என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, மார்ச் 22, 2013

18 பரதேசி-பாலா கவனிக்க மறந்த விஷயங்கள்




நாஞ்சில் நாடனின் இடலாக்குடி ராசாவும், டேனியலின் எரியும் பனிக்காடு நாவலும் (THE RED TEA) கலந்த கலவைதான் பரதேசி. ஆனால், இலக்கியவாதிகளை தவிர மற்ற சினிமா ரசிகர்கள் யாருக்கும் இடலாக்குடி ராசா பற்றியோ எரியும் பனிக்காடு பற்றியோ அக்கறையில்லை.  அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பாலா.பாலா. பாலா மட்டுமே.


கதையை பற்றியோ படத்தை பற்றியோ அலசப்போவதில்லை இந்த பதிவு. மாறாக, எல்லோராலும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படும் ஒரு உலக சினிமா பற்றியும், உலக சினிமா இயக்குநரின் கவனக்குறைவு பற்றியுமே அலசப்படும் பதிவுதான் இது.
ஒரு பீரியட் பிலிமை எடுக்கும் போது நடை உடை பாவணை என்று பார்த்து பார்த்து செதுக்க வேண்டும். அது கத்தி மேல் நடக்கும் வேலையை போன்றது. கொஞ்சம் பிசகினாலும் ஆபத்தில் முடிந்துவிடும் அபாயமிருக்கிறது.


இந்த படத்திலும் அப்படித்தான் சில விஷயங்களை கோட்டை விட்டுவிட்டார் பாலா என்பது போல் சில கவனக்குறைவுகள் உள்ளது.


முதலாவதாக, சூலூர் கிராமத்தில் இருக்கும் ஒட்டுப்பொறுக்கியின் பெரியப்பாவாக வரும் கவிஞர் விக்ரமாதித்யன் மரணம் அடைந்து விடுகிறார். திருமண நேரத்தில் அந்த மரணத்தை அபசகுனமாக நினைத்து அந்த பிணத்தை மறத்து விடுகிறார்கள் சிலர். அதேபோல் ் அந்த விஷயத்தை ஒட்டுப்பொறுக்கியிடம் மறைத்து விடுகிறார்கள் அவ்வூர் மக்கள். ஆனால் அதர்வா தேடிக்கொண்டே இருக்கிறார். அதன்பின் பசி வந்தால் பத்தும் பறந்து விடும் என்பதுபோல் அதர்வாவுக்கு பசி வந்ததும் பெரியப்பாவை மறந்து விட்டு சாப்பிட உட்கார்கிறார். ஆனால் ஊர் மக்கள் அவருக்கு சாப்பாடு போடாததால் அவமானம் தாங்காமல் எழுந்து போய்விடுவார். அதை கவனித்த வேதிகா அவருக்கு சாப்பாடு எடுத்துப்போய் ஊட்டி விடுவார். அதன் நீட்சியாக அவத்தப்பையா டூயட். முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பார்கள். ஆனால் ஒரு பிணத்தையே சோற்றில் மறைத்து விட்டார் பாலா. அதன் பின் அந்த பிணத்தை பற்றி யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. அதுவே எழுந்து போய் சுடுகாட்டில் படுத்துக்கொண்டதோ என்னவோ?


அடுத்ததாக, அந்த பிணத்தை ஏன் அதர்வாவிடம் மறைக்கிறார்கள் என்றால், திருமண நேரத்தில் ஊருக்கே தண்டோரா போட்டு சொல்லி விடுவார் என்ற பயத்தில்தான். ஆனால், அவர் இறந்த விஷயம் எல்லோருக்குமே தெரிந்து விடுகிறது. அப்புறமும் அவரிடம் மறைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?




அடுத்ததாக அந்த கல்யாணத்தில் பரிமாறப்படும் சாதம். பார்க்க தும்பைப்பூ மாதிரி இருக்கிறது.
கிராமத்தில் அப்போதெல்லாம் கைக்குத்தல் அரிசிதான். அரிசியை உரலிலிட்டு உலக்கையால் இரு பெண்கள் குத்தி அரிசியாக்குவார்கள். அந்த அரிசி பார்க்க பழுப்பு நிறத்தில் இருக்கும். மிகுந்த சத்துள்ள அரிசி அது. இப்போது போல் ரைஸ் மில்லெல்லாம் கிடையாது. அதுவும் சூலூர் போல் நாகரீகம் வளராத கிராமத்தில் இப்படி வெள்ளை வெளேரென்று அரிசி கிடைக்க வாய்ப்பே இல்லை.


அதைப்போல், ஒரு கிராமமே பஞ்சம் பிழைக்க ஒரு பொட்டல்காட்டின் வழியாக தேயிலை தோட்டத்திற்கு போகிறார்கள். அப்படி அந்த பொட்டல்காட்டில் போகும்போது சில இடங்களில் கருவேல மரங்கள் இருக்கிறது. கிராமத்தில் அதை வேலிக்கருவை, வேலிகாத்தான் மரம் என்பார்கள். இந்த மரம் தமிழ்நாட்டிற்குள் வந்த வரலாறு விசித்திரமானது.



சுதந்திர இந்தியாவில் காமராஜர் முதல்வராக இருந்த கால கட்டத்தில், ராமநாதபுர மாவட்டத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அந்த பஞ்சத்தை சமாளிக்க, தென் அமெரிக்கா, மெக்சிக்கோ போன்ற நாட்டிலிருந்து கருவேல மரத்தின் விதைகளை வாங்கி அதை விமானம் மூலம் தூவினார்கள்.  அந்த மரம் வளர்ந்து அதன் மூலம் கிடைக்கும் விறகுகளை வெட்டி மக்கள் பிழைத்துக்கொள்ளட்டும் என்று காமராஜர் செய்த ஏற்பாடு அது. ஆனால், சுதந்திரத்திற்கு முன் அந்த மரம் தமிழ்நாட்டில் இருந்ததாக வரலாறு இல்லை. அப்படிப்பட்ட மரம்தான் 1930-ஆம் ஆண்டு கால கட்டத்தை காண்பிக்கும் போது இருக்கிறது.

இன்னும் சில விஷயங்கள் இருக்கிறது. ஆனாலும் அதையெல்லாம் விட்டு விடுவோம்.
மற்றபடி, பாடல்களில் சோபித்த அளவிற்கு பின்னணி இசையில் சோபிக்கவில்லை ஜீவி.பி.
செழியனின் கேமரா அசத்தல். உடை, கலை என்று எதிலும் குறையில்லை. அதர்வா, அவர் பாட்டியாக வரும் கிழவி, தன்சிகா என்று எல்லோரும் நடித்திருக்கிறார்கள் என்பதை விட, வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே நிஜம். சில குறைகள் இருப்பினும் யாரும் சொல்ல துணியாத, சொல்ல மறந்த கதையை சொன்ன பாலா தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கே தற்கால பிதாமகன்தான். 




Post Comment

இதையும் படிக்கலாமே:


18 கருத்துகள்:

  1. // சுதந்திர இந்தியாவில் காமராஜர் முதல்வராக இருந்த கால கட்டத்தில், ராமநாதபுர மாவட்டத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அந்த பஞ்சத்தை சமாளிக்க, தென் அமெரிக்கா, மெக்சிக்கோ போன்ற நாட்டிலிருந்து கருவேல மரத்தின் விதைகளை வாங்கி அதை விமானம் மூலம் தூவினார்கள். அந்த மரம் வளர்ந்து அதன் மூலம் கிடைக்கும் விறகுகளை வெட்டி மக்கள் பிழைத்துக்கொள்ளட்டும் என்று காமராஜர் செய்த ஏற்பாடு அது. ஆனால், சுதந்திரத்திற்கு முன் அந்த மரம் தமிழ்நாட்டில் இருந்ததாக வரலாறு இல்லை. அப்படிப்பட்ட மரம்தான் 1930-ஆம் ஆண்டு கால கட்டத்தை காண்பிக்கும் போது இருக்கிறது. //

    இங்க நீ நிக்கிறடா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே நான் நிற்கறேன்னு சொல்றே...கருவேல மரத்திற்கு கீழேயா?

      நீக்கு
    2. காமராசரு வெதைய தூவும் போது கசாலி அண்ணா நின்னாராக்கும்... நீங்க பாத்தீயளாக்கும்... :-)

      நீக்கு
  2. வழக்கம் போல பாலாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பதிவாக இருக்கபோகிறது என்று தயக்கத்துடனே இங்கே வந்தேன். நல்லவேளை. இருப்பதை அதாவது படத்தில் இல்லாததை (லாஜிக்)எழுதி இருக்கிறீர்கள். பரதேசி அபத்தங்களின் உச்சம். கதை மாந்தர்களின் காலை வெட்டி அவர்களை கதற வைத்து ஒரு மலிவான புகழை அடைந்துவிட்டார் பாலா என்பதே உண்மை. கீழே ஒரு லிங்க் உள்ளது. படிக்கவும்
    http://cinema.arasan.info/2013/03/TamilParadesi2013.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க கொடுத்த லிங்கைப் பார்த்தேன். நல்லவேளையாக எனக்குப் பின் தான் அவர் பதிவு போட்டிருக்கார். அதுவும் என் பதிவை ஒட்டியே. இல்லாவிட்டால் நான் காப்பி அடித்தேன் என்று பேர் வந்திருக்கும்.

      நீக்கு
    2. @காரிகன் தங்களின் கருத்து அபத்தங்களின் உச்சம்... இவராவது எடுத்துக்காட்டு வைக்கிறார்... நீங்கள் எதோ நாமளும் சொல்லவேண்டும் என்பதற்காக துப்பி விட்டு போகிறீர்கள்!!

      நீக்கு
  3. //ஆனால் ஒரு பிணத்தையே சோற்றில் மறைத்து விட்டார் பாலா. அதன் பின் அந்த பிணத்தை பற்றி யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. அதுவே எழுந்து போய் சுடுகாட்டில் படுத்துக்கொண்டதோ என்னவோ?//

    அவர் இறந்துவிட்டார் என்பது நமக்கு தெரிந்தாகிவிட்டது... அதற்கு மேல் அடக்கம் செய்யும் காட்சியெல்லாம் நமக்கு எதற்கு? அந்த கதை ஓட்டத்திற்கு தேவையே இல்லாத ஒன்று அது!!

    //அடுத்ததாக, அந்த பிணத்தை ஏன் அதர்வாவிடம் மறைக்கிறார்கள் என்றால், திருமண நேரத்தில் ஊருக்கே தண்டோரா போட்டு சொல்லி விடுவார் என்ற பயத்தில்தான். ஆனால், அவர் இறந்த விஷயம் எல்லோருக்குமே தெரிந்து விடுகிறது. அப்புறமும் அவரிடம் மறைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?//

    எல்லோருக்கும் விஷயம் தெரிந்தாலும் கமுக்கமாக வைத்து கொண்டனர். ராசாவிற்க்கு தெரிந்தால் கத்தி கூப்பாடு போட்டு விடுவான், ஒப்பாரி வைப்பான், திருமணத்தை நடைபெற விடாமலும் செய்வான்... இதெல்லாம் அந்த கதாபாத்திரத்தின் குணாதிசியங்கள்.. அவன் ஒன்றும் தெரியாத அப்பிராணி என்று சொல்லியாயிற்று

    மற்றவையாவிலும் உடன்படுகிறேன்

    பதிலளிநீக்கு
  4. //அதுவே எழுந்து போய் சுடுகாட்டில் படுத்துக்கொண்டதோ என்னவோ?//

    என்ன நீங்க... இதுக்கு பேரு தான் ஒலக சினிமா.... அதுல கொஞ்சம் இதுல கொஞ்சம்ன்னு போடுறதுதானே சினிமா ட்ரென்ட்... பாலா அங்கே நிக்கிறாரு :-)


    // திருமண நேரத்தில் ஊருக்கே தண்டோரா போட்டு சொல்லி விடுவார் என்ற பயத்தில்தான். ஆனால், அவர் இறந்த விஷயம் எல்லோருக்குமே தெரிந்து விடுகிறது. அப்புறமும் அவரிடம் மறைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?//

    இப்படியெல்லாம் முட்டாள்தனமா எடுக்க பாலா ஒன்னும் சைக்கோ :-) இல்ல...
    காரணம் வறுமையில் வாடும் பல குடும்பங்கள் திருமணத்தின் போதுதான் நல்ல சாப்பாடு சாப்பிட முடியும்... இந்த மரணத்திற்காக சாப்பாட்டை விடக்கூடாது என்ற எண்ணம் தான் காரணம்.. இதான் உட்கருத்து! :-)

    //அடுத்ததாக அந்த கல்யாணத்தில் பரிமாறப்படும் சாதம். பார்க்க தும்பைப்பூ மாதிரி இருக்கிறது.//
    திருமணத்திலாவது வெள்ளரிசி விருந்து வைக்கும் பழக்கம் அந்த காலத்தில் இருந்திருக்கலாம்னு நெனைக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  5. கண்ணுக்குள் வெளக்கண்ணெய் ஊத்தி வச்சுட்டு பார்ப்பியோ .நல்ல அலசல் பா

    பதிலளிநீக்கு
  6. நண்பர் புகழேந்தி நான் கருத்து என்ற பெயரில் எதையோ துப்பி போயிருப்பதாக எழுதியுள்ளார், நல்லது. பாலாவின் படத்தை பற்றி பேசினாலே அவரின் ரசிகர்களுக்கு இப்படி எச்சில், வாந்தி போன்ற எண்ணங்கள் வருவது இயல்பானதே.இது அவரின் படத்தின் தாக்கம் என்று எடுத்துக்கொள்ளலாம். பரதேசி நேர்மையான படம் அல்ல. அபத்தங்கள் நிறைந்த தன் விருப்பத்திற்கு ஏதுவாக வரலாற்றை மடக்கி வெட்டி இன்ன பிற வேலைகள் செய்து வழக்கமாக கதாநாயகனை உச்ச ஸ்தானியில் கதற வைத்து இப்படி கொடுமை நடந்தது என்று பார்ப்பவர்களை கொடுமைப்படுத்தும் ஒரு மலிவான அழுகாச்சி படம். இதை உலக தரம் என்று மார் தட்டுவது மகா கேவலம். பாலாவை புறந்தள்ள வேண்டிய இடத்தில் தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள். இது நடக்காவிட்டால் பாலா யதார்த்தம் என்கிற போர்வையில் இன்னும் வீரியமாக விளிம்பு நிலை மனிதர்களை பற்றி நமக்கு போதிப்பார். இறுதியாக படம் முழுவதும் அபத்த களஞ்சியமாக இருப்பதால் எந்த காட்சியையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

      நீக்கு
    2. நண்பர் காரிகனுக்கு, இலக்கியவாதிகளும், வரலாற்று அபிமானிகளும் மட்டும் அறிந்த ஒரு கதையை (வரலாறை) பாலா எடுத்திருக்கிறார். பாலா போன்றோர் இப்படிப்பட்ட படங்களை எடுக்கவில்லை என்றால், இப்படிப்பட்டோர் வாழ்ந்ததும், தேயிலைக்கும் காப்பிக்கும் பின்னால், இப்படி உழைப்பாளர்களின் இரத்தம் இருப்பதும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று நினைக்கிறீர்கள். ஒரு படத்தைச் சாதாரணமாகத் தாழ்த்திப் பேசிவிடுவது மிகவும் லேசானது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு படத்தை யதார்த்தம் கலையாமல் சொல்வது என்பது ரஹீம் கஸாலி சொல்வது போல கத்தி மேல் நடப்பது போல. இதை மற்றவர்களை விடத் திறமையாகச் செய்பவர்தான் பாலா. ஆனால் இதில் சில குறைகளை மட்டும் விட்டிருக்கிறார். அதுவும் புறக்கணிக்கத்தக்கவையே. நமக்கு உலகத்தரமெல்லாம் வேண்டாம். தமிழ்த்தரத்தில் சிறந்ததாக இருக்கிறதா? அது போதும்

      என் பதிவியின் முடிவுரையையே இங்கே மறுமொழியாக விடுகிறேன்.

      //நிச்சயம் நாம் இப்படிப்பட்ட படங்களுக்கு அவர்களின் உழைப்புக்கேற்ற கூலியைக் கொடுக்கவிட்டாலும் (நாமும் கங்காணிகள்தானே) மதிப்பையாவது கொடுக்க வேண்டும்.(பரிசுத்தம் போலவாவது)// - http://cinema.arasan.info/2013/03/TamilParadesi2013.html

      E-News அவர்கள், படம், பரிசுத்தத்தைக் கிண்டல் செய்திருப்பதால் எரிச்சலடைந்திருக்கிறார். (இந்தக் கருத்து, அவர் என் வலைப்பூவில் இட்டிருக்கும் மறுமொழிகளை வைத்து ஏற்பட்டது). இம்மாதிரி கிண்டல்கள், இவர் போன்றவர்களுக்கு பாலாவின் மேல் எரிச்சலையும் அவநம்பிக்கையையும்தான் ஏற்படுத்தும். அதற்கு வரலாறுதான் பதில் சொல்ல வேண்டும்.

      நீக்கு
  7. உண்மையான குறைகள்! அதே போல் உடை விஷயத்திலும் கோட்டை விட்டிருக்கிறார் பாலா! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. ரஹீம் அவர்களுக்கு, இருநாட்களுக்கு முன்புதான் உங்கள் வலைப்பூவைப் பார்த்தேன். விமர்சனங்கள் அருமை. குறிப்பாகத் தீக்குளிப்பதற்குப் பெயர் தியாகமல்ல.

    மேலே தலைப்புப் பட்டையில் அரசர்குளத்தான் என்று இட்டிருக்கிறீர்கள். (அரசர் குலத்தான் என்றால் அரசர் குலத்தில் வந்தவன் என்று பொருள் படும். அரசர் குளத்தான் என்றால் அரசரின் குளத்தைச் (குளம், Pond) சேர்ந்தவன் என்று பொருள் படும்). அது சொற்பிழையாக இருந்தால் திருத்தலாமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லும் எந்த அர்த்தத்திலும் இந்த பெயர் வரவில்லை. அரசர்குளம் என்பது என் ஊரின் பெயர். அந்த ஊரை சேர்ந்தவன் என்பதால், அரசர்குளத்தான் என்ற பேர்.

      நீக்கு
  9. இயக்குனர் பாலா கவனிக்க மறந்தவை பற்றிய பதிவு ஒரு அருமையான அலசல். ஒரு சிறிய திருத்தம். Prosophis juliflora எனப்படும் நச்சுத் தாவரமான வேலிகாத்தான் வேறு, கருவேல மரம் (Acacia nilotica) வேறு. வேலிகாத்தான் 1950 களில் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது மய்ய அரசில் வேளாண்மை செயலராக இருந்த திரு சிவராமன் அவர்கள் தான் இந்த நச்சுமரத்தை இந்தியாவுக்கொண்டு ‘புண்ணியத்தைக்’ கட்டிக்கொண்டார்!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.