என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், மார்ச் 07, 2013

15 போட்டோ கிராபர் (சுவாரஸ்ய மனிதர்கள்- 2)




எங்கள் ஊரில் ஒரு சுவாரஸ்யமான மனிதர் இருந்தார். நன்றாக படித்தவர். ஒரு போட்டோ ஸ்டூடியோவில் வேலை பார்த்தார். பேர் ஜப்பார். நாங்களெல்லாம் அவரை ஜேப்பி சார் என்று அழைப்போம்....

எப்போதாவது போட்டோ எடுக்க கேமராவை கழுத்தில் மாட்டிக்கொண்டு சைக்கிளில் போவார். வழியில் யாராவது சார் எங்கே கிளம்பிட்டீங்க கேமராவோடு என்று கேட்டால்.....
“ஒரு பெரிய சிங்கம் ஒண்ணு தண்ணிக்குள்ள மாட்டிக்கிச்சு. அதை பார்க்க சரியான கூட்டம் அதான் போட்டோ எடுக்க போறேன்னு எல்லோர் காதிலும் விழுமாறு பொய் சொல்லிவிட்டு போவார்.

அவர் பேச்சை உண்மையென நம்பும் சிலர் அவர் சொன்ன இடத்திற்கு போவார்கள். ஏமாற்றத்துடன் திரும்புவார்கள். ஆனால் இவரோ அந்த இடத்தை தாண்டி போயிருப்பார் ஏதாவது விழாக்களுக்கு போட்டோ எடுக்க...தினமும் யாராவது ஏமாந்து கொண்டே இருப்பார்கள்.

சார் இப்படி ஏமாத்துறீங்களே பாவம் இல்லையா என்று கேட்டால்...
நான் எமாற்றி என்ன சம்பாரிச்சிட்டேன். ஒரு ஸ்டூடியோவில் வேலை பார்ப்பவன் பல இடங்களுக்கு போவான். இவங்க ஏன் என்னை எங்கே போறீங்கனு கேட்கனும் என்பார்.

அவர் பெரும்பாலும், எங்கள் ஊர் மெடிக்கலில்தான் அமர்ந்திருப்பார். அப்படி ஒருதடவை அமர்ந்திருக்கும்போது, ஒரு ந(ண்)பர் தூக்க மாத்திரை வாங்க வந்தார். அவரிடம் இவர்....
தம்பி தூக்க மாத்திரையா போடப்போறீங்க....பார்த்து போடுங்க...ஒரு மாத்திரை போட்டால் தூக்கம் வரும். எல்லா மாத்திரையையும் போட்டால் தூக்க ஆள்தான் வரும் என்றார். அவ்வளவு நகைச்சுவை பேர்வழி. (2000-ஆம் ஆண்டில்) அவர் சொன்னதை அப்படியே இந்தியா டுடே பத்திரி்கைக்கு நான் எழுதிப்போட்டேன். அது பிரசுரம் ஆனது என் பெயரில் கூடவே 250 ரூபாய் சன்மானத்துடன். அதை பார்த்த ஜேப்பிசார்....அடப்பாவி நான் சொன்ன ஜோக்கை எழுதிப்போட்டு பணம் வாங்கிட்டியே என்றார். வந்த பணத்தில் பாதியை அவருக்கு கொடுத்தேன்.

ஞாயிற்று கிழமையானால், சலூனில் அமர்ந்து கொண்டு வாரமலரை எடுத்து குறுக்கெழுத்து போட்டி எழுதுவார். அதை அனுப்பவும் செய்வார். ஆனால், பரிசு வந்ததே கிடையாது. அதைப்போல.....வாரமலரில் பரிசு மழை என்று ஒரு போட்டி இருக்கும். நாம் நம்முடைய அட்ரசை ஒரு போஸ்ட் கார்டில் எழுதி அத்துடன் வாரமலரில் வெளியாகியிருக்கும் ஒரு கூப்பனை வெட்டி ட்டூ அட்ரஸ் பகுதியில் அட்ரசுக்கு பதிலாக அந்த கூப்பனை ஒட்டி அனுப்பினால் போதும். வாரந்தோறும் குலுக்கல் முறையில் 10 பேரை தேர்வு செய்து தலா ரூபாய் 50 வழங்குவார்கள்.

அதை இவர் தவற விடுவதே கிடையாது. ஒவ்வொரு வாரமும் அனுப்பிக்கொண்டே இருப்பார். பரிசுதான் கிடைத்த பாடில்லை. ஒரு முறை கடுப்பாகி விட்டார். என்னப்பா நானும் வாராவாரம் எழுதிப்போட்டுக்கே இருக்கேன். இவங்க என் பேரையே செலக்ட் செய்ய மாட்டேங்குறாங்கனு சொன்னவர் ஒரு போஸ்ட் கார்டை எடுத்தார்....
விறுவிறுவென இப்படி எழுதினார்
”அன்புள்ள வாரமலர் ஆசிரியருக்கு.....வணக்கம்.. நான் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக பரிசு மழை பகுதிக்கு எழுதிபோட்டு வருகிறேன். ஆனால், என் மீது பரிசு மழை பொழிவதே இல்லை. போஸ்ட் கார்டு வாங்கக்கூட காசில்லாமல்நான் மிகவும் கஸ்டப்படுகிறேன். ஆகவே என் மீது பரிசு மழை பொழியாவிட்டாலும் பரவாயில்லை. இந்த கடிதம் பார்த்ததும் எனக்கு உங்கள் சம்பளத்திலிருந்தாவது ரூபாய் 50 அனுப்பி வைக்கவும். நன்றி”

அதன்பின் அவர் எந்த போட்டியிலும் கலந்து கொள்ள வில்லை. இப்போது அவர் உயிரோடவும் இல்லை.
இன்ஷா அல்லாஹ் இப்படி சுவாரஸ்யமான பல கேரக்டருடன் அடிக்கடி சந்திக்கிறேன்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


15 கருத்துகள்:

  1. இன்னும் நம் நினைவில் நின்றவர்களை எழுது.அருமை

    பதிலளிநீக்கு
  2. சுவையான மனிதர்தான்! அருமையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரோடு பழகியவர்களுக்கு தெரியும். சுவாரஸ்யமான மனிதர் அவர். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. மனதில் நிற்கும் மனிதர்!

    பதிலளிநீக்கு
  4. அந்த இ.டுடேயை ஸ்கேன் பண்ணி போட்ருக்கலாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லேண்ணே அந்த காப்பி மிஸ் ஆகிடுச்சுண்ணே. இந்தியா டுடேயில் ரூபாய் 250 வீதம் ஆறு முறை வாங்கியிருக்கேன், என் படைப்புகளுக்காக. இப்ப இல்லே 1999- ஆம் ஆண்டு இறுதியில்.

      நீக்கு
  5. ரொம்ப வெவரமான ஆளுதான் போல?///போட்டோகிராபர் மனதில் நிற்கிறார்!(-ஒண்ணு எங்க,காணும்?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாகம் ஒண்ணுதான் ஏற்கனவே எழுதியாச்சே. எங்க ஊர் எம்.எல். ஏ. பற்றி. படிக்கலியா?

      நீக்கு
  6. அற்புதமான மனிதர்.. நம்மில் பலர் ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவர் அருமை பெருமைகளை உணர்வதில்லை.. தாங்கள் அந்த மகத்துவமான மனிதரைப் புரிந்துகொண்டதுடன் அழகாகப் பதியவும் செய்திருக்கிறீர்கள்..சிறப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் உயிரோடு இருக்கும்போதே அவரை பற்றி அறிந்தவன் நான். வருகைக்கு நன்றி.

      நீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.