என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

4 தனிக்குடித்தனம்

(கடந்த வருடம் யூத்புல் விகடனில் வெளிவந்த என் சிறுகதைகளில் ஒன்று)
வீட்டு வாசலி ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து கையில் பெட்டியுடன் இறங்கிய
திலகாவை பார்த்ததும் நிலைமையின் விபரீதம் புரிந்தது அவள் அம்மா பார்வதிக்கு.
"வாம்மா திலகா. என்ன நீமட்டும் வாறே? மாப்பிள்ளை வரலே?"
" அந்த ஆளோட இனி ஒரு நிமிஷம் நான் வாழ மாட்டேன். இனிமே அவரப்பத்தி பேசாதே?"
"ஏம்மா, உனக்கும் மாப்பிள்ளைக்கும் என்ன பிரச்சினை?....."
"அம்மா. அதான் அவரப்பத்தி பேசாதேன்னு சொல்லிட்டேன்ல. அப்புறம் ஏன் பேசறே?"
"இல்லம்மா, மாப்பிள்ளை நல்லவராச்சேன்னு...."
"அப்ப, பெத்த புள்ளை நான் உனக்கு கெட்டவளா போயிட்டேன். அப்படித்தானே?
இங்கேபாரும்மா. உனக்கு இஷ்டமிருந்தா நான் இங்கே இருக்கேன். இல்லாட்டி விடு நான்
வேற எங்காவது போய் தொலையுறேன்."
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த திலகாவின் அண்ணி சுமா,
"விடுங்க அத்தே. வந்ததும் வராததுமா திலாகாட்ட கேள்வி கேட்டுக்கு. நீ வா திலகா.
சாப்பிட்டியா இல்லையா? என்ன சப்பிடுறே?"
"ஒன்னும் வேணாம் அண்ணி. அண்ணன் இன்னும் ஆபீஸ்லேர்ந்து வரலையா?"
"வர்ற நேரந்தான்" -என்று சுமா சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அண்ணன் ஜீவா உள்ளே
நுழைந்தான்.
"இதோ உங்க அண்ணனே வந்தாச்சே. அவருக்கு நூறு ஆயிசு"
"அடடே. வா திலகா. எப்ப வந்தே?"- என்று ஜீவா கேட்டான்.
"இப்பத்தான்னே."
"என்னம்மா விஷேசம்? மாப்பிள்ளை வரலே?"
"அதைத்தாண்டா நானும் வந்ததிலேர்ந்து கேக்குறேன். சொல்லாம என்கிட்டே சண்டைக்கு
வர்ரா"-இது பார்வதி.
"ஒன்னும் இல்லண்ணே.அவரு அம்மாவோடு தினமும் பிரச்சினை. ஒரு நாள் கூட நிம்மதியாஇருக்க முடியல. தொட்டதுக்கெல்லாம் குத்தம் சொல்லுது கிழம். அதான் அவருட்ட சொல்லி தனிக்குடித்தனம் போகலாம்ன்னு சொன்னா கேக்க மாட்டேங்குறாரு. நானும் எவ்வளவோ சொல்லிப்பார்த்துட்டேன். அசஞ்சு கொடுக்கற மாதிரி தெரியல.. பார்த்தேன். இனிமே உங்க அம்மாவோடும் உங்களோடும் குப்பை கொட்ட என்னால முடியாதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன்."
"இதெல்லாம் ஒரு பிரச்சினையா. இது எல்லோர் வீட்டிலும் நடக்கறதுதான்.
இதுக்குப்போயா கோவிச்சுக்கு வந்தே. நல்ல பொன்னுமா நீ."
"என்னன்னே நீயும் இப்படி சொல்றே?"
"பின்ன என்னம்மா. நீ எங்காவது தனிக்குடித்தனம் போனா. அந்தம்மா வயசான காலத்துல
எங்கே போவாங்கன்னு யோசிச்சியா?"
"அந்த கிழவி மட்டும் இருந்து வீட்ட ஆளட்டும்.இல்லாட்டி அதான் முதியோர் இல்லம், ஆசிரமம்ன்னு ஆயிரம் இருக்கே. அதுல ஒன்னுல போயி இருக்கட்டும். யாரு வேணாம்ன்னு சொன்னது?".
"நீ இப்ப கோபத்துல இருக்கே. நான் இப்ப எது சொன்னாலும் உனக்கு புரியாது. அப்புறம் பேசிக்குவோம்" உள்ளே போனான் ஜீவா. அவன் பின்னால் போனாள் சுமா.
"ஏண்டி அவதான அறிவுகெட்டத்தனமா பேசுறான்னா நீயும் கேட்டுக்கு இருக்கியே. நல்ல புத்தி சொல்லி அனுப்பாம....."
" அவ இப்பதானே பிரச்சினை என்னன்னு சொல்கிறாள்."
" சரி இப்ப ஒன்னும் கெட்டுப்போயிடல. வந்தது வந்துட்டா. இன்னைக்கு இங்கே இருக்கட்டும். நாளைக்கு அவ வீட்டுக்கு அனுப்பற வழிய பாரு. நான் போயி மாப்பிள்ளைட்ட விசாரிச்சுட்டு வாறேன்" வெளியில் கிளம்பினான் ஜீவா.
"நான் கடை வரைக்கும் போயிட்டு டீத்தூள் வாங்கிட்டு வந்துடறேன் சுமா"- என்றபடி பார்வதியும் வெளியில் கிளம்பினாள்.
"அண்ணி நான் செஞ்சது தப்பா? அந்த கிழவியோடு தினமும் சண்டை போட்டு போட்டு என் நிம்மதில்லாம் போச்சேன்னுதான் நான் தனிக்குடித்தனம் போவோம்ன்னு சொன்னேன். இது தப்பா அண்ணி?"
"சேச்சே...இது தப்புன்னு யாரு சொன்னது. எனக்குக்கூட என் மாமியார் அதான் திலகா...உன் அம்மா தொல்லை தாங்க முடியல. நானும் தனிக்குடித்தனம் போகணும்ன்னு ரொம்ப நாளா நினைச்சுக்கு இருந்தேன். இதை எப்படி உன் அண்ணன்கிட்ட சொல்றதுன்னு
தெரியாம தவிச்சுக்கு இருந்தேன். நல்ல வேளை நீ வந்தே. உன் ஐடியாவ நானும் பின்பற்றிட வேண்டியதுதான்."- என்றவாறு துணிகளை எடுத்து பேக்கில் அடுக்கினாள் சுமா.
"நீங்க எங்கே கிளம்பறீங்க அண்ணி"
" வேறு எங்கே என் அம்மா வீட்டுக்குத்தான். உனக்கு உன் அம்மாவீடு. எனக்கு என் அம்மாவீடு. இப்ப உன் அண்ணன் வரட்டும் ரெண்டுல ஒன்னு கேட்டுட்டு, ஒத்து வரலேன்னா நானும் கிளம்ப வேண்டியதுதான்."
"நீங்க இப்படி சொல்லிட்டா, வயசான காலத்துல எங்கம்மா எங்கே போவாங்க அண்ணி?"
"அதான் நீயிருக்கியே சமைச்சு போடு திலகா"
"எனக்கு முடியாது அண்ணி. நான் இப்பவே என் வீட்டுக்கு கெளம்புறேன்."
"என்ன திலகா இப்படி சொல்றே? நீ கொடுத்த தைரியத்துல தான் நான் தனிக்குடித்தனம் போகலாம்ன்னு நினைச்சேன். நீ என்னடான்னா பிளேட்ட திருப்புறே"
"இல்லைன்னி. அண்ணன் சொன்னமாதிரி நான் அவசரத்துல முடிவு எடுத்துட்டேன். இப்பவே கிளம்புறேன். போயி ராத்திரிக்கு சமைக்கணும்"
"இரு திலகா ஒரு டீ சாப்பிட்டு போ"
"வேணாம். நான் கிளம்பறேன். நேரமாச்சு."- பதிலுக்கு காத்திராமல் விருட்டென்று கிளம்பிப்போனாள் திலகா.
சிறிது நேரத்தில் வீட்டுக்கு திரும்பினான் ஜீவா.
"என்ன சுமா. எங்கே திலகா?"
"அவ அவளோட வீட்டுக்கு போயிட்டா"
"அவ போயிட்டாளா. நீ என்ன சொல்லி அனுப்பினே?"
"சும்மா சின்னதா ஒரு டிராமா போட்டேன். கிளம்பிட்டாள்"
"அப்படி என்னடி டிராமா?. இவ்வளவு கோவமா இருந்தவ மனசு மாறும் அளவுக்கு?"
நடந்ததை சொன்னாள் ரமா.
"அடேங்கப்பா நீ பயங்கரமான ஆளுடி. நிஜமா நீயும் இப்படி கெளம்பிடாத. அப்புறம் என் பாடு திண்டாட்டம் ஆகிடும்"- என்றவாறு சுமாவை கட்டியணைத்தான் ஜீவா.


Post Comment

இதையும் படிக்கலாமே:


4 கருத்துகள்:

  1. சூப்பர் கதைங்க...... பக்கம் பக்கமாக அறிவுரை சொல்லி இருந்தால் கூட, புரிந்து இருக்காததை, பட்டுன்னு புரிய வைச்சிட்டாங்களே.....

    பதிலளிநீக்கு
  2. சித்ராக்கா நீங்கள் எல்லாம் பதிவுலகில் ரொம்ப சீனியர். என் கதையையும் படித்துவிட்டு பின்னூட்டமிட்டதற்கு ரொம்ப நன்றிக்கா.

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அருமையான கதை வாழ்த்துக்கள் சகோதரா...

    பதிலளிநீக்கு
  4. கருத்துக்கு நன்றி ம.தி.சுதா :))

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.