என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், அக்டோபர் 12, 2011

8 மன்னிப்பு கேட்கச்சொன்ன கலைஞரும்- மறுத்த எம்.ஜி.ஆரும்.......


முந்தைய பாகங்கள்

தீர்மானத்திற்கு பொதுக்குழுவில் ஆதரவு கிடைக்கவில்லையென்றால் மக்களை சந்தித்து இந்த கேள்வியை கேட்பேன். மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். கழக நிர்வாகிகள் தங்கள் கை சுத்தமானது என்று நிருபிக்க வேண்டும். நிருபிக்க முடியாதவர்களை மக்கள் முன் நிறுத்து தூக்கி எறிய வேண்டும். அண்ணாவின் கொள்கைக்கு ஊறு தேடியவர்களை தூக்கி எறிவோம் என்று ஆவேசத்துடன் பேசினார்....
உடனே பற்றிக்கொண்டது நெருப்பு.....



கட்சியை கேவலப்படுத்தும் விதமாக பேசிய எம்.ஜி.ஆர்.,மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. 1972- அக்டோபரில் தி.மு.க.,செயற்குழு உறுப்பினர்கள் மொத்தம் 31 பேரில், பேராசிரியர் க.அன்பழகன், என்.வி.நடராஜன், அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி, சாதிக் பாட்சா, சத்தியவாணி முத்து, ப.உ.சண்முகம், க.ராசாராம், மதுரை முத்து, ஏ.வி.பி.ஆசைத்தம்பி உள்ளிட்ட 26 பேர் எம்.ஜி.ஆருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சொல்லி மனு ஒன்றை தலைவர் கலைஞர், பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோருக்கு அனுப்பினர். அதே நேரம், நாஞ்சில் மனோகரன், முரசொலி மாறன் ஆகியோர் எம்.ஜி.ஆர்.,மீது நடவடிக்கை வேண்டாம் என்று வாதிட்டனர்.

ஆனாலும், அந்த 26 பேரின் கோரிக்கை மனுவை ஏற்றுக்கொண்ட கலைஞரும், நாவலரும் எம்.ஜி.ஆரை தற்காலிகமாக கழகத்திலிருந்து விலக்கிவைத்து அவரிடம் விளக்கம் கேட்கலாம் என்று முடிவுசெய்து ஓர் அறிக்கையும் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டது. அதில்.....
தலைமைக்கழக பொருளாளர் எம்.ஜி.ராமச்சந்திரன் கழக கட்டுப்பாடுகளை மீறியும், கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஆதலால், இன்றுமுதல் அவர் கழக பொருளாளர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் தற்காலிகமாக விலக்கி வைக்கப்படுகிறார் என்று கூறியிருந்தனர்.

பின்னர், செயற்குழு உறுப்பினர்கள் 26 பேர் தங்கள்மீது கூறிய குற்றச்சாட்டு அடிப்படையில் உங்களை ஏன் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கக்கூடாது?, இந்த கடிதம் கிடைத்த 15 நாட்களுக்குள் தாங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஒரு கடிதத்தை எம்.ஜி.ஆருக்கு அனுப்பினர். இதைத்தான் எதிர்பார்த்திருப்பார் போல எம்.ஜி.ஆர்.,

எனக்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று 26 செயற்குழு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பத்திரிகைகள் வாயிலாக அறிந்தேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆரம்பித்த இயக்கம் வெறும் 26 பேர்களோடும், சில அமைச்சர்களோடும் முடிந்து விடவில்லை. லட்சோபலட்சம் தொண்டர்களை கொண்டது. அந்த தொண்டர்களில் நானும் ஒருவன். தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும். மறுபடியும் தர்மம் வெல்லும், இதில் நான் வெற்றி பெறுவேன் என்று ஒரு அறிக்கையை விட்டார்.

அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆரின் ஆதரவாளர்கள் சென்னைக்கு திரண்டு வந்து தங்கள் ஆதரவை எம்.ஜி.அருக்கு தெரிவித்தனர். உடனே தி.மு.க., பொதுக்குழு,செயற்குழு  கூடியது.
அதில் பேசிய உறுப்பினர்கள் எம்.ஜி.ஆர்.,மீது நடவடிக்கை வேண்டும் என்று பேசினர். ஆனால், நாஞ்சிலாரும், முரசொலி மாறனும் எம்.ஜி.ஆர்.,பொதுக்கூட்டத்தில் அப்படி பேசியது தவறுதான். அதற்காக அவர் வருத்தம் தெரிவித்தால்...அவர் மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றனர். குறிப்பாக நாஞ்சிலார் தன் கருத்தை அழுத்தமாக வலியுறுத்தினார். கலைஞரும், நாவலரும் அந்த கருத்தை ஏற்றுக்கொண்டு எம்.ஜி.ஆர்.,அப்படி பேசியதற்காக வருத்தம் தெரிவித்தால் மறுபரிசீலனை செய்யலாம் என்று கூறினார்கள். எம்.ஜி.ஆரிடம் பேச்சுவார்த்தை நடத்த நாஞ்சிலாரும், மாறனும் நியமிக்கப்பட்டனர்.

அந்த நேரத்தில் பெரியாரும் சமாதான முயற்சியில் ஈடுபட்டார். எம்.ஜி.ஆர்., தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி பெரியாரை சந்தித்தார் எம்.ஜி.ஆர்., கட்சிக்கட்டுப்பாடு, ஆட்சி நலன் கருதி நீங்கள் சொன்னதை வாபஸ் வாங்கிக்கொண்டு, வருத்தம் தெரிவித்து விடுங்கள் என்று எம்.ஜி.ஆரை கேட்டுக்கொண்டார் பெரியார். நண்பர்களிடம் கலந்து பேசி ஆலோசித்துவிட்டு முடிவு செய்கிறேன் என்று கிளம்பினார் எம்.ஜி.ஆர்.

அன்றிரவே கலைஞரும், நாவலரும் பெரியாரை சந்தித்தனர். கட்சி ஒற்றுமை, ஆட்சி நலன் ஆகியவற்றை மனதில் வைத்து கட்சி பிளவு படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கலைஞரை எச்சரித்தார் பெரியார். தலையாட்டிவிட்டு கிளம்பினார் கலைஞர்.

இதன் பின் எம்.ஜி.ஆர்., ஒரு அறிக்கையை விட்டார். அதில்....தந்தை பெரியாரின் அழைப்பின் பேரில் அவரை சந்தித்தேன். வருத்தம் தெரிவிக்குமாறு அவர் யோசனை சொன்னார். நான் ஒன்றும் தவறாக பேசவில்லை. அப்புறம் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற ரீதியில் அது இருந்தது.

அதேநேரம், ஏற்கனவே எடுத்த முடிவின்படி... நாஞ்சிலாரும், மாறனும் எம்.ஜி.ஆரை சந்தித்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் ஒரு வழியாக தி.மு.க.,தலைமைக்கு ஒரு கடிதத்தை அல்லது ஒரு ஒப்பந்தத்தை எழுத  ஒத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர்., அந்த கடிதம் மதியத்திற்கு பின் எழுதுவதாக முடிவு செய்யப்பட்டது. மதியம் மீண்டும் வருவதாக நாஞ்சிலாரும் மாறனும் கிளம்பினார்கள். அதன் பின் எம்.ஜி.ஆரின் தொலைபேசி அடித்தது.. எம்.ஜி.ஆர்.. எடுத்தார். அதன் மறுமுனையில் சொல்லப்பட்ட செய்தியை கேட்டதும் எம்.ஜி.ஆர். முகம் சிவந்தார். அந்த செய்தி சமாதானத்தை முறிக்கும் அளவிற்கு அவரை கோபத்தில் தள்ளியது.

இன்னும் வ(ள)ரும்......



Post Comment

இதையும் படிக்கலாமே:


8 கருத்துகள்:

  1. வரலாற்றுத் தகவல்கள் கலக்கல்...

    பதிலளிநீக்கு
  2. மன்னிப்பு - சிவப்பு எம்ஜிஆருக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை...

    பதிலளிநீக்கு
  3. தலைவர் என்றால் அது எம்.ஜி.ஆர்தான். எனக்குத் தெரிந்த வரலாறை மீண்டும் உங்கள் வாயிலாகப் படிப்பது மிக சுவாரஸ்யமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. வரலாற்றுத் தகவல்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அருமையான புதிய தகவல்கள் ... நன்றி !

    பதிலளிநீக்கு
  6. ஏற்கனவே தெரிந்து இருந்தாலும் தகவல்கள் நீங்கள் தொகுத்த வகையில் சுவாரசியம்

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா12 அக்., 2011, 9:05:00 PM

    vaalnal muluvathum naan theadi alintha oru kala suvadu ungal mulam eanaku kidaithullathu mikavum nandri /ma

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.