என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

சனி, ஆகஸ்ட் 28, 2010

1 பஸ்(அரைப்பக்க சிறுகதை)

ணி இரவு பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. ரவி பஸ் ஸ்டாண்ட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்து கொண்டிருந்தான். அவன் ஊருக்கு செல்வதற்கு பத்து மணிக்குத்தான் கடைசி பஸ். அதை விட்டால் அடுத்த நாள் காலையில்தான் போகமுடியும்... டாக்சியோ, ஆட்டோவோ எடுத்தால், அங்கிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அவன் ஊருக்கு செல்வதற்கு இருநூறு ரூபாய்க்கு மேல் கேட்பார்கள். அதிலும் இரவு நேரம் என்பதால் அவர்கள் சொல்வதுதான் கட்டணம்.
சரி, இங்கிருக்கும் ஏதாவது ஒரு லாட்ஜ்ஜில் தங்கலாம் என்றாலும் முடியாது. வீட்டில் அவன் மனைவியும் பிள்ளைகளும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
'கடவுளே, என் தம்பி கல்யாணத்துக்கு பத்திரிகை கொடுக்க வந்த எனக்கு இப்படியொரு சோதனையா' என்று நினைத்துக் கொண்டே மணியை பார்த்தான். அது பத்துக்கு ஒரு நிமிடம் குறைவாக காட்டியது. தன் நடையை இன்னும் துரிதப்படுத்தினான்.
'கடவுளே, பஸ்ஸை இன்னும் எடுத்திருக்கக் கூடாது. டிரைவருக்கோ, கண்டக்டருக்கோ வயிறு சரியில்லாமல் டாய்லட்டுக்கு போயிருக்கணும். அல்லது பஸ் டயர் பஞ்சராகி அதை மாற்றுவதில் தாமதமாகிவிடணும்' என்று பஸ் லேட்டாக எடுக்க வேண்டும் என்பதற்க்கான பல பல காரணங்களை யோசித்துக் கொண்டே பஸ் ஸ்டாண்ட்டுக்குள் நுழைந்தவன் பஸ்ஸை தேடினான்.
தூரத்தில் அவன் ஊர் போகும் பஸ் நின்றது.
'அப்பாடா, நல்லவேளை பஸ் கிளம்பலை' என்று நினைத்துக் கொண்டே பஸ்சில் ஏறி அமர்ந்தான்.
பஸ்சில் சொற்ப பேரே இருந்தனர். அதில் ஒருவரிடம் விசாரித்தான் ரவி.
"ஏங்க, மணி பத்த தாண்டிருச்சே. இன்னும் பஸ்ஸை எடுக்கலே?"
"ஆமாங்க. டிரைவரும், கண்டக்டரும் சாப்பிட போயிருக்காங்க. இன்னும் வரலே."
"இவங்களுக்கு இதே வேலையா போச்சு. பத்து மணியானா டாண்ணு பஸ்ஸை எடுத்திடணும்... அப்படி எடுத்திருந்தால் இந்நேரம் பாதி தூரம் போயிருக்கலாம். ச்சே..." என்று அலுத்துக் கொண்டான் ரவி


Post Comment

இதையும் படிக்கலாமே:


1 கருத்து:

  1. இப்படித்தான் சகோதரா யாருக்கு மே சமூகப் பொறுப்பில்லை.... கதை அருமை வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.