என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், டிசம்பர் 01, 2010

11 அதென்ன மிசா அல்லது எமெர்ஜென்சி பாகம்-7


என்னை வலைச்சரத்தில்
அறிமுகப்படுத்தி பெருவாரியான
வலைஞர்களிடம்(வலைப்பூ நண்பர்கள்)
அறிமுகம் செய்த நண்பர்

"சூரியனின் வலை வாசல்"
அருண் பிரசாத்
அவர்களுக்கு நன்றி



விடுதலை செய்யப்பட்ட இந்திரா காந்தி உற்சாகம் அடைந்தார். ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி பீகார் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஜனதா கட்சியை உருவாக்கிய ஜெயப்பிரகாசர் உடல் நிலை மோசம் அடைந்து, பீகார் தலைநகரான பாட்னாவில் படுத்த படுக்கையில் இருந்தார். அவரை இந்திரா காந்தி போய் பார்த்தார். இந்த சந்திப்பு உருக்கமானதாக இருந்தது. இருவரும் 50 நிமிடம் பேசிக்கொண்டிருந்தனர். ஜனதா கட்சி ஆக்கபூர்வமாக செயல்படாமல், இந்திராகாந்தியை பழிவாங்குவதிலேயே குறியாக இருந்தது ஜெயப்பிரகாசருக்குப் பிடிக்கவில்லை.

இந்திராவை கைது செய்தது அவருக்கு மன வேதனையை அளித்தது. சுதந்திரப் போராட்டத்தின்போது நேருவும், ஜெயப்பிரகாசரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். நேருவின் மனைவி கமலாவும், ஜெயப்பிரகாசரின் மனைவியும் உயிர்த்தோழிகள். இந்திரா காந்தி சிறு குழந்தையாக இருந்தபோது ஜெயப்பிரகாசர் செல்லமாகத் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சுவார். நெருக்கடி நிலைப்பிரகடனத்தையும் தலைவர்கள் கைது செய்யப்பட்டதையும் அவர் எதிர்த்தார். என்றாலும், இந்திரா காந்தி நல்லவர், திறமைசாலி என்பதில் எவ்வித கருத்து வேற்றுமையும் இல்லை. நெருக்கடி நிலையின்போது ஏற்பட்ட சம்பவங்களுக்காக, ஜெயப்பிரகாசரிடம் இந்திரா மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

"இந்து! அதையெல்லாம் மறந்து விட்டேன்! மன்னித்து விட்டேன்" என்றார் ஜெயப்பிரகாசர். இருவர் கண்களிலும் நீர் துளிர்த்தது. இந்திரா காந்தி விடைபெறும்போது, ஜெயப்பிரகாசரின் காலைத் தொட்டு வணங்கி, "நீங்கள் விரைவில் பூரண குணம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்" என்றார். ஜெயப்பிரகாசர் இந்திராவின் கைகளைப் பிடித்துக்கொண்டு, "நான் இன்னும் கொஞ்ச நாட்கள்தான் வாழ்வேன். நீ பல்லாண்டு வாழ்ந்து நாட்டுக்குப் பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்றார்.

 ஜெயப்பிரகாசரின் வாழ்த்தைப் பெற்ற இந்திரா காந்தி, புதிய உற்சாகத்தையும், புதிய தெம்பையும் பெற்றார். பின்னர் பூமிதான இயக்க தலைவர் வினோபாவையும் இந்திரா காந்தி சந்தித்தார். "நெருக்கடி நிலை"யின் போது, அவருடைய ஆசிரமம் சோதனை போடப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டார். இந்திரா காந்தி பல்வேறு பகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்தார். நெருக்கடி நிலையின்போது நடந்த தவறுகளுக்கு பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

இதனால் பொதுமக்களிடம் இந்திரா காந்தியின் செல்வாக்கு மெல்ல மெல்ல வளர ஆரம்பித்தது. இந்திரா காந்தி பாராளுமன்றத்தில் இடம் பெறுவது நல்லது என்று காங்கிரஸ் தலைவர்கள் விரும்பினார்கள். அவர் போட்டியிடுவதற்கு வசதியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூர் தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் டி.பி.சந்திர கவுண்டர் தன் "எம்.பி" பதவியை ராஜினாமா செய்தார். அதனால் அங்கு 1978 நவம்பரில் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தொகுதி, "காங்கிரஸ் கோட்டை" என்று புகழ் பெற்றதாகும். 50 சதவீதத்துக்கு மேல் பெண் வாக்காளரைக் கொண்ட தொகுதி. அங்கு போட்டியிட இந்திரா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து, முன்னாள் முதல்_மந்திரி வீரேந்திர பட்டில் போட்டியிட்டார்.

இந்திரா காந்தியை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்று ஜனதா தலைவர்கள் விரும்பினார்கள். வீரேந்திரபட்டீல் சார்பாக தேர்தல் வேலைகளை கவனிக்க மத்திய தொழில் மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் அனுப்பி வைக்கப்பட்டார். போட்டி கடுமையாக இருந்தது., எனினும் சுமார் 70,000 ஓட்டு வித்தியாசத்தில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்ற இந்திரா காந்தி 1978 நவம்பர் 12_ந்தேதி லண்டன் சென்றார். அவருடைய பாஸ்போர்ட்டை ஜனதா அரசு முடக்கி வைத்திருந்தபோதிலும், லண்டனுக்கு மட்டும் போய்வரக்கூடிய குறுகிய கால பாஸ்போர்ட்டை வழங்கியது. லண்டன் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

டிசம்பர் மாதத்தில் இந்திரா டெல்லி திரும்பினார். ஆனால் அவரை "எம்.பி"யாக பதவி ஏற்கவிடாமல் தடுக்க ஜனதா அரசாங்கம் குறுக்கு வழியைக் கையாண்டது. முன்பு இந்திரா காந்தியிடம் விசாரணை நடத்தச்சென்ற அதிகாரிகளை கடமையை செய்ய விடாமல் இந்திரா தடுத்தார் என்று ஒரு குற்றச்சாட்டு இருந்தது. அதுபற்றி விசாரணை நடத்திய குழு பாராளுமன்ற உரிமை மீறல் குற்றத்தை இந்திரா செய்திருப்பதாக தீர்ப்புக் கூறியிருந்தது.

இதைப் பயன்படுத்திக்கொண்டு இந்திரா காந்தியின் எம்.பி. பதவியை ரத்து செய்வது என்றும் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை அவரை சிறையில் அடைப்பதென்றும் ஜனதா கட்சி முடிவு செய்தது. இதற்கான தீர்மானத்தை டிசம்பர் 19_ந்தேதி பாராளுமன்றத்தில் பிரதமர் தேசாய் கொண்டு வந்தார். தீர்மானத்துக்கு ஆதரவாக 279 பேரும், எதிராக 138 பேரும் ஓட்டுப்போட்டனர். தீர்மானம் நிறைவேறியதைத் தொடர்ந்து இந்திரா சிறையில் அடைக்கப்பட்டார். திகார் சிறையில் ஒரு வாரம் காவலில் வைக்கப்பட்ட பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

இந்த சமயத்தில் தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தார். தஞ்சை பாராளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. உறுப்பினரான எஸ்.டி.சோமசுந்தரம் அமைச்சராகப் பதவி ஏற்றதால் தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. ஆதரவுடன் அங்கு இந்திரா காந்தி போட்டியிட விரும்பினார்.

இதற்கு எம்.ஜி.ஆர். சம்மதித்தார். ஆனால் இந்திரா காந்தி பாராளுமன்ற உறுப்பினர் ஆவதை மொரார்ஜி தேசாய் விரும்பவில்லை. உடனே அவர் எம்.ஜி.ஆருடன் தொடர்பு கொண்டு, "இந்திரா காந்தியை ஆதரிக்காதீர்கள்" என்று கூறினார். இதனால் எம்.ஜி.ஆருக்கு தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டது. "பிரதமரே வேண்டாம் என்று கூறுவதை எப்படி செய்வது?" என்று யோசித்தார். பின்னர், "தஞ்சை தொகுதியில் இந்திரா காந்தி போட்டியிட்டால் அவருக்குப் போதிய பாதுகாப்பு கொடுப்பது இயலாத காரியம்" என்று அறிக்கை வெளியிட்டார். இதனால் தஞ்சையில் போட்டியிடும் திட்டத்தை இந்திரா கைவிடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அடுத்து என்ன செய்யலாம் என்று இந்திரா யோசித்துக்கொண்டிருந்தபோது அவரே எதிர்பாராத அரசியல் திருப்பம் டெல்லியில் ஏற்பட்டது.
விரைவில்
முந்தைய பாகங்கள்
பாகம்-1 , 2 , 3, 4, 5,6

நண்பர்களே.....சில பத்திரிகைகளில் நான் படித்ததை தொகுத்து, இடையிடையே நான் கேள்விப்பட்ட விஷயங்களையும் சேர்த்து இந்த கட்டுரையை உங்களோடு பகிர்ந்து வருகிறேன்.நான் படித்த ஒரு விஷயம் இந்த தலைமுறையினர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த சிறு முயற்சியை  எடுத்துள்ளேன்.  தயவுசெய்து காப்பிரைட் பிரச்சினையை எழுப்பவேண்டாம். 
நிறைய நண்பர்கள் இந்த கட்டுரையை நான் எழுதுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.இது என் எழுத்து நடையே அல்ல....இந்த கட்டுரைக்கு நான் ஒரு தொகுப்பாளர் மட்டுமே....

Post Comment

இதையும் படிக்கலாமே:


11 கருத்துகள்:

  1. Very interesting Sir, i am following ur blog after reading MISA series,

    பதிலளிநீக்கு
  2. அட இவ்வளவு நடந்து இருக்குதா? இந்திரா தஞ்சாவூர்ல போட்டி இட்டிருந்தா தமிழ்நாட்டின் தலையெழுத்து மறி இருக்கும் போல.... தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. //அதென்ன மிசா அல்லது எமெர்ஜென்சி பாகம்-7//

    இந்த தலைப்புக்கு கீழ் அருண் பிரசாத் புகைப்படத்தை பார்த்தவுடன் ....................... :)

    பதிலளிநீக்கு
  4. நல்ல சூடாகப் போகிறது.. ரசிக்க கூடிய விதத்தில் எழுதுறிங்க நன்றி சகோதரம்...

    இன்று தங்களின் அழைப்பை ஏற்று பதிவையிடுகிறேன் சகோதரா... என்ன மற்றவரை விட கொஞ்சம் வித்தியாசமா எழுதியிருக்கிறேன்... அவ்வளவு தான்..

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா1 டிச., 2010, 7:16:00 PM

    சூப்பர் மேட்டர் நல்லாருக்கு தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  6. ம்ம்ம்... வேகமாக வளர்ந்து வருகிறீர்கள்... கொஞ்சம் புகைச்சலாகத்தான் இருக்கிறது... இருப்பினும் வாழ்த்துக்கள்... கூடிய விரைவில் வலைச்சரத்தின் எழுதுவதற்கு அழைப்பு வரட்டும்...

    பதிலளிநீக்கு
  7. .நன்றாக உள்ளது, நண்பரே !

    .தற்போது தான், பகுதி 1 இல் இருந்து, இந்த பதிவு வரை படித்தேன் !

    பதிலளிநீக்கு
  8. அட நன்றிலாம் எதுக்குங்க. இது சகபதிவரின் கடமை

    பதிலளிநீக்கு
  9. அடுத்த பகுதி எப்போது வரும் என்று ஆவலுடன் எதிர்பார்கின்றேன்.

    ஷேக் அன்சாரி
    அல்கோபர்

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.