அது 1991-ஆம் ஆண்டு. தீபாவளி கழித்து சில நாட்களில் என் நண்பனின் அக்கா திருமணம் எங்கள் ஊரில் நடைபெற்றது. மணமகன் திருச்சியை சேர்ந்தவர் என்பதால் அடுத்த நாள் திருமண வரவேற்பு திருச்சியில் நடைபெறுவதாகவும், பஸ் போகுது நீங்களும் வாங்க என்று அழைத்தான் மணமகள் தம்பியாகிய எங்கள் நண்பன். நாங்களும் வருவதாக சொன்னோம்.
அப்படி ஒத்துக்கொண்டதற்கு காரணம் அந்த ஆண்டில் தீபாவளிக்கு தளபதி, குணா போன்ற டஜன் படங்கள் வெளியாகியிருந்ததுதான். இந்த கல்யாண வரவேற்பை சாக்காக வைத்து எப்படியும் திருச்சியில் படம் பார்த்து விடலாம் என்று நினைத்தே சரி வருகிறோம் என்று சொன்னோம்.
சாதாரணமாக ஒரு படம் வெளிவந்த ஆறு மாதம் கழித்துதான் எங்கள் ஊருக்கு பக்கத்து ஊரான அறந்தாங்கிக்கு வரும். ஒரு படத்தை ரிலீஸ் ஆகி ஒரு வாரத்தில் பார்ப்பதெல்லாம் அப்போது நடக்காத காரியம் எங்களுக்கு. அப்படியே பார்க்கப்போகலாம் என்று நினைத்தாலும் கையில் காசிருக்காது. வீட்டிலும் விடமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இலவச பஸ், சாப்பாடு, ரிலீஸ் படம், அதுவும் திருச்சியில் என்றால் கேட்கவா வேண்டும். மனம் குதுகலத்தில் குதித்தது.
கமலஹாசன், ரஜினிகாந்திற்கு எங்களில் பலர் ரசிகர்களாக இருந்தாலும் ரசிகர் மன்றமெல்லாம் வைத்திருக்கவில்லை நாங்கள். எங்கள் நண்பர்களில் மெஜாரிட்டியாக ரஜினி ரசிகர்களாக இருந்தாலும் நானும் சில சொற்ப நண்பர்களும் கமல் ரசிகர்களாக இருந்தோம்.... சரி நாலைக்கு திருச்சி போகிறோம்....என்ன படம் பார்க்கலாம் என்று விவாதித்துக்கொண்டிருந்தோம்.
அநேக பேரின் முடிவு தளபதியாக இருந்தது. என் முடிவு உட்பட சிலரின் முடிவு குணாவாக இருந்தது. இல்லை இல்லை தளபதிதான் என்றார்கள் அவர்கள். முடியவே முடியாது குணாதான் என்றோம் நாங்கள். முடிவில்....முதலில் திருச்சிக்கு போய்விடுவோம்...அங்கே சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்வோம் என்று அப்போது அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தோம்.
அடுத்த நாள் காலை திருச்சிக்கு கிளம்பினோம். மதிய விருந்தை சீக்கிரமாக முடித்துவிட்டு வேகமாக தியேட்டருக்கு கிளம்பினோம். மாரீஸ் காம்ப்ளெக்சில் ஐந்து தியேட்டர்கள். அதில் குணா, பிரம்மா, தாலாட்டு கேட்குதம்மா போன்ற படங்களும், ரம்பா, ஊர்வசியில் தளபதியும் ஓடியது. மாரீஸ் தியேட்டர் வாசல் போனதும் யோசித்தோம். சரி நீங்கள் தளபதிக்கு போங்க, நாங்க குணாவுக்கு போறோம். படம் விட்டதும் ஓரிடத்தில் சேர்ந்து கொள்வோம். பிறகு ஊருக்கு போகலாம் என்று பேசிக்கொண்டோம். இருந்தாலும் மனதில் தைரியமில்லை. இப்பத்தான் புதிதாக திருச்சிக்கு வந்திருக்கோம். திருச்சி தியேட்டரில் படம் பார்ப்பதும் புதுசு.தனித்தனியா போவது சரியா இருக்காது. ஆகவே எல்லோரும் ஒன்றாகவே கிளம்பி மெஜாரிட்டி முடிவின்படி தளபதிக்கே போவோம் என்று ரம்பா, ஊர்வசி தியேட்டருக்கு போனோம். போனால் கடுமையான கூட்டம். நமக்கு இன்னைக்கு டிக்கெட் கிடைக்காது பேசாமல் குணாவுக்கே போயிருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால், திருச்சியில் அந்த படம் மூன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியிருந்ததால் அடித்து பிடித்து ரம்பாவில் டிக்கெட் கிடைத்தது.
தியேட்டரில் ரஜினி பேரை ஸ்க்ரீனில் போட்டதும் தியேட்டரே ஆர்ப்பரித்தது. அதைப்போல் ரஜினி அறிமுகம் ஆனதும் அது இரட்டடிப்பானது. ரஜினிகாந்த் மீது இளைஞர்களுக்கு இருந்த எழுச்சியும் எனக்கு விளங்கியது. ஆனாலும், நான் கமல் ரசிகனாகவே தொடர்ந்தேன்.
கொசுறு: தளபதி படம் வெளியான போது, திருச்சி ரசிகர்கள்களால் ஒரு போஸ்டர் அடிக்கப்பட்டிருந்து அது தியேட்டர் வாசலில் ஒட்டப்பட்டிருந்தது. அதில் நேற்று என்று போட்டு அதன் கீழ் கலைஞர் படமும் இன்று என்று போட்டு அதன் கீழ் ஜெயலலிதா படமும், நாளை என்று போட்டு அதன் கீழ் ரஜினிகாந்த் படமும் இடம் பெற்றிருந்ததை நான் பார்த்தேன். அந்த போஸ்டருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், அதையே சற்று மாற்றி நேற்றில் கலைஞர் படமும், நாளையில் ரஜினி படமும், இன்று என்ற இடத்தில் இருந்த ஜெயலலிதா படம் தூக்கப்பட்டு வெறும் கருப்பாக விடப்படிருந்ததாக அன்றைய நாளிடழ்கள் பின்னாளில் சொன்னது. எனக்கு தெரிந்து ரஜினி-ஜெயலலிதா மோதலுக்கு அந்த போஸ்டரே அச்சாரம் என்று கருதுகிறேன்.
Tweet |
நானும் ரம்பா தியேட்டரில் பல தடவை தளபதி படம் பார்த்தேன்... நான் சத்திரம் பஸ் ஸ்டான்ட் அருகில் இருந்த ஹாஸ்டலில் தான் தங்கி இருந்தேன்.. சென் ஜோசப்ஸ் ஸ்கூலில் இருந்தும் ரம்பா பக்கம்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பதிலளிநீக்குநீ தளபதி மட்டுமா பல தடவை பார்த்தே?
நீக்குஓ... நீங்க போய் தான் ரஜினி-ஜெ பிரச்சனையை ஆரம்பிச்சு வச்சீங்களா? :-)
பதிலளிநீக்குநான் போறதுக்கு முன்னாலேயே அந்த பிரச்சினை ஆரம்பிச்சிடுச்சு.
நீக்குநல்ல வேளை... குணா பார்த்திருந்தால் கடுப்பாகியிருப்பீர்கள்...
பதிலளிநீக்குஅந்தப்படத்துக்கு போயிருந்தோம்னா எல்லோரும் என்னை மொத்திருப்பாங்க. நான்தான் படம் பார்க்க காரணம்னு.
நீக்குகுணா படத்திக்கு என்ன கேடு ....என்னை பொருத்தவரை தலைவலியை(தளபதி) விட குணா மேல்.....
நீக்குசுவையான நினைவுகள்! பகிர்வுக்கு நன்றி! அந்த காலத்தில் எங்கள் பகுதியிலும் தளபதி படமும் பாடல்களும் மிகவும் பிரபலப் படுத்தப்பட்டன! நான் பிளஸ் டூ படித்த சமயம் அது
பதிலளிநீக்கு