என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

சனி, நவம்பர் 27, 2010

4 அதென்ன மிசா அல்லது எமர்ஜென்சி-பாகம்-6

கணவர் பெரோஸ் காந்திக்கு மாரடைப்பு ஏற்பட்டு வெலிங்டன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதே அந்தத் தகவல். பெரோஸ் காந்திக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. இது இரண்டாவது முறை. விமான நிலையத்திலிருந்து நேராக ஆஸ்பத்திரிக்கு விரைந்தார், இந்திரா.

அங்கு இந்திரா காந்தியின் உதவியாளர் உஷா பகத் உள்பட பலர் இருந்தனர். பெரோஸ் காந்திக்கு விட்டு விட்டு உணர்வு திரும்புவதாகவும், அப்போதெல்லாம் "இந்து எங்கே?" என்று அவர் கேட்பதாகவும் உஷா கூறினார். இதைக்கேட்டு இந்திரா கண் கலங்கினார். அன்று பகலில், நெஞ்சு வலிப்பதாக தன்னுடைய நண்பரான டாக்டர் கோசலாவுக்கு பெரோஸ் டெலிபோன் செய்திருக்கிறார். உடனே ஆஸ்பத்திரிக்கு வருமாறு அவர் கூறியிருக்கிறார். பெரோஸ் வந்ததும், டாக்டர் கோசலா மருத்துவ பரிசோதனை தொடங்கியுள்ளார்.

பரிசோதனை நடந்து கொண்டு இருக்கும்போதே, பெரோஸ் உணர்வு இழந்துவிட்டார். அன்றிரவு இந்திரா தூங்கவில்லை. கணவர் படுக்கை அருகிலேயே இருந்தார். விடியற்காலை 4.30 மணிக்கு பெரோஸ் காந்தி கண் விழித்துப் பார்த்தார். கண்களில் கண்ணீருடன் வாடிய முகத்துடன் இந்திரா சோகத்துடன் அமர்ந்திருப்பதைக் கண்டார். "இந்து! கவலைப்படாதே, போய் ஏதாவது சாப்பிடு" என்று கூறினார். ஆனால் இந்திரா சாப்பிட மறுத்துவிட்டார். பெரோஸ் காந்தி மீண்டும் நினைவு இழந்தார். இந்திரா துயரத்துடன் கணவர் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். காலை 7.45 மணிக்கு நினைவு திரும்பாமலேயே பெரோஸ் காந்தியின் உயிர் பிரிந்தது. 48வது பிறந்த நாளுக்கு நான்கு நாள் இருக்கும்போது பெரோஸ் மரணம் அடைந்தார்.


ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது முதலே இந்திரா காந்தி மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இந்திரா காந்தி வெளிநாட்டுக்கு ஓடிப்போய் விடுவார் என்று கூறி அவருடைய பாஸ்போர்ட்டை முடக்கி வைத்தது. உண்மையில் நேரு இறந்த பின் அரசியலை விட்டு விலகி லண்டனில் குடியேற இந்திரா திட்டமிட்டார். அதை தடுத்து நிறுத்தியவர் காமராஜர்.

"உங்கள் சேவை நாட்டுக்குத் தேவை" என்று கூறி அவர் மனதை மாற்றி சாஸ்திரி மந்திரிசபையில் இடம் பெறச்செய்தார். சாஸ்திரி இறந்ததும் இந்திராவை பிரதமராக்கினார். தேர்தலில் தோற்ற இந்திரா காந்தி அரசியலை விட்டு ஒதுங்க நினைக்கவில்லை. நெருக்கடி நிலையின்போது நடந்த தவறுகளுக்காக மனம் வருந்தியதோடு மீண்டும் மக்களின் ஆதரவைப் பெற கடுமையாக உழைக்கத் தீர்மானித்தார்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது சப்தர்ஜங் ரோட்டில் 1_ம் எண் வீட்டில் வசித்து வந்தார். இது பிரதமருக்குரிய பெரிய பங்களா அல்ல. மந்திரிகள் அல்லது அதிகாரிகளுக்கு உரிய வீடுதான். அங்கு மொரார்ஜி தேசாய் குடி வர விரும்புவதாகவும் எனவே வீட்டை உடனே காலி செய்யும்படியும் இந்திராவிடம் அதிகாரிகள் கெடுபிடி செய்தனர். தன் மகன்களுடனும் மருமகள்களுடனும், பேரக்குழந்தைகளுடனும் ஒரே வீட்டில் வசித்து வந்த இந்திரா, எங்கே குடிபோவது என்று திகைத்தார். ஏனென்றால், அலகாபாத்தில் உள்ள பூர்வீக வீடான "ஆனந்த பவனம்" கூட ஏற்கனவே நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டு விட்டது.

நல்லவேளையாக, இந்திரா காந்தியின் நீண்ட கால குடும்ப நண்பர் முகமது யூனுஸ், வெல்லிங்டன் கிரசண்ட் ரோட்டில் உள்ள தன் வீட்டை உடனடியாக காலி செய்து இந்திராவுக்குத் தர முன்வந்தார். இந்த வீட்டில்தான் மூன்று ஆண்டுகளுக்கு முன் சஞ்சய் _ மேனகா திருமணம் நடந்தது. இந்திரா காந்தியின் உதவியாளர்கள் எல்லாம் வெளியேறிவிட்டனர். தனி செயலாளர் ஆர்.கே.தவான் மட்டும் "உங்களிடம் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கிறேன்" என்று விசுவாசத்துடன் கூறினார்.

இந்திரா காந்தி உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை இருந்ததால் அவருக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அந்த பாதுகாப்பை குறைக்கும்படி மொரார்ஜி கட்டளையிட்டார். "இந்திரா இப்போது சாதாரண பிரஜைதான். அவருக்கு குறைந்த அளவு பாதுகாப்பு போதும்" என்று கூறினார். "நெருக்கடி நிலை"யின்போது நடந்த அத்துமீறல்கள் பற்றி விசாரணை நடத்த, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஜே.சி.ஷா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்திரா காந்தியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று உள்துறை மந்திரி சரண்சிங்கும் சுகாதார மந்திரி ராஜ்நாராயணனும் துடித்தனர். "அவசரப்படாதீர்கள். நிதானமாகச் செயல்படுங்கள்" என்று மொரார்ஜி தேசாய் கூறினார். சட்ட மந்திரி சாந்தி பூஷனும் பிரதமரின் கருத்தை ஆதரித்தார். ஆயினும் இந்திரா காந்தியைக் கைது செய்வதில் சரண்சிங் உறுதியாக இருந்தார்.

அக்டோபர் 2_ந்தேதி அவர் சி.பி.ஐ. டைரக்டரை அழைத்தார். "இந்திராவைக் கைது செய்யத் தயாராகுங்கள்" என்று கட்டளையிட்டார். இந்திரா காந்தியை எந்த முறையில் கைது செய்வது? அவரை எப்படி நடத்துவது? என்று சி.பி.ஐ. டைரக்டர் கேட்டார். "இந்திரா காந்தி இப்போது சாதாரண பிரஜை. எனவே சாதாரண பிரஜை மாதிரியே அவரை நடத்தவேண்டும்" என்றார் சரண்சிங்.

3_ந்தேதி மாலை இந்திரா காந்தியின் வீட்டுக்கு சி.பி.ஐ. போலீசார் சென்றார்கள். "உங்களைக் கைது செய்ய வந்திருக்கிறோம்" என்றார்கள். "அப்படியா? தாராளமாக கைது செய்யுங்கள். கை விலங்கு மாட்டி அழைத்துச் செல்வதாக இருந்தாலும் சரி" என்றார் இந்திரா காந்தி. ஆனால் கை விலங்கு போடாமல் அவரை போலீசார் அழைத்துச்சென்றார்கள். மறுநாள் இந்திரா காந்தி கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். அவர் உட்காருவதற்கு நாற்காலி கொண்டு வரப்பட்டது. ஆனால் "நாற்காலி வேண்டாம்" என்று இந்திரா கூறிவிட்டார்.

அரசாங்க வக்கீல் தமது வாதத்தில் கூறியதாவது:-

"தேர்தல் பிரசாரத்திற்கு பல வர்த்தக நிறுவனங்களிடமிருந்து பெற்ற ஜீப்களை இந்திராவும் அவர் மகன் சஞ்சய்காந்தியும் பயன்படுத்தினார்கள். பம்பாயில் பெட்ரோல் கிணறுகள் தோண்ட பிரெஞ்சு நிறுவனம் ஒன்றுடன் இந்திரா காந்தி ஒப்பந்தம் செய்தார். இதனால் அரசாங்கத்துக்கு ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இவ்வாறு அரசு வக்கீல் கூறினார்.

இந்திரா காந்தி சார்பில் ஆஜரான பிராங்க் அந்தோணி இதற்கு பதிலளித்து கூறியதாவது:-

"இந்திராகாந்தி செய்த ஒப்பந்தத்தினால் ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது வாதத்துக்காக அதை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், அந்த 11 கோடியை இந்திரா தன் வீட்டுக்கா எடுத்துச் சென்று விட்டார்? தற்போதைய அரசாங்கம் எடுத்த ஒரு முடிவினால் (மதுவிலக்கு) அரசாங்கத்துக்கு பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதே, அதற்காக தற்போதைய பிரதமரைக் குற்றவாளி என்று கூறலாமா? இவ்வாறு பிராங்க் அந்தோணி கேட்டார். முடிவில் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி அன்றைய தினமே இந்திரா காந்தியை நீதிபதி விடுதலை செய்தார். ஒரே நாளில் விடுதலை ஆவோம் என்று இந்திரா காந்தியே நினைக்கவில்லை.
தஞ்சாவூரில் போட்டியிட விரும்பிய இந்திரா....விரைவில்

முந்தைய பாகங்கள்
பாகம்-1 , 2 , 3, 4, 5

நண்பர்களே.....சில பத்திரிகைகளில் நான் படித்ததை தொகுத்து, இடையிடையே நான் கேள்விப்பட்ட விஷயங்களையும் சேர்த்து இந்த கட்டுரையை உங்களோடு பகிர்ந்து வருகிறேன்.நான் படித்த ஒரு விஷயம் இந்த தலைமுறையினர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த சிறு முயற்சியை  எடுத்துள்ளேன்.  தயவுசெய்து காப்பிரைட் பிரச்சினையை எழுப்பவேண்டாம்.
நிறைய நண்பர்கள் இந்த கட்டுரையை நான் எழுதுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.இது என் எழுத்து நடையே அல்ல....இந்த கட்டுரைக்கு நான் ஒரு தொகுப்பாளர் மட்டுமே.... 



Post Comment

இதையும் படிக்கலாமே:


4 கருத்துகள்:

  1. நண்பர்களே.....சில பத்திரிகைகளில் நான் படித்ததை தொகுத்து, இடையிடையே நான் கேள்விப்பட்ட விஷயங்களையும் சேர்த்து இந்த கட்டுரையை எழுதி உங்களோடு பகிர்ந்து வருகிறேன்.நான் படித்த ஒரு விஷயம் இந்த தலைமுறையினர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த சிறு முயற்சியை எடுத்துள்ளேன். தயவுசெய்து காப்பிரைட் பிரச்சினையை எழுப்பவேண்டாம்.


    .... :-))

    பதிலளிநீக்கு
  2. வழக்கம் போல இம்முறையும் அருமை!

    பதிலளிநீக்கு
  3. படித்துவிட்டேன் வழக்கம் போல் அருமையான தொகுப்பு

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.