என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

ஞாயிறு, டிசம்பர் 19, 2010

21 நான் அப்பாவானால்-சிறுகதை


ன்று ஞாயிற்றுக்கிழமை. காலையில் பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தவனை என்னுடைய எட்டு வயது மகனின் குரல் கலைத்தது.

"அப்பா... அப்பா..."

"என்ன வினோத். ஏன் இப்படி காலையில தொந்தரவு செய்றே? கொஞ்சம் பேப்பர் பார்க்கவிடேன்" என்று சொல்லிவிட்டு மகனின் முகத்தை பார்த்தேன். பாவம் வாடிப்போய் இருந்தது.

"சரி சரி சொல்லு."

"இல்லப்பா நம்ம இன்னைக்கு தாத்தாவ பாக்கப் போவமா?"

"தாத்தாவையா? இன்னைக்கு அப்பாவுக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அடுத்த வாரம் போவமே?"

"போங்கப்பா, போனவாரமும் இப்படித்தான் சொன்னீங்க. இன்னைக்கு போவோம். ப்ளீஸ்ப்பா"

இவன் இப்ப என்னை பேப்பர் படிக்க விடமாட்டான் என்று நினைத்து 'சரி' என்று தலையாட்டி வைத்தேன்.

அவன் என்னை அழைத்துப்போக சொல்வது முதியோர் இல்லத்தில் இருக்கும் என் அப்பாவிடம்.
என்னுடைய அம்மா இறந்ததற்கு பிறகு அப்பாவுக்கும் என் மனைவிக்கும் அவ்வளவாக ஒத்துப்போகவில்லை. எதற்கெடுத்தாலும் சண்டை. நானும் என் மனைவியும் கலந்து பேசி, அப்பாவை அருகிலிருக்கும் முதியோர் இல்லத்தில்
சேர்ப்பதென்று முடிவு செய்து, அதை அவரிடம் பக்குவமாக பேசி சம்மதம் வாங்கினேன்.
ஆரம்பத்தில் மறுத்தவர், பிறகு என்ன நினைத்தாரோ சரியென்று சொல்லிவிட்டார். அது ஆச்சு மூன்று வருடம். எப்போதாவது அவரைப் போய் பார்ப்பதோடு சரி. என் மகன் வினோத் என்றால் அவருக்கு உயிர். அவனுக்கும் தாத்தா என்றால் அவ்வளவு பாசம். இரண்டு மாதத்துக்கு முன் அவனது பிறந்தநாளுக்கு அவரிடம் ஆசி வாங்க அழைத்துப்போனேன்.

"என்னங்க யோசனை சீக்கிரம் குளிச்சுட்டு சாப்பிட வாங்க" என்ற என் மனைவியின் குரல் என் ப்ளாஷ் பேக்கை கலைத்தது.

குளித்து முடித்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தவனிடம் மீண்டும் நினைவுபடுத்தினான், வினோத்.

"அப்பா எப்ப போவோம்?"

"அதான் கூட்டிட்டு போகச் சொல்றானே கூட்டிட்டு போக வேண்டியதுதானே?"- என் மனைவியின் சிபாரிசு வேறு.

'எல்லாம் உன்னாலதாண்டி' என்று சொல்லநினைத்தேன். ஆனால் நான்
சாப்பிட்டுக்கொண்டிருந்த தோசையுடன் நான் சொல்ல நினைத்த வார்த்தையும் வயிற்றுக்குள் போனதே தவிர, பின்னர் வெளியே வரவேயில்லை.

"நீயும் வரியா?"

"நான் வரலே. எனக்கு வீட்டுல நிறைய வேலையிருக்கு."

நான் எதிர்பார்த்த பதில்தான். இந்த மூன்று வருடத்தில் நாலு தடவை மட்டும்தான் அவள் அப்பாவை பார்க்க வந்திருக்கிறாள்.
அவள் வர மறுப்பதற்கு காரணம் குற்ற உணர்ச்சியாக இருக்குமென்று நினைக்கிறேன்.

ஒருவழியாக நானும் வினோத்தும் ஒரு ஆட்டோ பிடித்து அங்கு போனோம். வினோத்தை பார்த்தும் என் அப்பாவின் முகத்தில் அவ்வளவு சந்தோசம்.

"அப்பா எப்படி இருக்கீங்க?"

"எதோ இருக்கேன்ப்பா" என்றவர் வினோத்தை கொஞ்சுவதிலேயே குறியாக இருந்தார்.

"வினோத் நல்லா படிக்கிறியா?. அப்பா அம்மாவுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்கணும். சரியா?"

"சரி தாத்தா"

கொஞ்ச நேரம் இருவரும் ஏதோதோ பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அந்த இல்லத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்துக்கு பின் என் அப்பாவிடம் திரும்பிப்போனேன்.

"வசதிலாம்  ஓகேவாப்பா?"

"ஒரு பிரச்னையும் இல்ல. என்ன ராத்திரியானா கொசுதான் ஓவரா கடிக்குது."
சரிப்பா அடுத்த தடவை வரும்போது கொசுவர்த்தி வாங்கிட்டு வாரேன். இப்ப கிளம்பறேன்ப்பா. எனக்கு வெளில வேலை இருக்கு."

"சரி பார்த்து போ. எதுல வந்தே? உன் பைக்லையா?"

"இல்லப்பா. கடுமையான வெயிலா இருக்குன்னு ஆட்டோல வந்தோம்."
"சரி கிளம்பு. வினோத் தாத்தாவுக்கு டாட்டா சொல்லு."

பிரிய மனமில்லாமல் வினோத்தை வழியனுப்பினார் அப்பா.

"அப்பா தாத்தாவும் நம்ம கூட வரட்டும்பா. நம்மட்ட வீடு இருக்கு, கார் இருக்கு, ஏ.சி.லாம் இருக்கு. அப்புறம் ஏம்ப்பா தாத்தா இங்கேருந்து கஷ்டப்படணும்?"

என் மகனின் திடீர் கேள்வியால் நான் தடுமாறிப்போனேன். இருந்தாலும் சமாளிப்பதற்க்காக சொல்லிவைத்தேன்.

"இல்ல வினோத். அப்பாவுக்கு கல்யாணம் ஆச்சுல்ல?"

"யார் அப்பவுக்குப்பா"

"உன் அப்பாவுக்குத்தான் வினோத். எனக்கும் உன் அம்மாவுக்கும் கல்யாணம் ஆகி நீ பொறந்தியா? அதான் நமக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாதுன்னு தாத்தா இங்கே வந்துட்டார். சரியா?"

"சரிப்பா. அப்படின்னா, எனக்கும் கல்யாணம் ஆகி, என்னை மாதிரி ஒரு புள்ளை பொறந்தா நீங்களும் இங்கேதானப்பா வருவீங்க?"

அந்தக்கேள்வி என்னை செருப்பால் அடித்ததுபோல் இருந்தது.


Post Comment

இதையும் படிக்கலாமே:


21 கருத்துகள்:

  1. பதிவு அருமை.
    இது இன்றைய காலகட்டத்தில் சாதரணமாக நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. வெட்கப்படவேண்டிய விஷயம்.

    பதிலளிநீக்கு
  2. ! மீள்பதிவு என்றாலும் நல்ல பதிவு!

    பதிலளிநீக்கு
  3. மாங்கு மாங்குன்னு என்னத்த எழுதினாலும் ஓட்டுதான் போட மாட்டேங்குறீங்க...காசா பணமா ஒரு கருத்தையாவது சொல்லிட்டு போங்களேன்.//

    [ma]ரெண்டும் ஓவர்![/ma]

    பதிலளிநீக்கு
  4. நல்லாயிருக்குங்க சிறுகதை..

    தமிழ்மணம் டாப் 20 பிளாக்கர்ஸ்ல நீங்களும் இடம் பெற்றிருப்பதற்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  5. ரெண்டு ஓட்டும் போட்டாச்சு..
    ;-)

    பதிலளிநீக்கு
  6. கதையின் இறுதி டச் சூப்பர்..........

    பதிலளிநீக்கு
  7. 'சுரீர்' என்று இருக்கின்றது, கதையும் முடிவும்.

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் பிரபலம் தான். இன்னும் எத்தனை மீள்பதிவுகள் பாக்கி இருக்குங்க...

    பதிலளிநீக்கு
  9. தமிழ்மணம் டாப் 20 பிளாக்கர்ஸ்ல நீங்களும் இடம் பெற்றிருப்பதற்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  10. நல்ல கதை. உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் நல்லது.

    பதிலளிநீக்கு
  11. கதை அருமை சகோஇம்முறை தமிழ்மணத்தில் 6 ஆம் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள் முதலில்! நல்ல கதை!

    பதிலளிநீக்கு
  13. உங்கள் சிறுகதை படித்தேன். மனதை நெருடுகிறது மற்றும் முடிந்தால் இந்த விஷயத்தை சிலபேருக்காவது கொண்டு சேர்க்க முடியுமா?>>>>>

    http://vikkiulagam.blogspot.com/2010/11/blog-post_4783.html

    பதிலளிநீக்கு
  14. ம்ம்ம்... கதை நெகிழ்ச்சியா இருந்தது...

    நம்மகிட்டயும் இந்த மாதிரி வந்த புதுசுல எழுதின சரக்கு கொஞ்சம் இருக்கு...

    பதிலளிநீக்கு
  15. கதை நல்லாருக்கு .குமுதம் க்கு அனுப்புங்க வாழ்த்துக்கள் தமிழ்மணம் டாப் ௨௦ இல் தொடர்ந்து இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா11 ஜன., 2011, 5:24:00 PM

    //நான் என்னவோ...எம்.பி-யாகி, மத்திய மந்திரியாகி ஒரு லட்சம் கோடி, இரண்டு லட்சம் கோடி என்று கொள்ளையடிக்கப்போவதில்லை என்று இதன் மூலம் உறுதியளிக்கிறேன்!///

    //வரும் சட்டமன்ற தேர்தலில், நீங்கள் தைரியமாக வாக்களிக்கலாம். என்ன....நீங்கள் வாக்களித்தால், நற்பணிகள், நல்ல திட்டங்களை தீட்டி, தமிழ் நாட்டு மக்களின் மனதை கொள்ளையடிக்கலாம் என்ற நப்பாசைதான்!
    வாழ்த்துக்கள்!//
    அடுத்த சட்டமன்ற தேர்தலில் உங்கள் தொகுதியின் வேட்பாளனாக நிற்க, வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா11 ஜன., 2011, 5:34:00 PM

    Dear All,
    Pray God, in future, this story hasn't a real one in our Family.
    Keep & Save our Parents and culture!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.