியில் அவர்களும் போட்டியிடுகிறார்கள்.
இதனால், இடைதேர்தல் நடத்தவேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு. இதன் மூலம் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டும். பதவிக்காலம் முடியும் முன்னரே ஒரு எம்.பி.யோ, எம்.எல்.ஏ-வோ தன் பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில் மீண்டும் இரண்டு தேர்தல்களில் அவர்கள் போட்டியிட தடை விதிக்க வேண்டும். அது, நாடாளுமன்ற தேர்தலோ அல்லது சட்டமன்ற தேர்தலோ அல்லது உள்ளாட்சிமன்ற தேர்தலோ எதுவாக இருந்தாலும் சரி. அடுத்து அந்த தொகுதியில் தேர்தல் நடத்த ஆகும் செலவு முழுவதையும் அந்த அரசியல்வாதியிடம் வசூலிக்க வேண்டும் (இடைதேர்தலே அவரால்தானே நடக்கிறது).
அதேபோல் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒரு தொகுதி தவிர மற்ற தொகுதிகளுக்கான டெபாசிட் தொகையை அதிகரிக்க வேண்டும். அப்படி அவர்கள் இரு தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் ஜெயித்து மற்றொன்றில் தோல்வியடைந்தால் பிரச்னை இல்லை. மாறாக, அவர்கள் இருதொகுதியிலுமே வென்றுவிட்டால், ஏதேனும் ஒன்றை ராஜினாமா செய்து, அதனால் நடத்தப்படும் இடைதேர்தலுக்கான முழு செலவையும் ராஜினாமா செய்தவர் ஏற்கவேண்டும். எம்.எல்.ஏ., பதவியில் இருப்பவர் எம்.பி., பதவிக்கோ, எம்.பி., பதவியில் இருப்பவர் எம்.எல்.ஏ., பதவிக்கோ போட்டியிடக் கூடாது (இதன் மூலம் ஓர் இடைதேர்தல் தவிர்க்கப்படுகிறது) என்பது போல தேர்தல் ஆணையம் சட்டம் இயற்றினால் இடைதேர்தல் மூலம் செலவிடப்படும் மக்களின் வரிப்பணத்தை காப்பாற்றிய பெருமை தேர்தல் ஆணையத்துக்கு கிடைக்கும்.
(பின் குறிப்பு: இவர்கள் கட்சி மாறுவதால் இப்போது வகிக்கும் எம்.எல்.ஏ., பதவியோ, எம்.பி., பதவியோ காலியாகாது. ஒருவரே இரு தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.,வாகவோ அல்லது எம்.பி.,யாகவோ தொடரலாம். ஒருவரே (மலேசியா போன்ற நாடுகளில் இருப்பது போல) ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ.-வாகவும், மற்றொரு தொகுதியில் எம்.பி.-யாகவும் தொடரலாம் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்தால் இடைத் தேர்தல்களை தவிர்க்கலாம். அது இன்னும் நன்று.
(இதை விகடனில் படிக்க இங்கே தட்டவும்)

Post Comment

இதையும் படிக்கலாமே:


1 கருத்து:

  1. ஆம் சகோதரா தேர்தல் என்றாலே ஒருவித உற்சாகம் வருகுது. நான் சொல்வது இலங்கையில்.... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.